ஜனாதிபதியின் தீர்மானத்தில் எமக்கு நம்பிக்கையில்லை
காலத்தையும் மக்கள் பணத்தையும் விரயம் செய்யாத வகையில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் என முஸ்லிம், கிறிஸ்தவ தரப்புகள் வலியுறுத்து
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் குறித்ததான உண்மைநிலைமை தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை நம்ப முடியாது என முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தரப்புகள் தெரிவித்துள்ளன.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம், தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் இதனால் ஜனாதிபதியின் கூற்றில் முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கத்தோலிக்க சபை யின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பர்ணாந்து, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கமைய அமைக்கப்படும் குழுவால் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எம்.எச்.ஏ ஹலீம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் உண்மை நிலையை அறிய பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் விஷேட ஜனாதிபதி விசாரணைக்குழு நியமிக்கப்படும் என்ற ஜனாதிபதியின் தீர்மானத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையொன்றே தேவை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்படாத பல திடுக்கிடும் உண்மைகள் அஸாத் மெளலானாவினால் சனல் 4க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனல் 4 ஆவணப்படம் வெளியானதும் அரசாங்கத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.
அஸாத் மெளலானா வெளிநாட்டில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு பொய்களைக் கூறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறுகிறார்.
சனல் 4 ராஜபக்ஷ குடும்பத்தின் எதிரி இதனாலே இவ்வாறான ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளது என நாமல் ராஜபக்ஷ கூறுகிறார். ஜனாதிபதி எல்லா விபரங்களையும் வெளியிட முடியாது என்று கூறுகிறார். இவ்வாறு எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
அத்தோடு அஸாத் மெளலானா ஏன் பல வருடங்கள் கழித்து இவ்வாறு சனல் 4 க்குத் தெரிவித்துள்ளார் என்பதையும் ஆராய வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலின் பின்னணி அரசியலைக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே உள்ளுர் தெரிவுக்குழு மூலமோ ஜனாதிபதி விசாரணைக்குழு மூலமோ உண்மையைக் கண்டறிய முடியாது. சர்வதேச விசாரணையொன்றே இது தொடர்பில் நடத்தப்பட வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை சிறில் காமினி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி நியமிக்கத் தீர்மானித்துள்ள குழுவும் நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கமாட்டாது.முன்னெ
நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி குழுவொன்று நியமிப்பேன் உரிய விசாரணை நடத்துவேன் என தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகும்.குழு நியமனம் மக்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடாகும்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில் இதற்கென பாராளுமன்றக் குழு அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான ஒரு குழு நியமிப்பதானது மக்களின் பணத்தை வீணடிப்பதாகும். அத்தோடு மக்களை ஏமாற்றுவதாகும். எனவே இதனை விடுத்து சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். – Vidivelli