(எம்.வை.எம்.சியாம்)
எம்.எச்.எம்.அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான விடயத்தில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரபின் 75 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய ஐக்கிய முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ரபின் பாரியார் பேரியல் அஸ்ரப் மற்றும் அவரது மகன் அமான் அஷ்ரப், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் விசேட உரையொன்றையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,
தேசிய ஒற்றுமையின் மீதான அஷ்ரபின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இடையிலான நல்லிணக்கம் உண்மையிலேயே சிறந்த விடயமாகும். அவர் அவரது மக்களின் முன்னேற்றத்திற்காக முற்றிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
மேலும் அஷ்ரப் அனைவரிடமும் அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொள்பவராக காணப்பட்டதுடன் சிறந்த மனிதராக இருக்க வேண்டும் எனவும் நம்பினார்.எமது நாடு பல்பகுதிகளாக பிரிந்து கிடப்பதை அவர் பார்க்க விரும்பவில்லை. அவர் சில சமூகங்களை அவர்களாகவே பார்ப்பதற்கும் அவரது சமூகத்தை எம்முடைய சமூகமாகவும் பார்ப்பதற்கு விரும்பினார். அவரை பொறுத்தமட்டில் நாம் அனைவரும் ஒன்று தான்.
முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விடயத்தில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது. இது ஒரு விபத்தா அல்லது எதிரிகளால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதியா என்ற கேள்விக்கான பதில் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது என்றார்.
இதன்போது உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்
தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற அடிப்படையிலேயே எங்களுடைய கட்சியுடன் மிக நெருக்கமாக பயணித்தவர். அதுமாத்திரமின்றி தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அதிகார பகிர்வு கொண்டு வரப்பட்ட போது புதிய அரசியல் அமைப்புக்காக அரும்பாடுபட்டவர். பாராளுமன்றத்தில் அதற்கென்று மிக நீண்ட உரையாற்றியவர். இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2/3 பெரும்பான்மை கிடைக்கும் வரையில் பேசுவதை நிறுத்த வேண்டாம் என கூறியவர். இதனை தமிழ் சமூகம் என்றைக்கும் மறக்காது. நாம் அதனை எப்போதும் நினைவு கூறுவோம் என்றார்.
முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உரையாற்றுகையில்,
1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் உருவான இலங்கை சமசமாஜக் கட்சி ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசியல் கட்சியே அஷ்ரபுக்கு தேவைப்பட்டது. அதுவே தேசிய ஐக்கிய முன்னணியாகும். இன்று போன்று அன்று மாகாண சபை தேர்தல் காணாமலாக்கப்படவில்லை. உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெறாத நேரத்தில் அஸ்ரபின் நினைவு வருகிறது.. அவர் இருந்திருந்தால் இதனை செய்திருப்பார் அவர் இந்த தேர்தல்களை வென்றெடுக்க கடுமையாக போராடியிருப்பார். ஆனால் இப்போது போராட்டம் எதுவுமில்லை. எம்மை போன்று சிலர் கதைப்பதை தவிர வேறு எவரும் கதைப்பதில்லை. அனைவரும் சத்தமின்றி இருக்கின்றனர். என்றும் அஷ்ரப் தொடர்பான நினைவுகள் இன்றும் மனதில் நிறைந்துள்ளன என்றார்.
இதேவேளை தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி உரையாற்றுகையில் முன்னாள் தலைவர் அஸ்ரப் ஒரு தொலைநோக்கு பார்வை உடையவர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டார். அது குறுகிய காலமாக இருந்தாலும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் எது சரியோ அது அதற்காக மாத்திரம் போராடினார். எப்போதும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த சமூகத்தில் உள்ள ஏனைய தலைவர்களுடன் ஒப்பிட்டால் அவரது சேவைகள் அனைவருக்கும் முன்மாதிரி என நினைக்கிறேன் என்றார்.- Vidivelli