எம்.என் முஹம்மத்
பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு ஆசியக் கண்டத்தில் உள்ள அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதன் ஆரம்பமும் வரலாறும் நோவினைமிக்கது. 200 மில்லியனிற்கு மேல் மக்கள் தொகை உடைய பாகிஸ்தான் உலகின் ஆறாவது மக்கள் தொகை கூடிய நாடாகும்.
முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவுள்ள பாகிஸ்தான், தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ளது. பாகிஸ்தான் உலகில் 26 ஆவது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தானின் முதன்மை பிரச்சினைகளாக தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானின் அரசியலில் அதன் சக்தி வாய்ந்த இராணுவத்தின் வகிபாகம் சிக்கலானது. அந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் அவர்களது பதவிக்காலத்தை பூரணமாக முடிப்பதற்கு அந்த நாட்டு இராணுவம் விடவில்லை. சுல்பிகார் அலி பூட்டோ கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது மகள் பெனாஸிர் அலி பூட்டோ குண்டு வைத்து கொல்லப்பட்டார். தற்போதைய பிரதமரின் சகோதரர் நவாஸ் ஷரீப் ஊழல் மோசடியில் குற்றவாளியாக்கப்பட்டார். இவை எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள மிகப் பிரதானமான காரணி அந்த நாட்டின் இராணுவம் மற்றும் இந்திய அச்சுறுத்தலும் ஆகும்.
ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்கா பாகிஸ்தான் ஊடாக சோவியத் ஒன்றியத்தை எதிர் கொண்டது. இந்த யதார்த்தத்தை பேணுவதற்கு புத்திஜீவித்துவ கலந்துரையாடல் அற்ற இராணுவ பொறிமுறை அமெரிக்காவிற்கு அவசியமாக இருந்தது. இன்றும் அதே சமன்பாடு தொடர்கின்றது என்பதுவே மிகக் கசப்பான உண்மையாகும்.
இம்ரான்கான் பதவியேற்று மிகக் குறுகிய காலத்தில் சீன பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஒரு பங்காளியை இந்த உரை ஊடாக இழக்கும் நிலையை ஏற்படுத்தியது, மட்டுமன்றி தெற்காசிய அரசியல் சமனிலையை மாற்றியது. அப்போதே இம்ரான்கான் இலக்கு வைக்கப்பட்டார். அவருக்கு எதிரான செயற்திட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ‘லண்டன் திட்டம்’ எனக் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
மேலைத்தேய உலகுக்கு அணு சக்தி கொண்ட இஸ்லாமிய உலகு ஒரு பெரும் சவாலாக மாறுகின்றது. இந்திய ஆதிக்கத்தை குறைக்க மேலைத்தேய சக்திகளிற்கு பாகிஸ்தான் அவசியப்படுகின்றது. அதே போல் இஸ்லாமிய உலகை எதிர்கொள்வதற்கும் மேலைத்தேய சக்திகளிற்கு பாகிஸ்தான் தேவைப்படுகிறது. எப்போதும் இந்திய,பாகிஸ்தான் இராஜதந்திர சமனிலை உறவை பேணி வந்தது. இம்ரான் இவை எல்லாவற்றையும் துடைத்தெறிந்தார் .
நேற்று மாலை இம்ரான்கானிற்கு அவரது சட்டத்தரணிகள் மூன்று பேரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகின்றது.
பாகிஸ்தானின் பிரச்சினையின் ஆழத்தை இம்ரான் கானின் சட்டத்தரணி ஒருவர் ‘இராணுவம் இல்லாத நாடு, இராணுவம் உள்ள நாடு’ எனச் சுருக்கமாக சொல்கின்றார்.
இம்ரான்கான் கடந்த சனிக்கிழமை, அரச பரிசில்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு அரசியல் தடைக்கு உட்பட்டுள்ளார். இது 70 வயதுடைய கானின் அரசியலை முடிவிற்கு கொண்டும் வரும் தெளிவான இலக்கைக் கொண்டது. அவர் ராகுல் காந்தியை விட பலமாக வெளிவருவதற்கும் வாய்ப்பு உள்ளது அல்லது மங்கி வரலாறாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
ஆனால் தேர்தல் ஒன்று சுயாதீனமாக நடந்தால் கானின் தஹ்ரீக் இன்ஸாப் கட்சி பெரு வெற்றியீட்டும் என்பதுவே அநேக அரசியல் அவதானிகளின் கருத்தாகும். மக்கள் சக்தியும், பூலோக அரசியல் சதுரங்க விளையாட்டு வெற்றி பெறும் என்பது தெரிவதற்கு நீண்ட நாள் எடுக்காது.
கானிற்கு எதிராக 50க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருப்பதன் முக்கிய பின்னணி கான் பாகிஸ்தானின் அர்துகான் ஆக மாறக் கூடாது என்பதாகும்.
கான் பன்னாட்டு நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் மூலம் செலுத்தும் வரவுசெலவு சமநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்தார். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க பாதுகாப்புச் செலவுகளை மட்டுப்படுத்தினார். இதன்மூலம் சில பொதுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.
கான் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கினார். இவைகளை ஒரு நாட்டில் செய்வது எவ்வளவு சவால் மிக்கது என்பது கானின் அரசியல் உலகிற்கு சொல்லும் மிகப் பெரிய செய்தியாகும்.
அரசியல்,பொருளாதார இரு துறைகளில் பட்டம் பெற்றவர். சிறந்த விளையாட்டு வீரர், ஒரு விளையாட்டு வீரரிற்கு உள்ள தன்னம்பிக்கையுட் , வெற்றி பெற முடியும் என்ற அவரது நம்பிக்கை யதார்த்தமே உலக அரசியல் போக்கை மாற்றக் கூடியது.- Vidivelli