ஏ.ஆர்.ஏ.பரீல்
‘‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒழுங்காக நடக்கவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தொடராக கூறி வருகிறார். பேராயர் மற்றும் ஏனையோர் ஒன்றிணைந்து நாம் இவ்விவகாரத்துக்கு தீர்வு பெற்றுக் கொள்வோம். கர்தினால் அவர்கள் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து இன, மத பேதங்களை ஏற்படுத்த வேண்டாம்’’ என சிவில் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக நடப்பதில்லை என பேராயர் தொடராகக் குறை கூறிக்கொண்டே இருக்கிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சுமார் 90 வீதம் முடிவடைந்து விட்டதாக ஓரிடத்தில் நான் தெரிவித்திருந்தேன். இவ்வேளையில் கர்தினால் அவர்கள் என்னை விமர்சித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். இது தொடர்பான நடவடிக்கைகள் 90 வீதமானவை முற்றுப் பெற்று விட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேல் நீதிமன்றில் 42 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் பிரதிவாதிகளின் எண்ணிக்கை 80 ஆகும். இவர்களில் 23 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். எங்களது விசாரணைகள் பெருமளவில் முற்றுப் பெற்று விட்டன. என்றாலும் கர்தினால் அவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தமக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் மறைத்து விட்டோம் என்று கூறிவந்தார்.
நான் ஜனாதிபதியிடம் இவ்விவகாரம் தொடர்பில் கலந்து பேசினேன். ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கர்தினாலுக்கு முழுமையாக வழங்கும் படி நான் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டேன். பின்பு ஆணைக்குழுவின் அறிக்கை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறிக்கையைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் கடிதம் ஒன்று வழங்கும் படி நான் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அத்தோடு இது தொடர்பில் அதாவது நாங்கள் மேற்கொண்ட புலன் விசாரணைகள் தொடர்பில் முன்வைப்பு ஒன்றினைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டிக் கொண்டேன். ஆனால் இதுவரை அவர்கள் எமக்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை.
இது தொடர்பில் அவர்களைத் தொடர்பு கொண்டு வினவினால் அது நீண்ட அறிக்கை. நாங்கள் அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று தான் கூறிவருகிறார்கள். ஆனால் அடிக்கடி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அறிக்கையை வாசித்து முடிக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஏதாவது கூறினால் அல்லது ஊடக மாநாடுகளில் கருத்து வெளியிட்டால் அவற்றுக்கும் பதில் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கர்தினால் தீர்வொன்றுக்கு வரவேண்டிய தேவையிருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்முடன் சேர்ந்து தீர்வு பெற்றுக் கொள்வோம். நான் வருடாந்தம் கூறி வருகிறேன். நாமனைவரும் ஒன்றிணைந்து இவ் விவகாரத்திற்கு தீர்வு காணுவோம் என்று. ஆனால் அவர்கள் இணங்குகிறார்கள் இல்லை. தொடர்ந்து இவ்விவகாரத்தில் அரச தலைவருக்கு அல்லது அரசாங்கத்துக்கு சவால் விடுக்கிறார்கள்.
இவ்விவகாரத்தில் கர்தினால் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்தை மையமாக வைத்து சாதி, மத பேதங்களை நாட்டில் உருவாக்க வேண்டாம். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்பு முதலாவது அமைச்சரவை கண்டியிலே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது. அன்றைய தினத்திற்கு முதல் நாள் ஹோட்டலிலே தங்கினோம். நானும் அங்கு சென்றிருந்தேன். இந்த வைபவத்தில் நானும் கலந்து கொண்டேன். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டலஸ் அலகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து உதய கம்மன்பிலவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஏதாவது செய்யுங்கள். பெரிய பிரச்சினை. அலி சப்ரிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாமென கர்தினால் கூறுகிறார். அலி சப்ரி முஸ்லிம் ஒருவர் என்பதால் அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என்கிறார் என தெரிவிக்கப்பட்டது.
இரவு முழுவதும் இவ்விவகாரம் பேசப்பட்டது. இறுதியில் அலி சப்ரிக்கு நீதி அமைச்சு வழங்கப்பட்டது. இவ்வாறான அழுத்தங்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது.
நாமனைவரும் ஒன்றிணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும். இல்லையேல் இன்னும் 10 வருடங்கள் சென்றாலும் இதையே பேசிப் பேசி இருப்பார்கள். கத்தோலிக்க வாக்குகள் மற்றும் எதையாவது எதிர்பார்த்து செயற்பட வேண்டாமென நான் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் என்றார்.– Vidivelli