ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆரதவளிப்பதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக பண்டார மற்றும் லக் ஷ்மன் செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக பண்டார மற்றும் லக் ஷ்மன் செனவிரத்ன ஆகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிந்தித்து மிகவும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். அத்தோடு சுதந்திர கட்சியிலிருந்து ஆளுந்தரப்பிற்கு செல்பவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அமைச்சு பதவியினையும் வழங்க மாட்டேன் எனவும் உறுதியாக தெரிவித்தார்.
மேலும் விஜயமுனி சொய்சா பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுதந்திர கட்சிக்காக பாடுபட்டிருப்பதாகவும், கட்சியை வளர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படவிருப்பதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கட்சி மீது உண்மையான விசுவாசம் காணப்படுபவராக இருந்தால் அவர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருக்கமாட்டார்.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி என்பதைத் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு முரணாக அந்த மூவரும் செயற்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே தான் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். என்றார்.
-Vidivelli