றிப்தி அலி
“முஸ்லிம் அரசியலில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்கக்கூடாது. இதனால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்ற அறைகூவலொன்றினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் விடுத்திருந்தார்.
முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட சமயத்திலேயே இவ்வாறு ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல்கள் வரும் போது முஸ்லிம் கட்சிகள் தமக்கான ஆசனங்களைத் தக்க வைப்பதற்காக கூட்டிணைந்து செயற்பட்ட வரலாறுகளும் உள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச் சின்னமொன்றின் கீழ் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டன.
அதேபோன்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்திலும் இணைந்து போட்டியிட்டன. இதற்கமைய, முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் (தற்போது ஐக்கிய தேசிய கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தராசு சின்னத்தில் மு.கா.வும் அ.இ.ம.கா.வும் இணைந்து போட்டியிட்ட போது அலி சப்ரி றஹீம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
வேட்புமனுப் பட்டியலிலுள்ள ஒருவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நீக்கினால், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பும் நீக்க வேண்டும் என அதில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறி வருகின்றது.
இதற்கமைய, தங்கம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்தது.
இது தொடர்பிலான அறிவிப்பு கடந்த நவம்பர் 4ஆம் திகதி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம். நயீமுல்லாஹ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நீக்கத்தினை அடுத்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து அலி சப்ரி றஹீம் நீக்கப்பட்ட விடயத்தினை பாராளுமன்ற செயலாளருக்கு உடனடியாக அறிவித்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வறிதாக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், இன்று வரை குறித்த நடவடிக்கையினை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான எம். நயீமுல்லாஹ் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் மேற்படி இரண்டு கட்சிகளினதும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவினை தங்கம் கடத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கடந்த 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் கொழும்பில் ஊடக மாநாடொன்றினை கடந்த 16ஆம் திகதி நடத்தி இந்த விடயங்களை அம்பலப்படுத்தினார். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இக்கட்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கியமையினால் இந்த விடயத்தில் ஹக்கீம் தலையிட்டு நியாயமொன்றினை பெற்றுத் தர வேண்டும் எனவும் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சகோதர கட்சியாகும். முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான நயீமுல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும், அக்கட்சித் தலைவரின் பிரத்தியேக செயலாளரும் மைத்துனருமாவார். இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்கட்சியின் தராசு சின்னத்திலேயே போட்டியிட்டது.
இதற்கு பதலளிக்கும் வகையில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளரான நயீமுல்லாஹ் விசேட ஊடக அறிக்கையொன்றினை கடந்த 17ஆம் திகதி வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து ஜனாஸாக்களை எரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கிய போது அலி சப்ரி றஹீமை நீக்குவதற்கான தீர்மானத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுக்கத் தவறியிருந்தது.
அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டால் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் புத்தளம் நகர பிதா மர்ஹ_ம் கே.ஏ. பாயிஸ் பாராளுமன்ற உறுப்பினராக வந்து விடலாம் என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது தட்டிக் கழிக்கப்பட்டிருக்கலாம். இப்பட்டியலில் அடுத்துள்ள நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
இவரை எம்.பி.யாக்குவதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அலி சப்ரி றஹீமை நீக்க முயற்சித்து வருகின்றது. ஒரு கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களது அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளதன் அவசியத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்திய போதும் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.
ஏற்கனவே கட்சியின் உயர்பீடம் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும் இருக்கின்ற போது நான் தனியாளாக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாத நிலையிலிருந்தேன்.
எனவே அதற்கான கால அவகாசம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவித்தேன். என்றாலும் அவர்களோ தமது கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட வேட்பாளரை தம்முடன் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததை ஊகிக்க முடிந்தது” என நயீமுல்லாஹ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் நயீமுல்லாஹ்வின் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும். இந்தக் கட்சியின் மூன்று இணைத் தவிசாளர்களில் ஒருவராக ரவூப் ஹக்கீமின் மூத்த சகோதரரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் செயற்படுகின்றார்.
15 உயர் பீட உறுப்பினர்களை கூட்டி இந்த விடயத்தில் தீர்மானமொன்றினை எடுப்பதற்கு அக்கட்சியின் செயலாளர் நயீமுல்லாஹ் இன்னும் கால அவகாசம் தேவை எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாத்திரமல்லாமல், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நயீமுல்லாஹ்வின் இந்த செயற்பாடு எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதைப் பாதிக்கவும் கூடும்.
இதேவேளை, அலி சப்ரி றஹீமினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவினை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் எதிர்கொள்வதற்கு தேவையான விடயங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி நேர்மையினை நிரூபித்துக்காட்டுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை நயீமுல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால், குறித்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தலையிட்டு ஒப்பந்தத்திற்கமைய அடுத்த கட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள நயீமுல்லாஹ்விற்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் தங்கம் கடத்தியதன் மூலம் சமூகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்க இரு கட்சிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும். அதுமாத்திரமன்றி, இந்த விவகாரத்தினால் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் மென் மேலும் பிளவுகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.- Vidivelli