மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

0 283

எஸ்.என்.எம்.சுஹைல்

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அவர் மின்­சாரம் தாக்கி நாகொட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் உயி­ரி­ழந்­த­தாக நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை செய்­திகள் வெளி­யா­ன­தை­ய­டுத்து ஒரு­வித சோகம் நம்மை ஆட்­கொண்­டது.

1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்­தவர் பாலித தெவ­ரப்­பெ­ரும, 2002 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் ஐக்­கிய தேசியக் கட்சி ஊடாக அர­சி­யலில் பிர­வே­சித்த அவர், மத்­து­கம பிர­தேச சபையின் தவி­சா­ள­ரானார்.

பின்னர் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற மாகாண சபைத் தேர்­தல்­க­ளின்­போது களுத்­துறை மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரானார். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்றம் பிர­வே­சித்தார். 2020 ஆம் ஆண்டு வரை 10 ஆண்­டுகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும் பதவி வகித்­துள்ளார்.
சமூக சேவைகள் பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும், நிலை­பே­றான அபி­வி­ருத்தி, வன­ஜீ­வ­ரா­சிகள் மற்றும் பிராந்­திய அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும் உள்­நாட்டு விவ­காரம், வயம்ப அபி­வி­ருத்தி மற்றும் கலா­சார பிர­தி­ய­மைச்­ச­ரா­கவும் இவர் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பதவி வகித்­துள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஐ.தே.க.வுக்கு ஏற்­பட்ட பின்­ன­டைவு கார­ண­மாக பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார் பாலித தெவ­ரப்­பெ­ரும.

கிட்­டத்­தட்ட 18 வரு­டங்கள் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் தடம்­ப­தித்த பாலித மக்­களின் அபி­மானம் பெற்ற அர­சி­யல்­வா­தி­யாக திகழ்­கிறார். குறிப்­பாக அவரின் சமூக உணர்வு மற்றும் சமூக சேவைகள் ஊடா­கவே இவர் மக்கள் அபி­மா­னத்­தையும் பிர­ப­லத்­தையும் பெற்­ற­வ­ராக திகழ்ந்தார்.

2014 ஆம் ஆண்டு களுத்­துறை மாவட்­டத்தில் குறிப்­பாக தர்­கா­நகர், அளுத்­கம, பேரு­வளை, வெலிப்­பனை போன்ற பகு­தி­களில் முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாத தாக்­கு­தல்­க­ளின்­போது, தனது உயிரை துச்­ச­மென மதித்து முஸ்­லிம்­களை பாது­காப்­ப­தற்­காக அரும்­பா­டு­பட்ட மனி­த­நே­ய­மிக்க ஒரு அர­சி­யல்­வா­தி­யாக பாலித தெவ­ரப்­பெ­ரும இருக்­கிறார். குறித்த தாக்­குதல் சம்­ப­வத்­தின்­போது, பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­ப­மொன்றை மிகவும் ஆபத்­தான நிலை­யிலும் துணிந்தும் காப்­பாற்­றி­ய­போது கடு­மை­யாக தாக்­கப்­பட்டார். இவ்­வாறு அவர் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள், குழந்­தைகள் உட்­பட 16 பேரை பாது­காப்­பாக அழைத்துச் சென்ற சம்­ப­வத்தை இன்றும் முஸ்­லிம்கள் நன்­றி­யுடன் நினைவு கூறு­கின்­றனர். இது விட­ய­மாக நாம் 2014 ஆம் ஆண்டு வெலிப்­பனை பகு­திக்கு சென்­றி­ருந்­த­போது, ‘பாலித தெவ­ரப்­பெ­ரும சண்­டி­மல்­லிதான், ஆனால் அவர் தங்­க­மா­னவர். அவ­ருக்கு தங்க மனசு’ என அப்­ப­கு­தி­யி­லுள்ள ஒருவர் கூறி­யது இன்னும் நினைவில் இருக்­கி­றது.

 

இதே­போன்று, 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாத­ம­ளவில் மது­கம, வெலி­பன்ன பிர­தே­சத்தில் 63 வய­தான நப­ரொ­ருவர் தனது வீட்­டுக்கு அருகில் இருந்த கிணற்­றுக்குள் விழுந்­துள்ளார். மறு­தினம் குறித்த சட­லத்தை பிர­தே­ச­வா­சிகள் கண்­டுள்­ளனர். இது குறித்து தகவல் அறிந்த எம்.பி பாலித தெவ­ரப்­பெ­ரும, சம்­பவ இடத்­திற்கு வந்­துள்ளார். எனினும் இது குறித்து அறி­விக்­கப்­பட்டும் திடீர் மரண விசா­ரணை அதி­காரி நீண்ட நேர­மா­கியும் சம்­பவ இடத்­துக்கு வர­வில்­லை­யென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பின்னர் பாலித்த தெவ­ரப்­பெ­ரும கிணற்­றுக்குள் இறங்கி சட­லத்தை மேலே எடுத்­துள்ளார். சட­லத்தை மேலே எடுப்­ப­தற்கு முன்னர் களுத்­துறை மாவட்ட செய­லா­ள­ருடன் அவர் தொலை­பே­சியில் உரை­யாடி திடீர் மரண விசா­ரணை அதி­கா­ரியின் கால­தாமதம் குறித்து தெரி­வித்­து­முள்ளார்.

அத்­துடன், 2017 ஆம் ஆண்டு ஜூன் மாத­ம­ளவில் மேற்கு, தெற்கு மற்றும் சப்­ர­க­முவ பகு­தி­களில் ஏற்­பட்ட பெரு வெள்ளம் கார­ண­மாக பெருந் தொகை­யான மக்கள் இன்­னல்­களை எதிர்­கொண்­டனர். இந்த சந்­தர்ப்­பத்தில் பாலித தெவ­ரப்­பெ­ரும மேற்­கொண்ட மனி­தா­பி­மான பணிகள் பெரிதும் மெச்­சப்­பட்­டன.

இத­னி­டையே, கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்று காலப்­ப­கு­தியில் மிக நீண்­ட­கா­ல­மாக அட்­டு­லு­கம முஸ்லிம் கிராமம் முடக்­கத்­துக்­குள்­ளா­னது. அத்­துடன், மிகத் திட்­ட­மி­டப்­பட்டு சில தரப்­பி­னரால் அக்­கி­ரா­மத்­துக்குள் கெடு­பி­டி­களும் முடக்­கி­வி­டப்­பட்­டன. முஸ்­லிம்கள் பாது­காப்­பற்ற நிலை­மையை எதிர்­கொண்ட இந்த சந்­தர்ப்­பத்தில் பாலித அம்­மக்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருந்தார். 2020 ரமழான் காலத்தில் ஏற்­பட்ட நெருக்­கடி நிலை­மை­யின்­போது, அட்­டு­லு­கம பகு­திக்கு நிவா­ர­ணத்தை வழங்­கு­வ­திலும் அம்­மக்­க­ளுக்கு உத­வு­வ­திலும் பாலி­தவின் மனி­தா­பி­மான சேவையை ஒரு­போதும் மறந்­து­வி­ட­மு­டி­யாது.

ஜூலை 2016 இல், 9 மாண­வர்­க­ளுக்கு அர­சாங்கம் பாட­சா­லையில் சேர்க்க மறுத்த போது , அந்த அதி­கா­ரி­களை கண்­டித்து மாண­வர்­களை பாட­சா­லையில் இணைத்­துக்­கொள்­ளு­மாறு வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் இறங்­கினார். இதன்­போதும், 9 மாண­வர்­க­ளையும் பாட­சா­லையில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டாத நிலையில் பாட­சா­லை­யினுள் தூக்கில் தொங்கி தற்­கொலை செய்­து­கொள்­ள முற்­பட்ட சம்­பவம் அன்று பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதன்­போது, வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பாலி­த­வுக்கு இரு­தய சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது. இச்­சம்­ப­வத்தின் பின்­னரே மாண­வர்கள் பாட­சா­லையின் தரம் 1 இல் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இவ்­வாறு பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் சண்­டித்­த­ன­மான மனி­த­நேயப் பணிகள் நீண்­டு­கொண்டே செல்­கி­றது. இவர் முஸ்லிம் சமூ­கத்தால் பெரிதும் நேசிக்­கப்­படும் ஒரு­வ­ரா­கவே இருந்தார். 2017 ஆம் ஆண்டு இடம்­பெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் வரு­டாந்த மாநாட்­டின்­போது பாலித தெவ­ரப்­பெ­ரும பாராட்டி கௌர­விக்­கப்­பட்டார்.

2015 ஆம் ஆண்டு தனது மகன் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்டு இறந்த நிலையில் மிகுந்த மன அழுத்­தத்­திற்கு ஆளான தெவ­ரப்­பெ­ரும, தொடர்ந்து மகனின் பெயரால் மக்கள் சேவை­யினை விஸ்­தி­ரப்­ப­டுத்தி செயற்­பட்டார்.
முன்னாள் பிரதி அமைச்­சரும் எம்.பியுமான பாலித்த தெவரப்பெரும நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் உரமிட்டுக் கொண்டிருந்த போது,கவசமிடப்படாத மின்கம்பி ஒன்றை மிதித்த நிலையில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சுமார் 40 நிமிடங்களின் பின்னரே அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல்வாதி என்பதை தாண்டி, மனிதநேயத்தோடு மக்கள் மனதை ஈர்த்தவராக பாலித தெவரப்பெரும இருந்து வந்த நிலையில் இன்று அவரது மறைவு இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.