எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா தொடர்பிலான வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பாத்திமா ஹாதியா பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை ஒப்புவிக்க உண்மை விளம்பல் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
ஹாதியாவுக்கு எதிரான வழக்கில், வழக்கை நிரூபிக்க சட்ட மா அதிபர் தரப்பு பயங்கரவாத தடை சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக ஹாதியா கோட்டை நீதிவானுக்கு அளித்துள்ள வாக்கு மூலத்திலேயே தங்கியுள்ளமை புலனாகிறது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்துஅறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக) , அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில், சாராவிடம் இருந்து தகவல்களை அறிந்துகொண்டு ஹாதியா அவற்றை மறைத்தாரா அல்லது, சி.ஐ.டி.யினரின் கட்டுக்காவலில் இருந்த போது அவர்களின் வாக்குறுதி, நிர்ப்பந்தம் மற்றும் அழுத்தம் காரணமாக கோட்டை நீதிவானுக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் வாக்கு மூலம் வழங்கினாரா என்ற விடயத்திலேயே ஹாதியா குற்றவாளியாவதும் நிரபராதியாவதும் தங்கியுள்ளது. அதன்படியே ஹாதியாவின் குறித்த வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த தவணையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்ட போது, ஹாதியா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விஷேட விசாரணைப் பிரிவு இல: 2 இன் 2 ஆம் பிரதானியாக செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் சுமதிஸ்ஸ சாட்சியம் அளித்தார். வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய, மொஹம்மட் லாபிர் ஆகியோருடன் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்படுத்தலில் அவர் சாட்சியமளித்தார்.
இதன்போது, ஹாதியாவும் அவரது மகளான ருதைனாவும் தனது பிரிவிலேயே தடுத்து வைக்கப்பட்டதாகவும், ருதைனாவை ஹாதியாவின் பெற்றோரிடம் மீள கையளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தான் தொடர்புபட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் சுமனதிஸ்ஸ சாட்சியமளித்தார். இதற்காக தான் கட்டுபொத்த பொலிஸ் பிரிவின் கெக்குனுகொல்ல பகுதிக்கு சென்று ஹாதியாவின் தாய், தந்தையரிடம் வாக்கு மூலம் பெற்றதாகவும் அவர் கூறினார். அத்துடன் ஹாதியா, அவர் மகள் ருதைனாவை தமது பொறுப்பில் இருக்கும் போது நன்றாக பார்த்துக்கொண்டதாகவும் , ருதைனாவுக்கு பிடித்த பராட்டா மற்றும் கோழிக் கறி வாங்கிக் கொடுத்ததாகவும் சுமனதிஸ்ஸ சாட்சியமளித்தார்.
எவ்வாறாயினும் பிரதிவாதி ஹாதியாவின் நலனுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸுடன் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சுமனதிஸ்ஸவின் சாட்சியத்தை குறுக்கு விசாரணைகள் ஊடாக சவாலுக்கு உட்படுத்தினார்.
ஹாதியா கோட்டை நீதிவானிடம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வாக்கு மூலம் வழங்க அழைத்துச் செல்லப்பட்ட அதே தினத்தில் அவருடன் குறித்த விசாரணையாளர்கள் பொறுப்பில் இருந்த மற்றொரு கைதியும் அழைத்துச் செல்லப்பட்டமை, நீதிவானிடம் சென்ற பின்னர் அவர் வாக்கு மூலம் வழங்க மறுத்ததால் மீள அழைத்து வரப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை முன் வைத்து சுமனதிஸ்ஸவின் சட்சியத்தை சவாலுக்கு உட்படுத்தினர். அத்துடன் ஹாதியாவின் வாக்குமூலமானது அவரது குழந்தை ருதைனாவின் எதிர்காலம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி, அச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக வழங்கப்பட்ட வாக்கு மூலம் என அவரது சட்டத்தரணிகள் முன்மொழிந்தனர். இதனைவிட சாட்சியாளரின் நேர்மைத் தன்மை, விசுவாசம் உள்ளிட்டவற்றையும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசாரணைகளில் சவாலுக்கு உட்படுத்தினார்.
இதனையடுத்து இவ்வழக்கின் மேலதிக குறுக்கு விசாரணைகள் ஏபரல் 25 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்ட்டது. சுமனதிஸ்ஸவின் சாட்சியத்தின் பின்னர் பிரதான விசாரணை அதிகாரி ஜயசுந்தரவின் சாட்சியம் மட்டும் வழக்குத் தொடுநர் தரப்பால் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஹாதியா சாட்சிக் கூண்டில் ஏறியோ அல்லது பிரதிவாதிக் கூண்டில் இருந்தவாறு தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே தான் இந்த வழக்கு மிக விரைவில் முடிவுக்கு வரும் என சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். – Vidivelli