ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வலுவிழந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று நியமனம் பெற்றனர்.
நேற்றுக்காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது பாதுகாப்பு, சட்டம்–ஒழுங்கு, மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு எவருக்கும் வழங்கப்படவில்லை. குறித்த அமைச்சுகள் தொடர்ந்தும் ஜனாதிபதி வசம் வைத்துள்ளார்.
பெரும்பாலும் நேற்றைய தினம் பதவியேற்ற அமைச்சர்கள் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக அமைச்சுக்கள் இணைக்கப்பட்டுள்ள.
முஸ்லிம் அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீனுக்கும் மேலதிகமாக அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இதேவேளை, முஸ்லிம் சமய விவகார அமைச்சு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹலீமுக்கு வழங்கப்பட்டது.
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு 36 பேரின் பெயர்பட்டியல் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் மாலை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த 36 பேரின் பெயர்ப்பட்டியலில் 8 பேரின் பெயரை நீக்கிவிட்டு ஏனைய 28 பேரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு ஜனாதிபதி உடன்பட்டே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் பிரேரிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, பாலித ரங்கே பண்டார ஆகிய இருவரின் பெயர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அரச தரப்புக்கு மாறிய லக் ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜய முனிசொய்சா ஏ.எச்.எம். பௌசி மற்றும் பியசேன கமகே ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு அவசர கலந்துரையாடல் ஒன்று ஜனாபதியின் உத்தியோக வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் ராஜித சேனாரத்ன, ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும் நவீன் திசா நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விபரங்கள்
- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
- ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்
- காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர்
- லக் ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
- ரவூப் ஹக்கீம் – நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
- திலக் மாரப்பன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
- ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர்
- ரவி கருணாநாயக்க – மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்
- வஜிர அபேவர்த்தன – உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்
- ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வாணிபத்துறை, நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
- பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
- பீ. ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்
- கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
- ரஞ்சித் மத்தும பண்டார – பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- கயந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
- சஜித் பிரேமதாச – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
- அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்
- பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.
- சந்திராணி பண்டார – மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்
- தலதா அதுகோரள – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
- அகில விராஜ் காரியவசம் – கல்வி அமைச்சர்
- எம்.எச்.அப்துல் ஹலீம் – தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
- சாகல ரத்நாயக்க – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
- ஹரீன் பெர்னாண்டோ – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
- மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
- தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
- மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர்
-Vidivelli