வெப்பநிலை உயர்வுக்கு மத்தியில் ஹஜ் யாத்திரை நிறைவுக்கு வந்தது
நூற்றுக்கணக்கானோர் மரணித்ததாக வெளியான செய்திகளை சவூதி உறுதிப்படுத்தவில்லை
(எம்.ஐ.அப்துல் நஸார்)
இவ்வருட ஹஜ் யாத்திரை கடுமையான வெப்பநிலை உயர்வுக்கு மத்தியில் நிறைவுக்கு வந்துள்ளது.
கடும் வெப்பநிலை காரணமாக குறைந்தது 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள போதிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை சவூதி அரேபிய அதிகாரிகள் நேற்று மாலை வரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
உயிரிழந்தவர்களுள் குறைந்தது 323 பேர் எகிப்தியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகியிருந்தனர் என்றும் தத்தமது நாடுகளை ஒருங்கிணைக்கும் இரண்டு அரபு நாடுகளின் தூதுவர்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
‘சிறு சன நெரிசல் காரணமாக ஆபத்தான காயங்களுக்கு ஆளான ஒருவரைத் தவிர, உயிரிழந்த எகிப்தியர்கள் அனைவரும் வெப்பம் காரணமாகவே இறந்தனர்’ எனவும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மக்காவின் அல்-முயிசம் சுற்றுப்புறத்தில் உள்ள வைத்தியசாலை பிரேத அறையிலிருந்து பெறப்பட்டதாகவும் இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
குறைந்தது 60 ஜோர்தான் நாட்டவர்கள் உயிரிழந்துள்ளர், இந்த எண்ணிக்கை முன்னர் உத்தியோகபூர்வமாக 41 பேர் என செவ்வாயன்று தலைநகர் அம்மனானிலிருந்து அந் நாடு அறிவித்திருந்தது.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல நாடுகளால் இதுவரை அறிவிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 577 ஆகக் காணப்படுகின்றன.
மக்காவில் உள்ள மிகப்பெரிய அல்-முயிசெமில் அமைந்துள்ள பிரேத அறையில் 550 உடல்கள் இருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கடந்த செவ்வாயன்று, ஹஜ்ஜின் போது காணாமல் போன எகிப்தியர்களைத் தேடும் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு எகிப்தின் வெளிவிவகார அமைச்சு, ஒத்துழைத்து வருவதாகக் எகிப்து தெரிவித்திருந்தது.
எகிப்தின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் ‘குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இறப்புகள்’ நிகழ்ந்ததாகக் கூறினாலும், அவர்களுள் எகிப்தியர்களும் இருக்கிறார்களா என்பதைக் குறிப்பிடவில்லை.
வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் சிகிச்சை அளித்துள்ளனர், ஆனால் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அந்த எண்ணிக்கையை புதுப்பிக்கவில்லை என்பதோடு உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை.
கடந்த வருடம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 240 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியர்களாவர்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட சவூதி ஆய்வின்படி, ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படும் காலப்பகுதியில் வெப்பநிலை 0.4 செல்ஷியெஸ் (0.72 பரனைட்) இனால் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலின் வெப்பநிலை 51.8 செல்ஷியெஸினை எட்டியதாக சவூதி அரேபிய தேசிய வானிலை அவதான நிலையம் தெரிவித்திருந்தது.
யாத்திரிகர்கள் தங்கள் தலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றுவதைக் கண்டதாகவும், தொண்டர்கள் குளிர் பானங்கள் மற்றும் விரைவாக உருகும் சொக்லேட் ஐஸ்கிரீம்களை வழங்கியதாகவும் திங்களன்று மக்காவிற்கு வெளியே உள்ள மினாவில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
யாத்திரிகர்கள் குடைகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், வெப்பம் நிலவுகின்ற பகல் பொழுதில் வெயிலில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் சவூதி அரேபிய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் சனிக்கிழமையன்று நடந்த அரபாத் மலையில் பிரார்த்தனைகள் உட்பட பல ஹஜ் செயற்பாடுகள் பகல் நேரத்தில் பல மணிநேரம் வெளியில் இருந்தவாறே யாத்திரிகர்களால் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.
வீதியோரங்களில் அசைவற்ற உடல்களைப் பார்த்ததாகவும், நோயாளர் காவு வண்டிச் சேவைகள் அதிகமாக இடம்பெற்றதைக் காணக்கூடியகாக இருந்ததாகவும் சில யாத்திரிகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த ஆண்டு ஹஜ்ஜில் சுமார் 1.8 மில்லியன் யாத்திரிகர்கள் பங்கேற்றுள்ளனர், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் பணத்தைச் சேமிப்பதற்காக உத்தியோகபூர்வ ஹஜ் விசாவைப் பெறாமல் ஹஜ் செய்ய முயல்கின்றனர், இது மிகவும் ஆபத்தான செயலாகும், ஏனெனில் இந்த பதிவு செய்யப்படாத யாத்திரிகர்கள் ஹஜ் கடமையின்போது சவூதி அதிகாரிகளால் வழங்கப்படும் குளிரூட்டப்பட்ட வசதிகளை பெற முடியாது.
செவ்வாயன்று ஏ.எப்.பி இடம் கருத்துத் தெரிவித்த இராஜதந்திரிகளுள் ஒருவர், எகிப்தியர்களின் அதிக எண்ணிக்கையிலான இறப்புக்கு ‘முற்றிலும்’ காரணமாக அமைந்திருப்பது பதிவு செய்யப்படாத எகிப்திய யாத்திரிகர்களாவர் எனத் தெரிவித்தார்.
இந்த மாத ஆரம்பத்தில், சவூதி அதிகாரிகள், ஹஜ்ஜுக்கு முன்னர் மக்காவிலிருந்த பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களை வெளியேற்றியிருந்தனர்.
இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது உயிரிழப்புகள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் ஏனைய நாடுகளுள் இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகியவை உள்ளடங்கும்.
வெப்பம் காரணமாக எத்தனை உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பெரும்பாலான நாடுகள் குறிப்பிடவில்லை.
வருடாந்தம் ஹஜ்ஜை நடத்துவது மக்கா மற்றும் மதீனா நகரங்களில் உள்ள ‘இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர்’ என்ற பட்டத்தினைக் கொண்டுள்ள மன்னர் சல்மான் மற்றும் சவூதி அரச குடும்பத்திற்கு ஒரு கௌரவமாகும்.
சவூதியின் சுகாதார அமைச்சர், பஹ்த் பின் அப்துல் ரஹ்மான் அல்-ஜலாஜெல், ஹஜ்ஜுக்கான சுகாதாரத் திட்டங்கள் ‘வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன’ என கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தார். இது பெரிய அளவிலான நோய்கள் மற்றும் ஏனைய பொது சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையாகும் என உத்தியோகபூர்வ சவூதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மெய்நிகர் வைத்தியசாலை 5,800 இற்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு மெய்நிகர் ஆலோசனைகளை வழங்கியது, முதன்மையாக வெப்பம் தொடர்பான நோய்களுக்கு, உடனடியாகத் தலையிட்டு செயற்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனையும் தடுத்துள்ளது என ஏ.எப்.பி. செய்தித் தாபனம் தெரிவித்துள்ளது.- Vidivelli