வீட்டில் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் மஸ்ஜித் சம்மேளனம் பிரதமருடன் பேச்சு
முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே மரணிக்கும் ஜனாஸாக்களை உரிய நேரத்தினுள் அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தேவையான ஆவணங்களை தயார் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளனம் அண்மையில் பிரதமரும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சு நடத்தியது.
அத்துடன் மேற்படி விவகாரம் தொடர்பாக பிரதமரின் கீழ் வரும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தில் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்தது.
சம்மேளன பிரதிநிதிகள் பிரதமரிடம் இது குறித்து விளக்கமளிக்கையில், கடந்த பல மாதங்களாக முஸ்லிம் சமூகம் இந்த இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக கொவிட் தொற்று நோய்களின் போது உருவாக்கப்பட்ட பல நெறிமுறைகள் காரணமாக தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்திலும் தத்தமது வசிப்பிடங்களுக்குள் நிகழும் இறப்புகளை அந்தந்த கிராம சேவகரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். அருகிலுள்ள பொலிஸ் கிளைக்கு அறிவிக்க வேண்டும் போன்ற விடயங்களினால் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள் மிகவும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. அதே நேரம் இஸ்லாமியக் கோட்பாட்டின்படி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது என வலியுறுத்தப்பட்டது.
தேசிய முஸ்லிம் பேரவையின் (NMA) ஆலோசனையின் கீழ், அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் உத்மான் மற்றும் செயலாளர் கே.ஆர்.ஏ.சித்தீக், உள்ளிட்டோர் பிரதமரை சந்தித்து ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இந்த பின்னனியிலேயே, இறப்பிற்கான காரணம் மற்றும் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழின் சரியான மற்றும் பொருத்தமான ஆவணங்கள் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் மேற்படி ஜனாஸா அடக்கம் செய்வதற்கும் மேலும் இறந்து 7 நாட்களுக்குள் இறப்பு சான்றிதழ் பெறமுடியும் என்ற வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளன தலைவர் அஸ்லம் உத்மான் தெரிவித்தார். இலங்கையர்களாகிய நாங்கள் எங்கள் உறவினர்களை, குறிப்பாக அவர்கள் வயதானவர்களாகவும், உடல் நலக்குறைவாகவும் இருக்கும் போது அவர்களைப் பராமரிப்பதற்காக வளர்க்கப்பட்டவர்கள். மரணம் ஏற்பட்டால், குடும்பங்கள் அந்தந்த மத மற்றும் மார்க்க நம்பிக்கைகளின் படி இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு எந்த இடையூறும் அல்லது தாமதமும் இல்லாமல் தமது காரியங்களை விரைவாகச் செய்ய இந்த அறிவிப்பு உதவுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.