முஸ்லிம் மத போதகரின் பரத நாட்டியம் தொடர்பான கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது
மதங்கள் நிந்திக்கப்படுவதை உலமா சபை வன்மையாக கண்டிக்கிறது
(எம்.வை.எம்.சியாம்)
மெளலவி ஒருவரினால் பரதநாட்டியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த விடயம் மிகுந்த கவலையளிக்கிறது. மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதனை வன்மையாகக்கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை முன்னெடுக்க வேண்டும் என உலமா சபையிடம் இந்து அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இஸ்லாமிய மதப்போதகர் ஒருவர் பரதநாட்டியம் தொடர்பில் தவறாக பேசிய விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அகில இலங்கை இந்துமார் அமைப்பு, இலங்கை பிராமண அமைப்பு மற்றும் இலங்கை மக்கள் பேரவை அமைப்புகளுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டது.
இங்கு கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித்,
மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கப்படுவதனை வன்மையாக கண்டிக்கிறோம். முஸ்லிம் மத போதகர் ஒருவரால் பரதநாட்டியம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவரால் வெளியிடப்பட்ட கருத்து இந்துமக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு மதங்கள், கலாசாரங்கள் நிந்திக்க படுவது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதாகும். பிற மதங்கள் தொடர்பில் தவறாக விமர்சிப்பதை இஸ்லாம் முற்றாக தடுத்துள்ளது என்றார்.
அகில இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி ஸ்ரீ கு.வை.கா .வைத்தீஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,
அனைத்து சமயங்களும் அன்பினையும் சகிப்புத்தன்மையையும் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து நல்ல விடயங்களையே குறிப்பிடுகிறது. இதனை நாம் அடிப்படையாகக் எடுத்துக்கொள்ள வேண்டும்.மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து இந்து மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இந்த விடயம் தொடர்பில் உலமா சபை எமக்கு தெளிவுபடுத்தியது.
சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உலமா சபை தமது கண்டனத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி இருந்தார்கள்.
மௌலவி குறிப்பிட்ட கருத்து தவறு என ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இது போன்ற தவறு மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட காணொளியையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்கள். எனவே அந்த வகையில் எமது சமய தனித்துவத்தை பாதுகாப்பது போன்று ஏனைய சமயத்தவர்களுடைய தனித்துவத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை பிராமணர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரம்ம ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயர் கூறுகையில்,
இந்த ஒன்று கூடல் மிக முக்கியமானது. மெளலவியின் கருத்து இந்து மக்களின் மத்தியில் கவலையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தெரிந்தோ அல்லது தெரியாமலோ இடம் பெற்றுவிட்டது. தவறை திருத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உலமா சபைக்கு உள்ளது என்றார்.
இலங்கை மேலவை அமைப்பின் உப தலைவர் தர்ஷக்க சர்மா குருக்கள் கூறுகையில்,
மெளலவியின் கருத்து மதங்களுக்கு பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்தது. தவறை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள உலமா சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மௌலவி பகிரங்கமாக மன்னிப்பு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை நாம் மன்னிக்க வேண்டும் என்றார். – Vidivelli