-சபீர் மொஹமட்
இலங்கையின் சமீப கால வரலாற்றை எடுத்து நோக்கினால் தொல்பொருள் என்பது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களிடையே பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்போது குமுறிக்கொண்டுள்ள ஒரு எரிமலையாக உருவெடுத்துள்ளது.
முல்லைத்தீவு புளியங்குளம் வீதியிலிருந்து வலது புறமாக 26 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தால் இந்த சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை பிரதேசத்தை அடையலாம். இங்கே காணப்படுகின்ற குருந்தூர் விகாரையின் வரலாற்றை நோக்கினால் மகாவம்சத்தின் 33 மற்றும் 34 ஆம் அத்தியாயங்களுக்கு அமைய கி.பி.100- –103க்கு இடைப்பட்ட காலத்தில் சத்தாதிஸ்ஸ மன்னனின் மூன்றாவது மகனான ‘கல்லாட நாக’ மன்னன் ‘குருக்ன பாசகா’ என்ற பெயரில் இங்கே ஒரு விகாரையை கட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், 571-– 604 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதலாம் அக்போ மன்னன் இந்த விகாரையை புனர்நிர்மாணம் செய்ததாக மகாவம்சத்தின் 41வது அத்தியாயம் குறிப்பிடுகின்றது. அத்துடன் புத்த பெருமான் தனது இரண்டாவது இலங்கை பயணத்தின் போது இந்த இடத்திற்கு விஜயம் செய்ததாக புராண கதைகளும் உள்ளன. மேலும், இந்நாட்டில் உள்ள தொல்பொருள் இடங்கள் குறித்து 1905 இல் எச்.சி.ப. பெல் என்ற இலங்கையின் முதலாவது தொல்பொருள் ஆணையாளர் எழுதிய Archaeological Survey of Ceylon என்ற இதழில் 32 ஆம் பக்கம் முதல் 35 ஆம் பக்கம் வரை குருந்தூர் மலை மற்றும் அதன் இடிபாடுகள், அங்கே காணப்பட்ட பழங்கால குடியேற்றங்கள் பற்றிய குறிப்புக்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே இலங்கை தொல்பொருள் திணைக்களம் குருந்தூர் மலை தொடர்பில் தலையீடு செய்கின்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் உள்ளது.
குருந்தூர் இந்துக்களுடையதா பௌத்தர்களுடையதா ?
குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளையும், குடியிருப்புக்காணிகளையும் வனவளத் திணைக்களம் மற்றும், தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந் நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்குமாறும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தியும் வருகின்றனர்.
யுத்த காலத்தில் குருந்தூர் பிரதேசத்திலே விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி ஒன்றும் பின்னர் இலங்கை இராணுவத்தினரின் முகாம் ஒன்றும் இருந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா முல்லைதீவு மற்றும் மன்னார் பிரதேச பிராந்திய காரியாலயத்தின் உதவி பணிப்பாளர் ஆர்.ஜீ. ஜயதிலக கூறினார்.
தொல்பொருள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னர் முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு இராணுவத்தின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் குருந்தூர்மலை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்கு காணப்பட்ட தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பழங்கால நினைவுச் சின்னங்களை இனங்கண்டுள்ளார்கள். அதன் பின்னர் அதே ஆண்டு அவை தொல்பொருள் சின்னங்களாக அரச வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்னரே குறித்த பிரதேசம் 1933ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக ‘கெசட்’ செய்யப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கே சென்றுள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பாரியளவு வனப்பிரதேசம் மக்களால் கைப்பற்றப்பட்டிருந்தமையை அவர்களால் அவதானிக்க முடிந்ததாக கூறினார். ‘2009 ஆம் ஆண்டு முதல் நாங்கள் கூகுள் செட்டிலைட் ஊடாக இந்த வனப்பிரதேசத்தை ஆராய்ந்து பார்த்ததில் 2019,20 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலேயே பாரியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்ட காடுகள் மக்களால் அபகரிக்கப்பட்டு இருந்தன. சாதாரண மக்களுடைய வீடுகளோ காணிகளோ அந்தப் பிரதேசங்களில் இருந்தமைக்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை’ என உதவி பணிப்பாளர் ஆர்.ஜீ. ஜயதிலக கூறினார்.
குருந்தூர் மலை பிரதேசத்தில் காணப்படுகின்ற குருந்தி பௌத்த விகாரை மற்றும் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் ஆகிய இரண்டு மத வழிபாட்டு தலங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தற்போது உக்கிரமான நிலையை அடைந்து வருகின்றது. இரு வேறு மதத்தினரும் குருந்தூர் மலை பிரதேசத்தில் காணப்படுகின்ற தமது மத வழிபாட்டு தலத்திற்கு நாடு பூராகவும் இருந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபடவும் அந்நிய மதத்தவர்களிடமிருந்து தமது வழிபாட்டு தலங்களை பாதுகாக்கவும் அணிதிரண்டு வருமாறு பக்தர்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதன் பின்னர் அங்கே ஏற்பட்ட கைகலப்பும் தற்போதுவரை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் மிக முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி தென்இலங்கையில் இருந்து ஐந்து பேருந்துகளில் சிங்கள பெரும்பான்மையினரும் இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வடகிழக்கு பிரதேசங்களில் இருந்தும் அங்கே வருகை தந்ததுடன் நூற்றுக்கணக்கான விசேட அதிரடிப் படையினரும் அங்கே பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வண்ணம் அமைதியை நிலை நாட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்த சம்பவத்தின் பின்னர் பகிரங்கமாகவே உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர மற்றும் சன்ன ஜயசுமன போன்ற சிங்கள அரசியல்வாதிகளும் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய தமிழ் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் இந்த விவகாரம் குறித்து பேசி வருகின்றார்கள்.
கடந்த 26ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை ஆர்ப்பாட்டக்குழுவொன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஒன்று உருவாகியுள்ளதுடன் பின்னர் சிறிது நேரத்தில் காவல்துறையினர் அதனை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதற்கு முன் தினம் “துணிவு இருந்தால் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ள காவல்துறையினரை அகற்றிவிட்டு மக்கள் முன்னிலையில் விவாதம் செய்ய வருமாறு” பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அமைச்சர் பொன்னம்பலத்திற்கு சவால் விடுத்ததுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பொன்னம்பலத்தின் வீட்டை முற்றுகையிட வருமாறு சிங்கள மக்களுக்கு பகிரங்கமான அழைப்பையும் விடுத்திருந்தார்.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்றும் வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய நூலின் எழுத்தாளர் சன்ன ஜயசுமன ‘குருந்தி பற்றி கதைக்காமல் அடுத்த 20 ,30 வருடங்களுக்கு இலங்கையில் அரசியல் பற்றியோ, தலைமைத்துவம் பற்றியோ எவராலும் கனவுகாண முடியாது என்ற தீர்க்கதரிசனத்தை நான் கூறுகின்றேன்” என கூறியமை இன்னும் பல கேள்விகளை எழுப்புகின்றது.
‘‘குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாங்கள் பல வருடங்களாக மத வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தக் கோயில் முன்பு பண்ணையாளர்களின் பராமரிப்பில் இருந்து வந்ததுடன் பொங்கல் நிகழ்வுகள் உட்பட கிராமிய வழிபாடுகள் இங்கே இடம் பெற்ற வரலாறுகள் உள்ளன’’ என ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் மேலாண்மை வாரியத் தலைவர் டீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இங்கே பௌத்த விகாரை ஒன்று காணப்படுவதும் அதில் வழிபாடுகள் மேற்கொள்வதிலும் தங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இங்கே காணப்படுவது முற்று முழுதாக ஒரு அரசியல் பிரச்சினையே அன்றி எந்தவொரு மதப் பிரச்சினையும் அல்ல என்றார்.
பழமையான கோவிலுக்கு எந்த ஆதாரமுமில்லை
குருந்தி விஹாரை பகுதியில் பழைய சிவன் கோயிலொன்று இருந்தமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என குருந்தி விஹாரையின் தலைமை தேரர் கல்கமுவ சாந்தபோதி கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1979 ஆம் ஆண்டு சிறில் மேத்யூ திருகோணமலை மாவட்ட ஆளுநருடன் இந்த வழிபாட்டுத்தலத்தை அபிவிருத்தி செய்வதற்காக இங்கே வருகை வந்துள்ளார். பின்னர் அவர் கொழும்புக்கு சென்று உரிய அனுமதிகளை பெற்று மீண்டும் 1981 ஆம் ஆண்டு இங்கு வந்தபோது இந்த பகுதியில் தமிழ் மக்கள் சிலைபீடத்திற்கு மேலே சட்டவிரோதமான முறையில் ஒரு கோயிலை கட்டியுள்ளனர். அவ்வாறு செய்துள்ளமையின் நோக்கம் சிறில் மேத்யூ இந்த இடத்தை விகாரையாக அபிவிருத்தி செய்வதை தடுப்பதாகும். பின்னர் அவற்றை அகற்றுமாறு பல கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1983க்குப் பிறகு இது குறித்து எதுவும் செய்யப்படவில்லை. அதன் பின்னர் தான் நான் இங்கே 2018ஆம் ஆண்டு வருகை தந்தேன் என கல்கமுவ சாந்தபோதி தேரர் குறிப்பிட்டார்.
தேரர் மேலும் குறிப்பிடுகையில், எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இங்கே வருகை தந்து தமது மத வழிபாடுகளில் ஈடுபடலாம். பௌத்தர்களாகிய நாங்கள் ஒருபோதும் அவர்களை தடுக்க மாட்டோம். ஆனால் இங்கே காணப்படுகின்ற பௌத்த புராண விகாரையின் சிலை பீடத்தை தங்களுடைய சிவ கோயில் என உரிமை கோருவதை எம்மால் ஏற்க முடியாது. ஏனென்றால் சகல விதமான தொல்பொருள் வரலாற்று ஆதாரங்கள் மூலமாகவும் இது ஒரு புராண பௌத்த விகாரை என்பது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்தார்.
தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக தொல்பொருள் பெறுமதி வாய்ந்த எந்த ஒரு இடத்திலும் புதிதான எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியாது. எனினும் குருந்தூர்மலையை அண்டிய பிரதேசத்தில் புதிதாக விஹாரையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாங்கள் தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட பிரிவின் சட்டத்தரணி ரோஹன காரியவசமிடம் வினவினோம். அதனை முற்று முழுதாக நிராகரித்த ரோஹன காரியவசம் அங்கே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புதிதான எந்த ஒரு விகாரையையும் அமைப்பதற்கான எந்தவொரு அனுமதியும் எவருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அகழ்வு பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் பெறுமதி வாய்ந்த தூபியை நாங்கள் பாதுகாப்பதற்காக மீள அதனை முன்பு இருந்ததைப் போல் காட்டியுள்ளோம் என தெரிவித்தார். மேலும் இது குறித்து தொல்பொருள் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தின் உதவி பணிப்பாளர் ஆர்.ஜீ.ஜயதிலக கூறுகையில், இது போன்ற சந்தர்ப்பங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரும், திணைக்களத்தின் கட்டடக்கலை பணிப்பாளரும் இணைந்து குறித்த தொல்பொருள் சின்னத்தை பாதுகாப்பது குறித்து முதலில் கலந்துரையாடுவார்கள். அதன் பின்னர் குறித்த தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேச தொல்பொருள் சட்டங்களுக்கு உட்பட்ட விதத்தில் அவற்றின் தொல்பொருள் பெறுமதி குன்றாத விதமாக அவற்றை மீள கட்டியெழுப்புவார்கள். அதற்கு அமைவாகவே குறித்த தூபி முன்னர் இருந்தது போன்று மீளவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முல்லைத்தீவு நீதிமன்றம், குருந்தி மலை பிரதேசத்தில் புதிதாக எந்தவொரு கட்டுமானத்தையும் அமைக்க முடியாது என 2022 ஜூன் மாதம் 12ஆம் திகதி கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்தது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த நீதிமன்ற கட்டளை மீறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. AR-673-2018 முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் கட்டளையொன்று வழங்கப்பட்டதை தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.தனஞ்சயன் இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றம் மேற்கொண்ட இரண்டு கள விஜயங்களை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் எந்த ஒரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ள முடியாது என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு பணித்திருந்த போதிலும் அது உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிேலயே முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
குருந்தி விகாரையைப் பொறுத்தமட்டில், அது சிங்கள பௌத்த மக்களுடையதா அல்லது தமிழ் பௌத்த மக்களால் வழிபடப்பட்டதா என்பதுபற்றி வாதாடுவது இது சிங்கள பௌத்தர்களுடையது என உரிமை கொண்டாடுவது போன்றே மற்றுமொரு பிரச்சினையாகும். குருந்தி போன்ற இடங்கள் பாரம்பரிய வரலாற்று தலங்களாக பார்க்கப்பட வேண்டும். அவ்வாறின்றி அதனை உரிமை கொண்டாடுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் நிர்மால் தேவசிரி குறிப்பிட்டார்.
கடந்த ஒரு சில மாதங்களாக குருந்தூர் மலை அல்லது குருந்தி விகாரை சம்பந்தமான அறிக்கையிடல்களை நோக்கினோமேயானால் அனேகமான தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் இரு வேறு விதங்களில் இந்த சம்பவத்தை அணுகியுள்ளார்கள். ஒரு சில ஊடகங்கள் உண்மையை மறைத்தும் இன்னும் சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாகவும் பலவிதமான கருத்துக்களை சமூகத்தில் பரப்பியுள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக “குருந்தி விகாரையை மையமாகக் கொண்டு மிகப்பெரிய ஒரு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது” என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் சர்வதேச புலனாய்வு சேவை ஒன்று மூலம் இலங்கை அரசுக்கு இன மற்றும் மத கலவரம் குறித்து எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பகிரப்பட்டன.
எனினும் கடந்த 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஊடகங்களில் வெளிவந்த செய்தி போலியானது எனவும் அவ்வாறான எந்த ஒரு எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் குருந்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வரலாற்றிலே யுத்தங்களும் கலவரங்களும் ஒருபோதும் நிலையான வெற்றியையோ நாடுகளுக்கு அபிவிருத்தியையோ வழங்கவில்லை. மாறாக எஞ்சியது, மனிதகுல நாகரிகத்தின் வீழ்ச்சியும் மனிதனுடைய அழிவுமே ஆகும். இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் ஒவ்வொரு கற்களும் திரும்பத் திரும்ப இந்தியாவில் இன்றும் இந்து முஸ்லிம்களிடையே எறியப்பட்டு வருகின்றது. அதே வரலாற்று தவறை நோக்கித்தான் நாமும் இன்று சென்று கொண்டிருக்கின்றோம். – Vidivelli