மைத்திரி – கோத்தா கொலை சதி விவகாரம்: நாமல் குமாரவின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட 39 ஜி.பி. தரவுகள் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, சி.சி.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரத்தின் தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் தடுப்பு படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டுள்ள பெருந்தொகை தரவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய குறித்த தொலைபேசி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கையேற்கப்பட்ட நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் ஹொங்கொங் நாட்டின் டேட்டா எக்ஸ்பேர்ட் எனும் நிறுவன ஆய்வுகூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது இந்த தகவல்கள் மீள பெறப்பட்டதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க லொக்குஹெட்டி நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார். அதன்படி அந்த தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்த 39 ஜி.பி. கொள்ளளவு கொண்ட தகவல்கள், குரல் பதிவுகள் மீளப்பெறப்பட்டு பென் ட்ரைவ் ஒன்றில் சேமிக்கப்பட்டு, குறித்த நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பென் ட்ரைவையும் அது தொடர்பிலான 60 பக்க அறிக்கையினையும் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை பிரதான நீதிவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யில் மனித படுகொலைகள் விசாரணை அறையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க லொக்கு ஹெட்டி அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகினர்.
இதன்போது, ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையான மேசலி தோமஸ் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா விசேட அம்பியுலன்ஸ் வண்டியினூடாக மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பதிரன நீதிமன்றில் பிரசன்னமானார். வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஏற்கனவே முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த பிணை கோரிக்கை மீதான தீர்ப்பை நீதிவான் அறிவித்தார். அதன்படி, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் நாலக சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவித்த நீதிவான், எனினும் அச்சட்டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
அதன்படி, பிணைச் சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள ஒருவர் தொடர்பில் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை, என்பதை சுட்டிக்காட்டிய நீதிவான் ரங்க திசாநாயக்க பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவின் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
அதன்படி, இவ்விசாரணைகள் நிறைவுறும் அவரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டு, இது குறித்த அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் 2019 ஜனவரி 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதன்போது, விசாரணை நிலைமை குறித்து மன்றுக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் இந்திக்க லொக்கு ஹெட்டி தெளிவு படுத்தினார்.
‘இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய நாமல் குமாரவின் தொலைபேசியை நாம் ஹொங்கொங் எடுத்துச் சென்று சோதனை செய்தோம். அதன்போது, 39 ஜி.பி கொள்ளளவு கொண்ட தகவல்கள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் மீளமைக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது. அவற்றை ஒரு பென் ட்ரைவில் இட்டு ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். அது தொடர்பில் 60 பக்க அறிக்கையும் உள்ளது. அவற்றை நாம் இன்று நீதிமன்றிடம் சமர்ப்பிக்கின்றோம். அதன் பின்னர் அந்த பென் ட்ரைவில் உள்ள குரல் பதிவுகளை நீதிமன்றம் ஊடாக பிரதி செய்து அவற்றை தனித் தனியாக கேட்டு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. இதற்கான அனுமதியை தருமாறு கோருகின்றோம்.
அதேநேரம் இந்த விவகாரத்தின் முதல் சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை தோமஸ் தொடர்பிலான விசாரணைகளை மிக விரைவில் நிறைவு செய்து மன்றுக்கு அறிவிப்போம்” என்றார்.
இதன்போது, பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பதிரன, சி.ஐ.டியினர் சந்தேகநபரை கைதுசெய்து விட்டு அவரை விளக்கமறியலில் வைத்து அவருக்கு எதிரான சாட்சிகளை தேடி கொண்டிருப்பதாகவும் இது தேர்தலை இலக்காக கொண்டது எனவும் அடுத்த தேர்தல் வரை இவ்விசாரணை நிறைவு பெறாது எனவும் தெரிவித்தார்.
இதற்கு சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்கு ஹெட்டி கடும் எதிர்ப்பு வெளியிட்டார். குற்றப்புலனாய்வு பிரிவு என்பது தேர்தல்களையோ அரசியல் நடவடிக்கைகளையோ இலக்காக கொண்டு செயற்படும் நிறுவனம் அல்ல எனவும், முறைப்பாடொன்று கிடைக்கும் பட்சத்தில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனமே சி.ஐ.டி. எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் பிணைக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சார்பில் மற்றொரு கோரிக்கை மன்றில் முன்வைக்கப்பட்டது.
நாலக சில்வாவின் முதல் பிள்ளை டெங்கு காய்ச்சலினால் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், தற்போது அவரது ஒரு பிள்ளையான இரண்டாவது மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெறுவதாகவும், சட்டத்தரணி அஜித் பத்திரனவால் வைத்திய அறிக்கையுடன் மன்றில் தெரிவிக்கப்பட்டது. மகனுடன் தொடர்ச்சியாக காலத்தை செலவிடும் நாலக சில்வா தற்போது விளக்கமறியலில் உள்ளதால் டெங்கு காய்ச்சலில் மகனை மீட்க அவரது மானசீக ரீதியிலான தாக்கங்களை குறைக்க வேண்டுமென வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் அதனை கருத்தில் கொண்டு நாலக சில்வாவுக்கு அவரது மகனை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.
இதனை ஆராய்ந்த நீதிவான் ரங்க திசாநாயக்க டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மகனை பார்வையிட உரிய வசதிகளை சந்தேகநபரான நாலக சில்வாவுக்கு செய்து கொடுக்கும் படி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்தல் விடுத்தார்.
-Vidivelli