உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் விசாரணைகளை முறையாக நடத்தவில்லை
ஜனாதிபதியையும் சாடுகிறார் முஜிபுர்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை உரியமுறையில் நடத்தும் தேவை இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடிவெள்ளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான உரிய விசாரணைகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அதற்கு மாற்றமாக வெவ்வேறு கதைகளை கூறி பிரச்சினைகளை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை காப்பாற்றும் அல்லது மறைக்கும் செயற்பாடுகளையே செய்து வருவதாக தோன்றுகிறது.
அத்தோடு, விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை வைத்து பிரதான சூத்திரதாரியார் என்பதை வெளிக்கொணர முடியும். ஆனால், அதை இந்த அரசாங்கம் செய்வதாக தெரியவில்லை.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் என்கிற புலஸ்தினி மஹேந்திரன் தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது மாறுபட்ட விடயங்களை தெரிவித்து வருகின்றது. இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயாராக இல்லை என தெரிகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்படும்போது நாம் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்போம். 2019 இல் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணையில் தேக்க நிலை காணப்பட்டது.
எனவே, அதற்கு முன்னர் விசாரணைகள் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து நாம் விசாரணைகளை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார். – Vidivelli