ICCPR சட்டத்தின் கீழ் ரம்ஸி ராசிக் கைது விவகாரம்: பொலிஸார் தவறிழைப்பு
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது உயர்நீதிமன்றம் 1 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவு
( எம்.எப்.அய்னா)
சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்யப்பட்டமை, தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும் அது அவரது அடிப்படை உரிமைகளை மீறிய நடவடிக்கை எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்து தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி ரம்ஸி ராசிக்குக்கு அவரை கைது செய்த சி.ஐ.டி.யின் கணினி மற்றும் பகுப்பாய்வு பயிற்சி பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, அப்போதைய சி.ஐ.டி. பணிப்பாளர் டப்ளியூ. திலகரத்ன ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், ரம்ஸி ராசிக்கின் சட்டவிரோத கைதுக்கு அரசும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதால் அரசும் ஒரு மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பறிவித்துள்ளது.
எஸ்.சி.எப்.ஆர். 135/2020 எனும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு ரம்ஸி ராசிக் சார்பில், சட்டத்தரணி ரம்சி பாச்சாவினால் தன்னையே மனுதாரராக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது. ரம்ஸி ராசிக் கைது செய்யப்படும் போது நிலவிய சூழ்நிலைகளால், அவரை மெய்நிகர் மனுதாரராக கொண்டு சட்டத்தரணி ரம்சி பாச்சாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவில் சி.ஐ.டி. பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, சி.ஐ.டி.யின் அப்போதைய பணிப்பாளர் திலகரத்ன, சட்ட மா அதிபர் உள்ளிட்ட 6 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர். இந்த மனுவானது உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அளுவிஹார, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழாம் விசாரித்தது.
இதன்போது ரம்சி ராசிக்குக்காக சட்டத்தரணி நுவன் போப்பகே ஆஜரானதுடன், பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி இந்துனி புஞ்சிஹேவா ஆஜரானார்.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, பேஸ் புக் சமூக வலைத் தளத்தில் தான் எழுதிய கட்டுரையில் ரம்சி ராசிக், அனைத்து இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான ஜிஹாத் (போராட்டம் – ideological war) ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரம்ஸி ராசிக்கிற்கு முகநூல் வாயிலாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
2020 ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலீஸாரிடம் தனக்கு விடுக்கப்படும் மிரட்டல்களைக் குறித்து முறையிட்டார். ஆனால், இந்த மிரட்டல்களைக் குறித்து விசாரணை செய்யாமல் பொலிஸார் ராசீக்கைக் கைது செய்தனர்.
இது குறித்து விசாரணை செய்த சி.ஐ.டி., ரம்சி ராசிக்கை நீதிவான் நீதிமன்றத்துக்கு பிணை அளிக்கும் அதிகாரமற்ற சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்ப்பாட்டு சட்டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்திருந்தது.
‘ எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக (பப்லிக்) பதிவிட்டு வந்துள்ளார்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28 ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்களிலும் அவர் இதுபோன்ற பதிவுகளைப் பதிவிட்டுள்ளார் என்றும் அதற்கு சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது மக்களிடையே குழப்பத்தை தூண்டும் வகையில் இருந்துள்ளமையை தெளிவாகின்றது.’ என சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரிகள் நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக கூறினர்.
எனினும் சில வாரங்களுக்கு முன்னர் அந்த குற்றவியல் வழக்கிலிருந்து ரம்சி ராசிக் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையிலேயே அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவிலும் உயர் நீதிமன்றம் அவரது கைது சட்டத்துக்கு புறம்பானது என தீர்மானித்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகள் சார்பில் முன் வைக்கப்பட்ட தர்க்கத்தில், ரம்சி ராசிக்கின் வலைப் பதிவு இன முரண்பாடுகள், பகைமை உணர்வை தூண்டுவதாகவும் அதனாலேயே கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எனினும் ரம்சி ராசிக் சார்பில் உயர் நீதிமன்றுக்கு முன் வைக்கப்பட்ட வாதத்தில், ரம்சி ராசிக் அவருக்கு அரசியலமைப்பு ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையே பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றின் தீர்ப்பை நீதியரசர் யசந்த கோதாகொட, ஏனைய இரு நீதியரசர்களின் இணக்கத்தோடு எழுதியிருந்த நிலையில், அதில் முகப் புத்தக பதிவு ஊடாக ஒரு விடயத்தை வெளிப்படுத்துவது, அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ரம்சி ராசிக்கின் பதிவில் ‘ சிந்தனை ஜிஹாத்’ எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளமையை மிக விரிவாக விளக்கியுள்ள நீதியரசர், அதற்கான ஆயுதமாக பேனையையும் விசைப் பலகையையும் பயன்படுத்த வேண்டும் என ரம்சி ராசிக் அப்பதிவிலேயே குறிப்பிட்டுள்ளதன் ஊடாக, அது வன்முறைக்கான அழைப்பல்ல என்பது மிகத் தெளிவாக புரிவதாகவும் அவ்வாறான பின்னணியில் எந்த ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளாது சி.ஐ.டி.யினர் அவரை தன்னிச்சையாகக் கைது செய்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கைது செய்தல், குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தல் மற்றும் சந்தேக நபர் ஒருவரை விளக்கமறியலில் வைத்தல் போன்றன தண்டனை தன்மையை கொண்ட தனி மனித சுதந்திரத்துடன் நேரடியாக தாக்கம் செலுத்தவல்ல குற்றவியல் நீதி நடவடிக்கை என்பதை பொலிஸ் அதிகாரிகள் நினைவில் கொள்ளல் வேண்டும்.
ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும், அவர்களின் பிரிக்க முடியாத அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்த விரும்பும் பிற நபர்களுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய குற்றவியல் நீதி நடவடிக்கைகள் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளபடி சுதந்திரமாகவும், புறநிலையாகவும், மிகவும் கவனமாகவும், கண்டிப்பாகவும் நடத்தப்பட வேண்டும்.
காணக் கூடிய ஒரு குற்றத்தை செய்த சந்தேக நபரை சிரேஷ்ட அதிகாரியின் வழிகாட்டல் அல்லது சட்ட ஆலோசனை இன்றி சுயமாக தீர்மானம் எடுக்கும் நிலைமை ஒன்றின் போது, கைது செய்தல் அல்லது செய்யாதிருத்தல் தொடர்பில் தீர்மானத்தை அவசராமாக எடுக்க வேண்டி இருப்பின் , இந்த நீதிமன்றம் ஓரளவுக்கு இலகு போக்கினை காண்பித்திருக்கலாம்.
எனினும் இங்கு, முதலாவது பிரதிவாதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கவும், சட்ட மா அதிபரின் சட்ட ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும், அதன் பிறகு மெய்நிகர் மனுதாரரை (ரம்ஸி ராசிக்) கைது செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் போதுமான அவகாசம் இருந்தது.
பொறுப்பான சட்ட அமுலாக்க அதிகாரியாக செயல்படுவதற்குப் பதிலாக, முதலாவது பிரதிவாதி தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 120, சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் பிரிவு 6(1) ஆகியவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தியுள்ளார். மெய்நிகர் மனுதாரரை (ரம்ஸி ராசிக்) கைது செய்து, அவரை 5 மாதங்கள் மற்றும் 1 வாரம் வரை விளக்கமறியலில் வைத்தமை தண்டனைக்கு சமமானதாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமானது, சட்டமா அதிபர் திணைக்களத்தை நேரடியாக அணுகக்கூடிய இலங்கைப் பொலிஸில் ஸ்தாபிக்கப்பட்ட, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த திணைக்களம் என்பதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. எனவே, முதலாவது பிரதிவாதிக்கு அரசின் சட்ட ஆலோசகர்கள், சிஐடியின் மூத்த அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் என பலரை அணுக முடியுமான சந்தர்ப்பம் தாராளமாக இருந்தது.
முதலாவது பிரதிவாதி இந்த வழக்கில் தாக்கல் செய்த சத்தியக் கடதாசியில் , தனது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டதாக கூறவில்லை. சட்ட ஆலோசனையின்படி செயல்பட்டதாகவும் கூறவில்லை. எனவே, மெய்நிகர் மனுதாரரின் (ராம்சி ராசிக்) அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்கு முதலாவது பிரதிவாதி முதன்மை பொறுப்புதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான பொறுப்பு முதலாவது பிரதிவாதியுடன் முடிவடையாது, ஆனால் ரம்சி ராசிகை கைது செய்வதில் அவரது நடத்தை தொடங்குகிறது.
மிகவும் துரதிர்ஷ்டவசமான விடயம் என்னவென்றால், போதுமான காரணமின்றியும் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறும் வண்ணமும் நபர்களைக் கைது செய்தமை தொடர்பில், மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பொதுவான இடமாக இந்த நீதிமன்றம் மாறிவிட்டது.
இத்தகைய கைதுகள் பெரும்பாலும் சட்டத்திற்குப் புறம்பாக தடுப்புக் காவல் கால எல்லைகளை கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பல சட்டவிரோதக் கைதுகளை உன்னிப்பாக அவதானிக்கும் போது, காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருப்புரிமையைப் பயன்படுத்த அனுமதிக்காமல், ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட அதிகாரம் படைத்தவர்களால் வற்புறுத்தப்பட்ட நிலைமைகள் வெளிப்படுகின்றன.
இந்த நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியங்கள் படி, அதிகாரத்தில் உள்ள சில நபர்கள் இந்த கைது தொடர்பில் வழிகாட்டிய நிலைமையை காட்டுகிறது. ஆனால் மனுதாரரால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் பற்றாக்குறை மற்றும் முதலாவது பிரதிவாதியின் நிலைப்பாட்டைக் கவனத்தில் கொள்ளும்போது, அதற்கான உறுதியான தீர்மானத்துடன் எந்த முடிவுக்கும் வர முடியாது.
சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை தவிர்த்து, அரசியல், நிர்வாக அதிகாரம் படைத்தோர் பொலிசாருக்கு வழக்கு அல்லது எந்தவொரு விடயம் தொடர்பிலும் ஆலோசனை வழங்குவதில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டும் என்பதை நான் அவதானிக்கின்றேன்.
பொலிஸ் அதிகாரிகள் போன்ற சட்ட அமுலாக்க அதிகாரிகள், சுதந்திரமாக, பாரபட்சமின்றி, நடுநிலையாக தங்கள் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டத்திற்கு இணங்கிச் செயல்படவும், சட்டப்பூர்வமாக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘விருப்பு தீர்மான’ அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகள் :
(இ) அரசியலமைப்பின் 12(1), 13(1), 13(2) மற்றும் 14(1)(அ) ஆகிய உறுப்புரைகள் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மெய்நிகர் மனுதாரரின் (ரம்சி ராசிக்) அடிப்படை உரிமைகளை முதலாவது பிரதிவாதி மீறியுள்ளார்.
(ii) மெய்நிகர் மனுதாரரின் ( ரம்சி ராசிக்) மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை மீறும் போது, முதலாவது பிரதிவாதி, ஒரு பொலிஸ் அதிகாரியாகவும், சிஐடி அதிகாரியாகவும், அவரது அலுவலகத்தில் செயற்பட்டுள்ளார். எனவே, மெய்நிகர் மனுதாரரின் (ரம்சி ராசிக்) மேற்கூறிய அடிப்படை உரிமைகளை 1வது பிரதிவாதியால் மீறப்பட்டதற்கான பொறுப்பை 2வது பிரதிவாதியான சிஐடி பணிப்பாளரும் அரசும் ஏற்க வேண்டும். ஏனெனில், உரிமை மீறலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என உறுதி செய்யப்பட்டால் அன்றி, தமது அலுவலகத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து ஊழியர்களின் செயல்களுக்கும் அரசு பொறுப்பாகும்.
(iii) முதலாவது பிரதிவாதி இந்தத் தீர்ப்பின் ஒரு மாதத்திற்குள் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து மெய்நிகர் மனுதாரருக்கு (ரம்சி ராசிக்) 30,000/= ரூபாவை செலுத்த வேண்டும்.
(இவ்) இரண்டாவது பிரதிவாதி தனது தனிப்பட்ட நிதியிலிருந்து மெய்நிகர் மனுதாரருக்கு( ரம்சி ராசிக்) 30,000/= ரூபாவை செலுத்த வேண்டும்.
(v) அரசு மெய்நிகர் மனுதாரருக்கு ( ரம்சி ராசிக்) ஒரு மில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.
(vii) 6வது பிரதிவாதி, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் இந்தத் தீர்ப்பில் உள்ள கொள்கைகளின் சுருக்கத்தை பொலிஸ் மா அதிபருக்கு வழங்க வேண்டும். பின்னர் அது அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் மா அதிபரால் ஆலோசனையாக வழங்கப்படல் வேண்டும். அவை பொலிஸ் அதிகாரிகளால் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படல் வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணைகளுக்கு மனுதாரருக்கு ஏற்பட்ட செலவை அரசு வழங்க வேண்டும்.- Vidivelli