எஸ்.என்.எம்.சுஹைல்
ராஜகிரிய நுராணியா ஜும்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கு அல் மதரஸதுல் நுராணியாவின் வக்பு சொத்துகளை நிதா பவுண்டேஷனின் பெயருக்கு மாற்றம் செய்ய முயற்சிகள் நடப்பதாகக் கூறி அதற்கு எதிராக வக்பு சபையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் குறித்த வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் வக்கு சபைக்கு இல்லை என கூறி, விடயம் வக்பு தீர்ப்பாயம் அதாவது Waqf tribunal க்கு மாற்றப்பட்டது.
என்ன பிரச்சினை?
வக்பு செய்யப்பட்ட ராஜகிரிய நூராணிய இப்ழ் குர்ஆன் மத்ரஸாவுக்குச் சொந்தமான காணிகள் நிர்வாக சபையின் தலைவராக இருப்பவரினால் நிதா அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பள்ளிவாசல் ஜமாஅத் அங்கத்தவர்கள் சிலரால் இரண்டு தடவைகள் வக்பு சபையில் முறைப்பாடளிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
தற்போது இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் விவகாரம் வக்பு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
பள்ளிவாசலின் வரலாறு
நூராணியா ஜும்ஆப் பள்ளிவாசல் என்.ஜே.வீ, குரே மாவத்தை ராஜகிரிய, சிரிஜயவர்தன புறக்கோட்டேயில் அமைந்துள்ளது. ‘‘70 களின் ஆரம்பத்தில் அவ்விடத்தில் ஓலைக்குடிசையால் அமையப்பெற்றிருந்த குர்ஆன் மதரஸாவே இருந்தது. அதில்தான் தானும் ஆரம்ப குர்ஆன் மத்ரஸாவுக்கு சென்றேன். இதற்கான 6 பேர்ச் காணி பவுஸ் கலீல் என்பவரால் வக்பு செய்யப்பட்டதாகும். மேலும் ஒரு பேர்ச் காணி அருகில் இருந்த இன்னொருவரிடமிருந்து பெறப்பட்டது’’ என கூறுகிறார் நிதா பவுண்டேஷனின் ஸ்தாபகரும் ராஜகிரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவருமான அஷ்ஷெய்க் ஹஸன் பரீட்.
மேலும், “நான் பாகிஸ்தானுக்கு சென்று கல்வியை பெற்று நாட்டுக்கு திரும்பிய பின்னர் 1995 களில் குர்ஆன் மத்ரஸா இருந்த குறித்த இடத்தில் ஐங்காலத் தொழுகைக்காக பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அங்கு 15 பிள்ளைகளுடன் ஹிப்ழ் மத்ரஸாவொன்று ஆரம்பிக்கப்பட்டது” எனவும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கீழேயே அவை இயங்கியதாகவும் அவர் கூறினார்.
2001 ஆம் ஆண்டு மார்ச், 28 இல் No. MRCA/13/1/HQ/53 எனும் இலக்கத்தில் நூராணியா குர்ஆன் மத்ரஸா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவானது. இப்பள்ளிவாசலுடன் அல் மதரசதுல் நூராணிய்யா ஹிப்ழ் மத்ரஸா, அல் மத்ரசதுல் நூராணிய்யா குர்ஆன் மத்ரஸா மற்றும் நூராணியா அகதிய்யா பாடசாலையும் இணைந்ததாக செயற்படுகின்றது.
பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குர்ஆன் மத்ரசாவுக்கு பொறுப்பாக மூவர் நியமிக்கப்பட்டனர். இதற்கமைய அஷ்ஷெய்க் ஹஸன் பரீட் மற்றும் மர்ஹூம்களான மொஹமட் பெரோஸ் அமீர்தீன் மற்றும் ஆர்.எம்.சபீக் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நிதாவும் காணி கொள்வனவும்
இதனிடையே, “பத்வா சென்டர் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணமொன்று இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களுக்கான சேவையொன்றை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கனவின் மூலம் எனக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது. எனவே, இந்த நல்ல எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்காக நிதா பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை ஸ்தாபித்து பொதுச் சேவையொன்றை ஆரம்பித்தேன்” என கூறினார் அஷ்ஷெய்க் ஹஸன் பரீட்.
இதற்கமைவாக, குறித்த ராஜகிரிய நூராணியா பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த சில காணித்துண்டுகள் சில கொள்வனவு செய்யப்பட்டன. அவை நிதா பவுண்டேஷனுக்காவே நிதி சேகரிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவை நூராணியா ஹிப்ழ் மத்ரஸா நிர்வாகத்தில் இருந்தவர்களின் பெயரிலேயே எழுதப்பட்டதாகவும் கூறினார் அவர்.
2002, ஜூலை 2 ஆம் திகதி 9.06 பேர்ச் காணியும், அதே தினத்தில் மற்றுமொரு 6.23 பேர்ச் காணியும் 2005 ஏப்ரல் 12 ஆம் திகதி 8 பேர்ச் மற்றும் 27.37 பேர்ச் காணித் துண்டும் 2006 டிசம்பர் 2 ஆம் திகதி 11 பேர்ச் காணியும் வாங்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு பள்ளிவாசல் பரிபாலன உறுப்பினர்களின் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.
நிதா பவுண்டேஷன் என்ற அமைப்பை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஹஸன் பரீத் மௌலவி பல ஆண்டுகள் மேற்கொண்டபோதிலும், 2007 ஆம் ஆண்டு அவ்வமைப்பு கம்பனிகள் சட்டத்தின் கீழ் உத்தரவாத நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.
மத்ரஸாவுக்கு நடந்தது என்ன?
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டளவில் ராஜகிரிய நூராணியா பள்ளிவாசலுக்கு கீழ் இயங்கிய மத்ரஸதுன் நூராணியா ஹிப்ழ் மத்ரஸாவின் இயக்கம் இல்லாமலாக்கப்பட்டது. அத்துடன், நிதா பவுண்டேஷனினால் நடத்தப்படும் MRCA 13/1/AC/125 எனும் பதிவு இலக்கத்துடன் மவாஹிபுல் உலூம் எனும் அரபுக் கல்லூரி அங்கு இயங்க ஆரம்பித்தது. அத்தோடு, மத்ரஸதுன் நூராணியாவுக்கு சொந்தமான காணிகளும் நிதா பவுண்டேஷனுக்கு மாற்றப் பட்டிருந்தமை தெரிய வந்ததாக பள்ளிவாசலின் தற்போதைய பொருளாளர் எம்.ஜே.எம்.நஸ்லி கூறுகிறார்.
முதலாவது மனுதாக்கல்
இதனிடையே, குறித்த காணிகள் குர்ஆன் மத்ரஸாவுக்காக கொள்வனவு செய்யப்பட்டவை என்று அவற்றை தனியார் அமைப்புகளின் பெயருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் உபதலைவர் ஏ.எச்.முஹம்மது இக்பால், செயலாளர் எம்.ஏ.அப்துல் ஹஸன் மற்றும் சட்டத்தரணி ஐ.எல்.எம்.ஹஸன், பொருளாளர் எம்.ஜே.எம்.நஸ்லி, உறுப்பினர்களான எம்.ரி.எம்.நௌஸாட், எச்.எம். அலி உஸ்மான் ஆகியோர் 2016 மார்ச், 24 ஆம் திகதியன்று வக்பு சபையில் முறைப்பாட்டு மனுவொன்றை பதிவு செய்தனர். இதில் பிரதிவாதிகளாக ஹஸன் பரீட் மௌலவி, ஏ.சீ.எம்.இஸ்மாயீல் மற்றும் ஆர்.எம்.சபீக் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
காணி பதிவில் தொடர்ந்தும் நிர்வாகிகளின் பெயர்கள் இருந்தால் குறித்த காணி பிற்காலத்தில் சட்ட ரீதியான சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தினாலேயே அவர்கள் இவ்வாறு வழக்கு தொடர முன்வந்துள்ளனர்.
வழக்கு தொடுனர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் ஆஜராகினர்.
இது தொடர்பான விசாரணை அறிக்கை வக்பு சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீனினால் 2017 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
முதலாம் தீர்ப்பு
இதில், வக்பு செய்யப்பட்ட சொத்துகளை வேறு நபர்களுக்கு விற்பதற்கோ, அன்பளிப்பு செய்வதற்கோ, பள்ளிவாசல் நிர்வாகத்தின் அல்லது உறுப்பினர்களுக்கோ அனுமதியின்றி அதிகாரம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தோடு, நிதா பவுண்டேஷனுக்கு மாற்றப்பட்ட காணிகள் மீண்டும் பள்ளிவாசலுக்கு வழங்க உறுதியளிக்கப்பட்டது. இதற்கமைய பள்ளிவாசலுக்கு இக்காணிகள் மீண்டும் அளிக்கப்பட்டது.
இரண்டாவது மனு
இதனிடையே, 2019 ஆம் ஆண்டு, எம்.ஜே.எம்.நஸ்லி, எம்.ரி.எம்.நௌஷாட், எச்.எம்.ஏ. உஸ்மான், எம்.எச்.எம். பழீல், எம்.எஸ்.எம்.ஸாஷில் ஆகியோரால் வக்பு சபையில் மீண்டும் ஒரு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பிரதிவாதிகளாக, மௌலவி ஹஸன் பரீட், ரஷீத் மொஹமட் சபீக், மொஹமட் முர்ஷிட் முழப்பர், அப்துல்லாஹ் இமாம்தீன், மொஹமட் நவ்றூஷி ரவூப் மற்றும் முஹம்மட் நயீம் முஹம்மட் சமீல் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், நளீம் மற்றும் முர்ஷித் மஹ்ரூபும் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், செய்த் அலி, யூசுப் நசார் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
நிதா வக்பு டிரஸ்டாக பதிவு
இதற்கிடையில் நிதா பவுண்டேஷன் நிதா வக்பு டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி ஜரீர் சுல்தான் ஊடகங்களுக்கு எழுத்து மூலமக அனுப்பி வைத்துள்ள அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று இது தொடர்பான அனுமதிக் கோரிக்கை விடுக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி வக்பு சபையினால் நிதா வக்பு டிரஸ்ட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மனுதாரர்களின் குற்றச்சாட்டு
எனினும், ராஜகிரிய நூராணியா ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபை தொடர்பான பிரச்சினைகள் வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு முதல் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படாதிருக்கிறது. இந் நிலையில் குறித்த பள்ளிவாசலின் கீழ் உள்ள நூராணியா ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸாவுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை இன்னொடு நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய அனுமதியளித்தமை செல்லுபடியற்றது என எம்.ஜே.எம்.நஸ்லி மற்றும் எம்.எஸ்.எம்.ஸாஷில் ஆகியோர் தெரிவித்தனர்.
மத்ரஸாவுக்கு சொந்தமான சொத்தை இன்னொரு நிறுவனத்தை வக்பு டிரஸ்ட்டாக பதிவு செய்து மாற்றிக்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை பல சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. பள்ளி நிர்வாகத்தில் சிக்கல் இருக்கின்ற நிலைமையில் மற்றும் கொரோனா தொற்று வீரியமடைந்து தனிமைப்படுத்தல் நிலவியபோது, ஒன்று கூடலுக்கு தடைகள் போடப்பட்டிருந்த காலத்தில் யாரின் அனுமதியை பெற்று எவ்வாறான அடிப்படையில் இந்த செயன்முறைகளை செய்தனர் என்ற கேள்விகள் எழுந்தமையினால் நாம் பள்ளி நிர்வாகத்தின் கீழ் வாழும் ஜமாஅத்தினர் என்ற அடிப்படையில் வக்பு சபையில் மனு தாக்கல் செய்யததாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.
நிதாவின் பதில்
இதனிடையே, நிதா வக்பு டிரஸ்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வக்பு சபை நிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜரீர் சுல்தான் தெரிவித்தார். “NIDA WAKF TRUST ஆனது தனியார் WAKF TRUST அல்ல. மாற்றமாக வக்ப் நியாய சபையின் கீழ் உள்ள Muslim Charitable Trust ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அஷ் ஷெய்க் ஹசன் பரீட் அவர்களுக்கோ மற்றும் எந்த ஒரு தனி நபரிற்கோ உரிமையானது இல்லை என்பதை வக்பு சபையின் விசாரணையில் சொல்லப்பட்டது.
மேலும், அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும் மற்றும் நேர்காணல்களிலும் நிதாவுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்பதை இத்தீர்ப்பின் மூலம் வக்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான விளக்கங்கள் தேவைப்படுமாயின் முன் அனுமதி பெற்று நிதா காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நிதாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அறிக்கையொன்றின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு அல்ல கட்டளையே
நிதா வக்பு டிரஸ்டாக பதிவு செய்யப்பட்டுள்ளமையால் குறித்த விவகாரத்தை வக்பு சபையால் விசாரிக்க முடியாது என்ற ஆட்சேபனையை பிரதிவாதிகள் தரப்பினர் முன்வைத்ததாகவும் அதற்கமைய விவகாரம் விசாரிக்கும் அதிகாரம் வக்பு டிரிபியூனலுக்கு இருப்பதாக தெரிவித்தார் மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நளீம்.
அத்தோடு, இது விடயமாக வக்பு சபைக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இன்மையால் வக்பு டிரிபியுனலில் இது குறித்து விசாரணைகள் இடம்பெறும். இதன்போது, குறித்த வக்பு சொத்தை உரிய தரப்புக்கு பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். வக்பு சபை வெறுமனே கட்டளையைத்தான் பிறப்பித்திருக்கிறது. தீர்ப்பு எதனையும் வழங்கவில்லை. எனவே, நீதியை பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
குறித்த காணிகள் நிதா வக்பு டிரஸ்ட்டின் கீழ் இருக்க வேண்டுமா? அல்லது மனுதாரர்கள் கூறுவதற்கமைய நூராணியா ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸாவுக்கு கீழ் இருக்க வேண்டுமா என்பதை வக்பு டிரிபியுனலே முடிவு செய்யும். எனவே, நீதமான தீர்ப்பை வக்பு தீர்ப்பாயம் (டிரிபியுனல்) வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.- Vidivelli