(குருநாகல் நிருபர்)
மாவத்தகம, பிலஸ்ஸ என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த மோதலின்போது வாள்வெட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
இச் சம்பவத்துடள் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றும் சிலர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிக்கெட் போட்டியொன்றை மையப்படுத்தி இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பையடுத்து பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமைதியை ஏற்படுத்தவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மாவத்தகம பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். அத்துடன், மேலதிக பாதுகாப்பு கடமைகளுக்காக அருகிலுள்ள பொலிஸ்நிலையங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படுபவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான முனைப்பில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களும் நண்பர்களும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்கு கற்களை எறிந்து சேதப்படுத்தியுள்ளதா க தெரியவருகிறது.
மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுக்களும் இருவேறு இனம், மதத்தவர்கள் என்பதனால் பிரதேசத்தில் இனக்கலவரம் ஏற்படுவதை தடுப்பதற்காக மதத் தலைவர்கள் ஊர் முக்கியஸ்தர்களுடன் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அத்தோடு, நீண்ட காலமாக இரு இன குழுக்களிடையே ஏற்பட்டுவந்த வாய் தர்க்கமே மோதல் நிலைமைக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வசந்த கித்சிறியின் மேற்பார்வையின் கீழ் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli