வன்செயல்களை முன்னெடுக்க தொடர்ந்து இடமளிக்க முடியாது
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர்மாக்கார்
எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்
பலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் கொடூரமான வன்செயல்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பலஸ்தீனம் தொடர்பாக பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனித வரலாற்றில் மிகவும் துன்பகரமான சூழ்நிலையை நாம் இன்று மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காண்கிறோம். இந்த கொடூரமான வன்செயல்களை அதே நிலையில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பது எந்தவொரு மனிதரதும் மனசாட்சிக்கு ஏற்புடையதொரு விடயமல்ல.
இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வுகாணும் வகையில் சுயாதீனமான இரு தேசங்களை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு எடுத்த தீர்மானத்துக்கு வரலாறு முழுவதும் இலங்கை பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளதும் ஏகமனதான பூரண ஒத்தாசை கிடைக்கப்பெற்றது.
அதிகாரத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ள பலஸ்தீன நிலப்பரப்பில், இன்று ஜெனின் பகுதியில் நடப்பது போல, ஆரம்ப குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கும் அகதிகள் முகாம்களுக்கும் நாளாந்தம் இராணுவம் ஊடுருவி எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சிறு பிள்ளைகளையும் இளைஞர்களையும், பெண்களையும் அச்சுறுத்தி அவர்களை கைதுசெய்வதன் மூலம் ஏழு தசாப்த காலமாக முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள் மற்றும் உலகத்தில் பலமிக்க இராணுவ சக்திக்கு எதிராக தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர்கள் இதுவரை அபிலாசைகளுடன் தாங்கிக்கொண்டிருக்கும் அபூர்வத்தை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும், சர்வதேச நீதிமன்றத்துக்கும் வெறுமனே அறிக்கைகளை சமர்ப்பித்தல் மற்றும் அறிக்கை வெளியிடலுக்கு அப்பால் பூகோள நீதி, மனித உரிமைகள், சர்வதேச சட்டம் தொடர்பான எவ்வித சட்டரீதியான அல்லது நீதிநெறியான பொறுப்புக்களையும் முன்னெடுக்க முடியாது இடையூறாக நடந்துகொள்வதை தொடர்ந்தும் நாம் காண்கிறோம்.
இஸ்ரேலும் பலஸ்தீனும் இரு சுதந்திர தேசங்கள் என்பதை யதார்த்தமாக்கி அந்த தேசங்களில் வாழும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய அனைவரும் சமத்துவமாகவும் நியாயமாகவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் மதித்து, வேறுபாடு காட்டாமல், வாழும் நாளைய தினம் உருவாக வேண்டும். இந்த நீதியையும் நியாயத்தையும் இந்த மசோதா ஊடாக இலங்கைப் பாராளுமன்றம் இன்று உணர்த்தி நிற்கின்றது.
பலஸ்தீன் மண்ணில் வன்முறையை விதைத்தல், அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பில் தொடரும் பலவந்தமான விஸ்தரிப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த இடத்துக்குச் சென்று தேடிப்பார்த்து விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள வேண்டுதலை இஸ்ரேலின் பொறுப்புதாரிகள் கணக்கிலும் எடுக்காமல் இருப்பதை உலகம் அவதானித்துக் கொண்டுள்ளது என்றார்.- Vidivelli