ஹஜ் விவகாரம்: இவ்வருடம் 500 மேலதிக கோட்டா வழங்குங்கள்
மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவூதி அரேபியாவின் ஹஜ்-உம்ரா அமைச்சரிடம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரையின்போது இலங்கைக்கு மேலதிகமாக 500 கோட்டா வழங்குமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கை அண்மையில் சவூதி அரேபியாவில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட போது எழுத்துமூலம் கையளிக்கப்பட்டது.
இவ்வருடம் இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் 500 மேலதிக கோட்டாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இவ்வருடம் இலங் கைக்கு வழங்கப்பட்டுள்ள 3500 கோட்டாவின் அடிப்படையில் 35 பேஸா விசாக்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹஜ் முகவர் நிலையங்களுக்கு பேஸா விசா வழங்கப்படாமையினால் மொத்தம் 150 பேஸா விசாக்கள் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளின் பிரஜா உரிமை பெற்றுள்ள வெளிநாட்டு கடவுச் சீட்டிைனக் கொண்டுள்ள இலங்கையர் 200 பேர் இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை தங்கள் குடும்பத்தாருடன் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.- Vidivelli