சுதந்திர ஊடகவியலாளர் லக்மால் டி சில்வா கொலை: நாட்டைவிட்டு தப்பிச் சென்ற மேஜர் நிரோஷன் கட்டாரில்
கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை
சுதந்திர ஊடகவியலாளர் லக்மால் டி சில்வாவின் கொலை தொடர்பில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட நிலையில், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ள மேஜர் நிரோஷன் தற்போது கட்டாரில் தொழில் புரிவதாகத் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. முன்னெடுத்துள்ள நடவடிக்கை பிரகாரம் அவரின் மனைவியிடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் அது தெரியவந்ததாக சி.ஐ.டி. நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு அறிவித்தது. இந்நிலையில் அவரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டார்.
இந்த் நிலையில் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இராணுவத்தின் கெமுனு படைப் பிரிவைச் சேர்ந்த, அப்போது சாதாரண இராணுவ வீரரும் யுத்தத்தில் அங்கவீனமடையும் போது சார்ஜண்ட் தர நிலையிலுமிருந்த சிந்தக வர்ணகுமார என்பவரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.
கடந்த்த டிசம்பர் 10 ஆம் திகதி மாலை சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறைக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட அவரை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக சி.ஐ.டி. கைது செய்திருந்த நிலையில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் பிணை தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை என தெரிவித்த மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, சந்தேக நபரான இராணுவ வீரரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிவரை நீடித்தார்.
இந்த நிலையிலேயே இந்த விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபரான அப்போதைய லெப்டினன் கொமாண்டரும் தற்போது மேஜர் தர அதிகாரியுமான நிரோஷன் அல்விஸ் என்பவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறையில் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சி.ஐ.டி. கடந்தவாரம் கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களையும் உடன் கைது செய்து இன்றைய தினத்துக்குள் மன்றில் ஆஜர்செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இருதின, லக்பிம ஆகிய பத்திரிகைகளின் ஊடகவியலாளராகவும் ஸத்தின பத்திரிகையின் பாதுகாப்பு விவகார ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய லக்மால் டி சில்வா, கடந்த 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரி ஒருவருடன் இரவு உணவுக்கு செல்வதாக முச்சக்கர வண்டியொன்றில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்த அவர் மறு நாள் தெஹிவளையின் குறுக்கு வீதியொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இது தொடர்பில் மிக நீண்ட விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. சந்தேக நபர்களை கைது செய்ய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli