ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்காக நாடெங்கும் 65 காதி நீதி பிரிவுகளில் காதி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த காதி நீதிபதிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காதிநீதிபதிகளின் நியமனம் வர்த்தமானி அறிவித்தலில் வெற்றிடங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு மூன்று வருட காலத்திற்கு நியமனம் வழங்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஒரு வருட காலத்திற்கே நியமனம் வழங்கப்படுகிறது. நேர்முகப் பரீட்சை நீதிபதிகளினாலே நடத்தப்படுகிறது.
காதி நீதிபதிகளின் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கே முறைப்பாடு செய்யப்பட வேண்டும். இதேவே ளை காதி நீதிபதியொருவரின் தீர்ப்பு பக்கச்சார்பாக இருந்தால் காதிகள் மேன்முறையீட்டு சபைக்கு மேன்முறையீடு செய்யலாம். மேலும் காதி நீதிமன்றமொன்றில் வழக்கு விசாரணையின் கீழ் இருக்கும்போது நீதிபதி பக்கச்சார்பாக நடந்து கொள்கிறார் என ஒரு தரப்பினர் கருதினால், அவ்வழக்கினை விசாரிக்க வேறொரு காதி நீதிமன்றினை கோரலாம். நீதிச்சேவை ஆணைக்குழுவே இந்த மாற்றத்தினை செய்யும்.
புத்தளம் மாவட்ட காதி நீதிபதி தொடர்பில் அண்மைக்காலமாக பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய புத்தளம் காதி நீதிமன்ற காதி நீதிபதி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒருவருட காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பதவிக்கு வந்ததும் புத்தளம் பிரதேச அரசியல் தலைவர்களாலும் வேறு சிலராலும் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அரசியல்வாதியொருவரினால் தாக்குதலுக்கும் உள்ளானார். இவர் காதி நீதிபதியாக நியமனம் பெற தகுதியற்றவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அமைதி ஆர்ப்பாட்டம்
தற்போதைய புத்தளம் காதி நீதிபதிக்கு எதிராக கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை புத்தளத்தில் பாரிய அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கான நீதி மையம் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களும், ஆண்களும் புத்தளம் காதி நீதிபதிக்கு எதிராக பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் புத்தளம் காதி நீதிமன்றுக்கு எதிராகவும் இடம்பெற்றது. கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ரிபாயும் கலந்து கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் நீதி மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டிருந்தவர்கள் காதி நீதிபதியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
‘காதிநீதிபதியின் முறைகேடான நடவடிக்கைகளை நாம் கண்டிக்கிறோம்’
‘பணம் இருப்பவர்களிடம் சரிந்து விடுகிறது வழக்கு’
‘இந்தக் காதியின் அநீதிக்கு முடிவில்லையா?’
‘விதவைகளை உற்பத்தி செய்கிறது காதியின் கறை படிந்த கரங்கள்’
‘நீதிக்கான இடத்தில் காதியின் அநீதி நடக்கிறது’
எனும் சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
பெண்கள் நீதிமையத்தின்
தலைவி சர்ஜானா பானு
பெண்கள் நீதிமையத்தின் தலைவி சர்ஜானா பானுவை விடிவெள்ளி தொடர்புகொண்டு கடந்த 11 ஆம் திகதி புத்தளம் காதி நீதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம் தொடர்பில் வியவியது. அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
‘‘நான் பலாவி புழுதிவயல் பகுதியைச் சேர்ந்தவள். புத்தளம் காதி நீதிமன்றினால் நானும் பாதிக்கப்பட்ட ஒரு பெண். நான் எனது குடும்பப் பிரச்சினைக்காக பல தடவைகள் புத்தளம் காதி நீதிமன்றப் படிகளை ஏறியிறங்கியிருக்கிறேன்.
நான் புத்தளம் காதி நீதிமன்றில் 2019.02.26ஆம் திகதி மனைவி தாபரிப்பு, பிள்ளை தாபரிப்பு ஆகிய இரு வழக்குகளும் சமாதானத்துக்கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தேன். அப்போதிருந்த புத்தளம் காதி நீதிபதி பிள்ளை தாபரிப்பு வழக்கில் தற்காலிக தீர்ப்பாக பிள்ளைக்கு மாதம் 7500 ரூபா செலுத்த வேண்டுமென எனது கணவருக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கியிருந்தார். இது தவிர ஏனைய இரு வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
தற்போது புத்தளம் காதி நீதிபதியாக பதவி வகிக்கும் நீதிபதி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமனம் பெற்றார். அவர் நியமனம் பெற்றதும் எனக்கு வழக்கு இலக்கம் குறிப்பிடப்படாத அறிவித்தல் ஒன்று கிடைக்கப்பெற்றது. அப்போது நான் சுகயீனமாக இருந்ததால் விசாரணைக்கு சமுகமளிக்க முடியாது என கடிதமொன்று (Speed post) அனுப்பினேன். என்றாலும் எனது வழக்குக்கு அதன் பின்பு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பின்பு காதி நீதிபதியிடமிருந்து எனது கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தல் ஒன்று தபால் மூலம் 2023.07.04 ஆம் திகதி வந்தது.
நான் இதற்கு காதி நீதிபதிக்கு பதிவுத் தபால் மூலம் 2023.07.11ஆம் திகதி பதில் அனுப்பினேன். எனது கணவருக்கு இரண்டாம் திருமணத்துக்கான அனுமதி வழங்குவதற்கு முன்பு எனக்கு தாபரிப்பு பணம் பெற்றுத் தருவதோடு முன்னாள் காதி நீதிபதி எனது பிள்ளைக்கு தாபரிப்பு வழங்குமாறு எனது கணவணுக்கு உத்தரவிட்ட தற்காலிக தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் கடிதமூலம் கேட்டிருந்தேன். ஆனால் எனக்கு பதில் வரவில்லை.
பின்பு இரண்டு வாரங்களின் பின்பு காதி நீதிவானை நேரில் சென்று சந்தித்தேன். நான் வறுமைக் கோட்டில் இருப்பதாக கூறி எனக்கும், பிள்ளைக்கும் தாபரிப்பு பெற்றுத் தர வேண்டுமெனவும் கேட்டேன். எழுத்துமூலம் முறைப்பாட்டினைக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். அதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறிய காதி நீதிபதி எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் எனது கணவருக்கு இரண்டாவது திருமணத்துக்கான அனுமதி 2023.08.11ஆம் திகதி காதியினால் வழங்கப்பட்டு கணவர் அடுத்த நாேள 2023.08.12 இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவ்விபரம் பின்பே எனக்குத் தெரிய வந்தது.
கணவரின் இரண்டாவது திருமணத்திற்கான விண்ணப்பம் பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் 30 நாட்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. பள்ளிவாசல் தலைவர் எனது கணவரின் தந்தையின் தம்பியாவார்.
எனது கணவருக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யுமாறு காதி நீதிவானை வேண்டினேன். சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. இது முன்னைய காதி நீதிவான் விட்ட பிழை என்றார். ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறு வேண்டினார். முடியாதென்றேன். அதன் பின்பு என்னையும் எனது தந்தையையும் நீதிமன்றிலிருந்து வெளியேற்றினார்.
எனது வழக்கு கோவையின் விசாரணைகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைக் கோரி சட்டத்தரணியின் கடிதத்தைக் கொடுத்தேன். அதை மடித்து வைத்துவிட்டு ‘நீங்கள் நினைக்கும் மாதிரி வழக்கு பிரதிகளைத் தர முடியாது’ என்றார்.
2023.11.02 ஆம் திகதி தலாக் வழக்கு விசாரணைக்கு வருமாறு எனக்கு அறிவித்தல் வந்தது. விருப்பமில்லாதவருடன் வாழ முடியாது என்றார். முதலில் எனது தாபரிப்பு பற்றி பேசுங்கள் என்றேன். பிள்ளைக்கு மாதம் 7500 ரூபா வாங்கித் தருகிறேன். உனக்கு வாங்கித் தர முடியாது என்றார்.
முதலில் சமாதானம் பேசுங்கள். பின்பு மனைவிக்கான தாபரிப்பு பற்றி பேசுங்கள். அதன் பின்பு தலாக் பற்றி பேசுங்கள் என்றேன்.
தலாக் கொடுக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. நீ எங்கு வேண்டுமானாலும் போ என்றார். நான் வெளியேறினேன். இங்கு கையொப்பம் வைத்தால் வா. இல்லையேல் வராதே என்றார் நீதிபதி.
நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு நேரடியாக சென்று முறைப்பாடு செய்வதற்கு எங்களிடம் பணம் இல்லை. இது தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்திருக்கிறேன் என்றார் பெண்கள் நீதிமையத்தின் தலைவி.
நாங்கள் கடந்த 11ஆம் திகதி புத்தளத்தில் புத்தளம் காதி நீதிபதிக்கெதிராக அமைதி ஆர்ப்பாட்டமொன்றினை புத்தளம் விவசாய திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்து நடாத்தினோம். புத்தளம் மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கும் சென்று முறையிட்டோம். முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறினார்கள். இரண்டு வாரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மாவட்ட ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
புத்தளம் காதி நீதிபதி
எம்.ஆர்.மொஹமட்
தற்போது கடமையில் இருக்கும் புத்தளம் காதி நீதிபதி எம்.ஆர்.மொஹமட்டை தொடர்புகொண்டு விடிவெள்ளி இது தொடர்பில் வினவியது.
‘என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. நான் மறுக்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான எனது பதிலையும் விளக்கத்தையும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளேன் என்றார்.
காதி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அபிலாஷையாக உள்ளது.- Vidivelli