சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றில் கல்வி பயின்று வந்த 13 வயதான மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் மாணவனின் பெற்றோரும் மத்ரசாவின் அயலவர்களும் கூறுகின்றனர்.
குறித்த மத்ரசா நிர்வாகியான மெளலவி மீது ஏலவே பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் இதற்கு முன்னரும் மாணவர்களைத் தாக்கியதாக அவர் மீது பொலிஸ் முறைப்பாடுகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஒரு சம்பவத்திற்காக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளளார்.
இச் சம்பவம் நாட்டில் பல்கிப் பெருகியுள்ள அரபு மத்ரஸாக்கள் குறித்த கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. அரபுக் கல்லூரிகள் தொடர்பில் பெளத்த பிக்குகளும் அரசியல்வாதிகளும் சிங்கள ஊடகங்களும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒருபுறமிருக்க முஸ்லிம் சமூகம் சுய மீளாய்வு ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை இந்த சம்பவம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த நாட்டில் மிகச் சிறந்த உலமாக்களை உருவாக்கி இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற மார்க்க வழிகாட்டல்களை வழங்குகின்ற ஆளுமைகளை உருவாக்கிய நன்கு கட்டமைக்கப்பட்ட புகழ் பெற்ற அரபுக் கல்லூரிகளை நாம் மறந்துவிட முடியாது. குறித்த அரபுக் கல்லூரிகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு நிர்வாக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு இன்று வரை இயங்கி வருகின்றன. இவற்றின் பாடத்திட்டங்கள் சமகாலத்திற்கு எந்தளவு தூரம் ஒத்துப் போகின்றன என்ற கேள்விகள் எழுந்தாலும் மாணவர்களை சிறந்த ஆளுமைகளாக உருவாக்குவதில் இக் கல்லூரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன எனலாம்.
எனினும் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் நாட்டில் புற்றீசல்கள் போல் உருவெடுத்த பல நூற்றுக் கணக்கான அரபு மத்ரசாக்கள் சில தனி நபர்களால் தமது பிழைப்புக்காக நடத்தப்பட்டு வருவதை காண்கிறோம். ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு மத்ரசாக்கள் முளைத்துள்ளன. எந்தவித பாடத்திட்டங்களோ அல்லது பயிற்றுவிக்கப்பட்ட விரிவுரையாளர்களோ இன்றி நினைத்தவாறு இவை இயங்கி வருகின்றன. இவற்றில் சில முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவை ஒரு கல்வி நிலையம் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட கொண்டிருப்பதில்லை.
பெற்றோர் தமது பிள்ளைகள் புனித குர்ஆனை மனனமிட்டு மார்க்கத்தைக் கற்றவனாக வெளியாக வேண்டும் என்ற நன்னோக்கிலேயே மத்ரசாக்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதற்காக மாதாந்தம் ஒரு தொகைப் பணத்தையும் செலவு செய்கின்றனர். எனினும் இவ்வாறான முறையான நிர்வாகமும் மேற்பார்வையும் இல்லாத மத்ரசாக்களில் மாணவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அடிக்கடி பதிவாகின்றன. மாணவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர். சிறுவர் உளவியல் தொடர்பில் எந்தவிதமான முன் அறிவோ அனுபவமோ இல்லாதவர்களாலேயே இவ்வாறான துரதிஷ்டமான சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
எனவேதான் இவ்வாறான முறையான நிர்வாகமற்ற அரபு மத்ரசாக்கள் மற்றும் கல்லூரிகள் தொடர்பான மீள்வாசிப்பு ஒன்றை முஸ்லிம் சமூகம் விரைந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கடந்த காலங்களில் அரபுக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்த சில முயற்சிகளை எடுத்த போதிலும் அது பின்னர் கைவிடப்பட்டுவிட்டது. குறித்த நடவடிக்கைகள் மீளவும் தொடரப்பட வேண்டும். இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மீதும் பாரிய பொறுப்புள்ளது. முஸ்லிம் சிவில் சமூகமும் புத்திஜீவிகளும் கூட இதனை முக்கிய பிரச்சினையாகக் கருதி செயற்பட வேண்டியுள்ளது. இல்லாதபட்சத்தில் தொடர்ந்தும் நாம் முஸ்அப் போன்ற மாணவச் செல்வங்களை இழக்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்க விரும்புகிறோம்.- Vidivelli