எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்
பலஸ்தீனில் அகதிமுகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தொடர்ந்து இரண்டு தினங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த முகாம் முற்றாக சேதமடைந்து 12பேர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு தினங்களில் இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் இந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்தேன். குறைந்த பட்சம் கவலையையாவது தெரிவிக்குமாறு கேட்டிருந்தேன். இது தொடர்பாக கண்டனத்தை வெளியிடுவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அது தொடர்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அப்படியானால் எங்களது மனம் எங்கே இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் பலஸ்தீனியர்களின் நண்பர்கள் என்கிறோம். இலங்கை, பலஸ்தீன் நட்புறவுச்சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறோம். ஆனால் ஏன் இந்த தாக்குதல் தொடர்பில் மெளனமாக இருக்கிறது என்பதுதான் புரியாமல் இருக்கிறது.
அதேபோன்று பலஸ்தீனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடவடிக்கை எடுக்கும்போது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை நிராகரிக்கின்றனர். வல்லரசு நாடுகளின் நிலைப்பாடு என்ன என கேட்கிறோம். அதனால் தயவு செய்து இந்த கொடுமைகளை வல்லரசு நாடுகள் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli