மஹிந்தவின் அரசியல் பயணம் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றது. பிரதமர் பதவிக்குப் போராடி படுதோல்வி கண்டு இன்று மஹிந்த ராஜபக் ஷ எதிர்கட்சித் தலைவர் பதவியினை பொறுப்பேற்பதிலும் போட்டியிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக் ஷ முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் தோல்வியினையே சந்தித்து வருகின்றன. பிரதமர் பதவியை பறித்துக் கொள்வதற்காக எடுத்த முயற்சியும் மஹிந்தவுக்கு பாரிய சவாலாக அமைந்திருந்தது. தற்போது எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்தும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு இரண்டு தெரிவுகள் எழுந்துள்ளன.
செய்யும் திருட்டு செயற்பாடுகளையும் முறையாக செய்யமுடியாத பொய்காரர்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் மாறியுள்ளனர். மஹிந்த உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை ஏற்றிருந்தனர். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சவால் உருவாகிவிட்டதெனத் தெரிந்ததும் தெளிவாகப் பொய்கூறி உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.
தவறுகளை முறையாக செய்யாமல் தவிக்கின்றனர் எதிர்த்தரப்பினர். கடந்த காலங்களில் நாங்கள் பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர்கள் என குறிப்பிட்டு வந்தவர்கள் இன்று மன தைரியமில்லாமல், நம்பிக்கையில்லாமல் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் அப்பட்டமாகப் பொய் கூறிவருகின்றனர்.
51 நாள் பாரிய போராட்டத்தின் பின்னர் மீண்டும் ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றத்தினை பலப்படுத்தி அரசியலமைப்புக்கு அமைவாக வெற்றிபெற்று பெரும்பான்மைக்கு அமைவாக ஆட்சி அமைத்துள்ளோம். கடந்தகால அரசியல் நிலைமைகளை எதிர்த்ததன் காரணமாகவே ஜனநாயகத்தை வெற்றி கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் நாட்டின் ஜனநாயகத்துக்கு முரணான பயணத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளோம். இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு சாதகமான பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனையவர்களின் பிழையான ஆலோசனைகளின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிழையான தீர்மானங்களை முன்னெடுத்து நாட்டு மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத் தினையும் ஏற்படுத்தியிருந்தார். தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏனையவர்களின் ஆலோசனைகளை கேட்டு தீர்மானங்களை முன்வைக்காமல் ஜனநாயக ரீதியாக, சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்றார்.
-Vidivelli