35 ஆயிரம் வீடுகள் அழிப்பு 10,500 மக்கள் படுகொலை
போரை நிறுத்த இஸ்ரேல் மறுப்பு முஸ்லிம் நாடுகள் சவூதியில் கூடுகின்றன
பலஸ்தீனின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்குதல்களில் நேற்று மாலை வரை 10500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவின் மனிதாபிமான நெருக்கடி தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் உடனடியாக போரை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேலும் பல நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன. எனினும் ஹமாஸினால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள 240 பேரும் விடுவிக்கப்படாத வரை போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹ{ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பலஸ்தீன விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அரபு லீக் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ரியாத்தில் நடைபெறுகின்ற நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய மற்றொரு மாநாட்டை சவூதி அரேபியா ஏற்பாடு செய்துள்ளது. பலஸ்தீன விவகாரத்தில் முஸ்லிம் நாடுகளை ஒரே நிலைப்பாட்டுக் கொண்டுவருவதை இந்த மாநாடு நோக்காகக் கொண்டுள்ளதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்ப்பதாக உலகெங்கிலுமிருந்து அரபு நாடுகள் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே இம்மாநாடுகள் இடம்பெறவுள்ளன.
இதனிடையே பலஸ்தீனின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடாத்தி வரும் தாக்குதல்களில் நேற்று மாலை வரை 10569 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டாக்டர் அஸ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 4324 சிறுவர்களும் 2823 பெண்களும் 649 வயோதிபர்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கு மேலதிகமாக 26475 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 214 பேர் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரையான தாக்குதல்கள் மூலம் சுமார் 2550 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 1350 பேர் சிறுவர்களாவர். இவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
193 மருத்துவ ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 45 அம்பியூலன்ஸ்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
மருந்துப் பொருட்கள், எரிபொருளுடன் மருத்துவ சேவையாளர்கள் காஸாவுக்குள் நுழைவதற்கும் காயமடைந்த ஆயிரக் கணக்கானோர் காஸாவை விட்டு வெளியேறுவதற்கும் அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தரை வழியாக இஸ்ரேலியப் படைகள் காஸாவினுள் நுழைந்ததைத் தொடர்ந்தும் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல்களில் இதுவரை 33 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 260 பேர் காயமடைந்துள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
காஸாவின் மொத்த சனத்தொகையான 2.3 மில்லியன் பேரில் 1.5 மில்லியன் பேர் இதுவரை இடம்பெயர்ந்துள்ளனர். காஸா மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்காக இஸ்ரேலிய இராணுவம் தினமும் 4 மணி நேர அவகாசம் வழங்குகிறது. இதனால் நேற்று முன்தினம் மாத்திரம் ஒரே நாளில் 15 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு திங்கட் கிழமை 5000 பேரும் ஞாயிற்றுக் கிழமை 2000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா. தகவல்களின்படி வடக்கு காஸாவில் எரிபொருள், நீர் மற்றும் கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சகல பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன. பல பேக்கரிகள் குண்டு வீச்சினால் முற்றாக அழிவடைந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 முதல் நவம்பர் 7 வரையான ஒரு மாத காலத்தில் 212000 வீடுகள் குண்டு வீச்சினால் சேதமாகியுள்ளன. இவற்றில் 35 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 258 கல்வி நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 51 வீதமான வைத்தியசாலைகள் தமது செயற்பாட்டை நிறுத்தியுள்ளன. 57 அம்பியூலன்ஸ்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 167 பள்ளிவாசல்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
இதுவரை 41 ஊடகவியலாளர்கள் மோதல் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளதாக எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் 36 பேர் பலஸ்தீன ஊடகவியலாளர்களாவர். லெபனானல் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஒரு லெபனான் ஊடகவியலாளரும் ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடாத்திய தாக்குதலில் 4 இஸ்ரேலிய ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli