மௌலவி ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம்
வெற்றிடங்கள் குறித்த விபரம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு அமைச்சரவை அனுமதியின் பின் நியமனங்களை வழங்க தீர்மானம்
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சின் விடயத்துக்குப் பொறுப்பான பிரிவு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் சில மாகாண பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர்கள் தேவைக்கு மேலதிகமான எண்ணிக்கையில் கடமையில் இருப்பதால் அது தொடர்பான விபரங்களை கல்வி விடயத்துக்குப் பொறுப்பான பிரிவு சேகரித்து வருவதாக கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை கல்வி அமைச்சின் ஆசிரிய நியமன பிரிவு தற்போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாகவும் இந் நியமனங்களில் இஸ்லாம் பயின்ற பட்டதாரிகளும் உள்ளடங்குவதாகவும் அவர்களால் இஸ்லாம் போதிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்கள் கணக்கிடப்பட்டு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பே நியமனங்கள் வழங்கப்படுவது சாத்தியம் என்றும் அவர் கூறினார்.
தசாப்த காலமாக மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமையினால் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பாடசாலைகளில் இஸ்லாம் போதிக்கப்படுவது சவாலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli