அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கின்றோம். இந்த ரமழான் எல்லா வகையிலும் பயன்மிக்கதாக அமைய வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
பொதுவாக உலகமும் எமது தேசமும், முஸ்லிம் உம்மத்தும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் நாம் இவ்வருட ரமழானை சந்திக்கின்றோம். எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இதனால் இந்நாட்டு மக்கள் இன, மத வேறுபாடில்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலும், போதைப் பொருள் பாவிப்போரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக, பாடசாலை மாணவ, மாணவிகளும் இளைஞர்களும் இப்பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கவேண்டிய இவர்களது நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
முஸ்லிம் உம்மத்தின் நிலையை அவதானிக்கும் போது கவலை தரும் நிகழ்வுகளுடனே உலக முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை அடையவுள்ளனர்.
முஸ்லிம்களின் புனித பூமியுடன் தொடர்பான பாலஸ்தீன விவகாரம் நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் அஹ்ஸாப் யுத்தத்தின் போது எவ்வாறான பயங்கர சோதனைக்கு முகம் கொடுத்தார்களோ அதற்கு ஒப்பான சோதனைக்கு பாலஸ்தீன் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்ய முடியாத கையாலாகாத நிலையில் அந்த நாடுகள் இருப்பது மிகுந்த கவலையை தருகிறது. பாலஸ்தீன மக்கள் அல்லாஹ் மாத்திரமே தமக்கு உதவி செய்வான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன், மிகுந்த பொறுமையுடன் தமது இருப்புக்கான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்லவன் அல்லாஹ் அவர்களுக்கு விமோசனத்தை விரைவில் வழங்குவானாக!
இத்தகைய தேசிய, சர்வதேச நிலவரங்களுடன் ரமழான் மாதத்தை சந்திக்கவுள்ள நாம் எமக்கு முன்னால் உள்ள கடமைகளை சரியாகப் புரிந்து செயற்பட வேண்டும்.
இவ்வகையில் தேசிய ஷூரா சபை ரமழான் மாதம் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது:-
1. அல்குர்ஆன் – ரமழான் அல்குர்ஆன் இறங்கிய மாதம். எனவே அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம். அதன் கருத்துக்களை அறிந்து கொள்ளவும் அதன் படி நடக்கவும் முயற்சி எடுப்போம். அதன் சில வசனங்களை அல்லது சூராக்களையாவது மனனமிட நேரத்தை ஒதுக்கிக் கொள்வோம்.
2. தொழுகை – பர்ளான தொழுகைகளை உள்ளச்சத்தோடு உரிய நேரங்களில் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதோடு ஏனைய நபிலான வணக்கங்களில் இயன்ற வரை அதிகமாக ஈடுபட்டு எமக்கும் ரப்புக்கும் இடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வோம்.
3. பாவச் செயல்கள் –ஏனைய காலங்களில் பொதுவாகவும் குறிப்பாக ரமழானிலும் அல்லாஹ் விரும்பாத காரியங்களில் அதாவது, பாவச் செயல்களில் ஈடுபடாதிருப்போம். ரமழான் காலத்துப் பாவங்கள் அல்லாஹ்வை அதிகம் கோபப்படுத்தும் என்பதையும் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.காரணம், ரமழான் மாதம் நல்லமல்களுக்கான பருவ காலமாக இருப்பதால் அவற்றில் ஈடுபட்டு அதிகமதிகம் நன்மைகளை தேடிக் கொள்ளாமல் அதற்கு மாற்றமாக பாவச் செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய முரண்பாடாகும். நல்லமல்களில் ஈடுபடும் அதேவேளை பாவச் செயல்களிலும் ஈடுபடுவது குளித்துக் கொண்டிருக்கையில் சேற்றையும் பூசிக்கொள்வது போன்ற விசித்திரமான போக்காகும்.எனவே ரமழான் காலத்தில் பாவங்களில் ஈடுபடுவதை முற்றுமுழுதாகத் தவிர்ப்போமாக!
4. சர்ச்சைகள் – ரமழான் காலத்து அமல்களுடன் தொடர்பான சட்ட விவகாரங்களில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளில் அளவு கடந்து ஈடுபாடு காட்டுவது புனித ரமழானின் பிரதான இலக்குகளில் இருந்து எம்மை திசை திருப்பி விடும் என்பதை கவனத்தில் எடுத்து கருத்து வேறுபாடுகளை சகித்துக் கொண்டு எமக்கு மத்தியிலான ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
5. பொருளாதாரம் – மிகப் பயங்கரமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு இயன்ற வரை அதிகமாக உதவி செய்ய முற்படுவோம். முஸ்லிம் அல்லாத சகோதர்களுக்கும் எமது உதவிகள் சென்றடைய வேண்டும். கடமையான ஸகாத்தை உரிய முறையில் கணக்கிட்டு முறையாகக் கொடுத்து, ஸதகாக்களை வழங்கி, அல்லல்படுவோரின் துயர் துடைத்து, உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு அல்லாஹ்வின் திருப்தியையும் பெற்றுக் கொள்வோம்.
6. வீண்விரயம் – பொதுவாக எல்லாக் காலத்திலும் குறிப்பாக இந்த புனிதமான மாதத்திலும் உணவு, உடை போன்றவற்றில் வீண்விரயம் செய்வதை முழுமையாகத் தவிர்ந்து கொள்வோம். இஸ்லாம் வீண்விரயத்தை தடைசெய்திருக்கிறது. அது ஷைத்தானின் சகோதரர்களது பண்பு என அல்குர்ஆன் (இஸ்ரா:27) குறிப்பிடுகின்றது. நாம் செய்யும் வீண்விரயம் பலபோது மற்றவர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம் என்பதைக் கவனத்திற் கொள்வோம்.
7. பொழுதுபோக்கு – தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்க்க வேண்டும். நேரம் என்பது வாழ்க்கையாகும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வீண் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் தமது பொன்னான நேரங்களை பயனுள்ள செயல்களில் கழிக்க வேண்டும். இதற்காக ஊர் தலைமைகள் தமது மஹல்லாக்களில் பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும். இவற்றை திட்டமிடுவது, அமுலாக்குவது போன்றவற்றில் இளைஞர்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.
8. பிற சமூகங்கள் – பல்லின சமூகத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் பொதுவாக எல்லாக் காலங்களிலும் குறிப்பாக ரமழானிலும் பிறசமயத்தவர்களது உணர்வுகளை நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள்,வீட்டின் தொலைகாட்சி மற்றும் வானொலிப் பெட்டிகள் என்பவற்றை பிறருக்கு தொந்தரவாக இல்லாமல் பாவித்துக் கொள்ள வேண்டும். ஸஹர், இஃப்தார்,தராவீஹ் பயான்கள் என்பவற்றின் போது இந்த அவதானம் கூடுதலாகத் தேவை. இரவு காலங்களில் பாதைகளில் விளையாடுவது, ஆங்காங்கே நின்ற வண்ணம் அரட்டையடிப்பது, கூச்சலிடுவது போன்றவற்றை குறிப்பாக இளைஞர்கள் முற்றாக தவித்துக் கொள்ள வேண்டும். புனித ரமழான் முஸ்லிமல்லாதவர்களுக்கு இடையூறான மாதம் என்ற உணர்வை நாம் அவர்களது உள்ளங்களில் ஏற்படுத்தி விடக்கூடாது.
9. துஆச் செய்வது – எமது தேவைகளை நிறைவேற்றித்தரும் படி வல்லவன் அல்லாஹ்விடம் வேண்டுவதோடு எமது பாவங்களை மன்னிக்கும்படி அதிகமாக மன்றாடுவோம். பொதுவாக உலகமும், எமது நாடும், குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களில் இருந்து வெளிவரவும், முஸ்லிம் உம்மாவின் நிலை சீராகவும், முஸ்லிம் நாடுகளில் ஸ்தீரத்தன்மை ஏற்படவும் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்தனை செய்வோம்.
இவ்வுலகில் நிலவி வருகின்ற அநீதி, அட்டூழியம், அராஜகம் என்பன இல்லாதொழிந்து, நீதி, சமாதானம், ஐக்கியம் என்பன ஏற்படவும் நாம் தொடராகப் பிரார்த்தனை செய்வோம்.
ரமழான் மாதம் முஸ்லிம் சமூகத்திற்கு வெற்றியை கொண்டு வந்த மாதம் என்பது எமது வரலாறாகும். எமது வாழ்க்கையில் பாவங்களைக் குறைத்து, நன்மைகளை அதிகரித்து, அல்லாஹ்விடம் எமது முறைப்பாடுகளை நம்பிக்கையுடன் முன்வைப்போம். அவனே அனைத்தையும் அறிந்தவன். அடியார்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றவன்.
யா அல்லாஹ், இந்த புனித ரமழான் மாதத்தில் உன்னை திருப்திப் படுத்தும் அமல்களில் ஈடுபட்டு, உனது நெருக்கத்தைப் பெற்றவர்களது கூட்டத்தில் எம்மையும் சேர்ப்பாயாக! – Vidivelli