முஸ்லிம்கள் உணர மறுக்கும் ஓருண்மை

0 448

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் சில முஸ்லிம் பிர­ப­லங்கள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­ஹவைச் சந்­தித்து முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி உரை­யாடி பல கோரிக்­கைகள் அடங்­கிய மகஜர் ஒன்­றையும் அவ­ரிடம் சமர்ப்­பித்­த­தா­கவும், ஜனா­தி­பதி அவர்கள் தனது இந்­திய விஜ­யத்தை முடித்த பின்னர் அக்­கோ­ரிக்­கை­க­ளைப்­பற்றி நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் செய்­திகள் வெளி­வந்­தன. இது வழ­மை­யாக நடக்கும் ஒரு நாடகம். முஸ்­லிம்கள் தமது வைப­வங்­க­ளுக்கு அர­சியல் தலை­வர்­களை அழைப்­பதும், அவர்­க­ளுக்கு மாலை­கள் ­போட்டு வர­வேற்று அவர்­களின் புகழ் பாடி விருந்து படைத்து விழாவின் முடிவில் விருந்­தி­னர்­க­ளுடன் தமது பிரச்­சி­னை­க­ளைப்­பற்றி எடுத்­து­ரைத்து சலு­கை­களை எதிர்­பார்ப்­பதும் நாட்­சென்ற கதை. இதனை முஸ்­லிம்­களின் வியா­பார அர­சி­யலின் ஓர் அங்கம் எனவும் அழைக்­கலாம். ஆனால் பிரச்­சி­னை­களின் யதார்த்த உண்­மையை அல்­லது அவற்றின் அடிப்­படைக் கார­ணத்தை உணர்ந்து அவற்­றிற்கு நிரந்­தர பரி­கா­ர­மொன்றை மேற்­கொள்­ளாது காலத்­துக்குக் காலம் எழும் பிரச்­சி­னை­க­ளுக்கே முடிவு தேட முனை­வது, ஏதோ நிரந்­த­ர­மற்ற இவ்­வு­லக வாழ்வில் இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன நமக்­கென சில சலு­கை­களைப் பெற்று அமை­தி­யுடன் வாழ்ந்­து­விட்டு நிரந்­த­ர­மான பர­லோக வாழ்வை நோக்கி நகர்­வதே ஒரு முஸ்­லி­முக்கு அழகு என்ற தவ­றான வைதீ­க­மார்க்கத் தத்­து­வத்தின் பிர­தி­ப­லிப்­பே­யன்றி வேறில்லை.

அந்தப் பிர­ப­லங்கள் சமர்ப்­பித்த மக­ஜரில் அடங்­கிய மத­ர­சாக்கள் பற்­றிய பிரச்­சினை, இஸ்­லா­மிய நூல்கள் பற்­றிய பிரச்­சினை, திரு­மண விவா­க­ரத்து சம்­பந்­த­மான பிரச்­சினை என்ற பல சமூக நோய்­களின் அடிப்­படைக் கிருமி எங்கே என்­பதை ஆராய்ந்து கண்­டு­பி­டித்து அந்­தக்­கி­ரு­மியைக் கொல்லும் மருந்தை அணு­காது ஒவ்­வொரு நோய்க்கும் தனித்­த­னியே மருந்து தேடு­வது பிர­யோ­ச­ன­மற்­றது என்­ப­தையும் ஒரு நோயைத் தீர்த்தால் இன்­னொரு நோய் வேறொரு விதத்தில் உரு­வாகும் என்­ப­தையும் ஏன் முஸ்­லிம்கள் உண­ர­ம­றுக்­கி­றார்கள் என்­ப­துதான் ஒரு புதி­ராக இருக்­கி­றது. ஜனா­தி­ப­தி­யையும் அமைச்­சர்­க­ளையும் சந்­தித்துக் கெஞ்­சு­வதும் கொஞ்­சு­வதும் பிர­ப­லங்­களின் செல்­வாக்குப் பெரு­கு­வ­தற்கு உப­யோ­கப்­ப­டலாம். தேர்தல் காலம் வரும்­போது முஸ்­லிம்­களின் வாக்­கு­களைக் கவர அவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் உத­வலாம். அந்த நோக்கில் பார்க்­கப்­போனால் இப்­பி­ரச்­சினைகள் தீராமல் இருப்­பதே இப்­பி­ர­ப­லங்­க­ளுக்கு நல்­லது எனத் தெரி­ய­வில்­லையா? இதுதான் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் அந்­த­ரங்க இர­க­சி­யமோ?

முஸ்லிம் பிரச்­சி­னை­களின் தோற்றம் எங்கே? ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக சௌஜன்ய உற­வுடன் சகல இனங்­க­ளு­டனும் வாழ்ந்த முஸ்­லிம்கள் ஏன் அண்மைக் காலத்தில் பிரச்­சி­னைக்­கு­ரிய ஓர் இன­மாக மாறினர்? இதை விளங்­கு­வ­தற்கு இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்குப் பிற்­பட்ட வர­லாற்றை நாட­வேண்­டி­யுள்­ளது. எனினும் சுதந்­திரம் கிடைப்­ப­தற்கு முன்­னரே 1915 இல் சிங்­கள பௌத்த இனத்­து­வே­ஷத்தின் முத­லா­வது பாடத்தை முஸ்­லிம்கள் படித்­தனர். முஸ்­லிம்கள் ஆயிரம் ஆண்­டு­க­ளாக இலங்­கையில் வாழ்ந்­தி­ருந்­தாலும் அவர்கள் இந்த நாட்­டுக்கு உரி­ய­வர்­க­ளல்லர், அன்­னி­யர்கள் என்ற பாடத்தை சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு முதலிற் கற்­பித்­தவர் இலங்­கையின் தேசி­யத்­த­லைவன் என்­ற­ழைக்­கப்­படும் அந­கா­ரிக தர்­ம­பால. முஸ்­லிம்­களை அர­பு ­நாட்­டுக்கு அனுப்பு என்று அவர்தான் பிரித்­த­னிய குடி­யேற்ற ஆட்­சி­யா­ளர்­களை வேண்­டினார். அந்தக் கோரிக்­கைக்கு தமி­ழினம் அப்­போது ஆத­ரவு கொடுக்­க­வில்லை. அதற்குக் காரணம் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் போன்ற தமிழ் தலை­வர்­களின் கருத்தில் முஸ்­லிம்கள் இஸ்­லாத்தைத் தழு­விய தமி­ழரே என்­ப­தாகும். எவ்­வா­றா­யினும் தர்­ம­பால நினைத்­த­துபோல் எதுவும் நடக்­க­வில்லை. அக்­க­ல­வ­ரத்தின் பின்னர் எந்த ஒரு முஸ்­லிமும் நாட்­டை­விட்டுத் துரத்­தப்­ப­டவும் இல்லை, ஓடவும் இல்லை. இலங்கை மண்­ணி­லேயே மேலும் இறுக்­க­மாகக் கட்­டுண்டு வாழ­லா­யினர். ஆனால் பௌத்த சிங்­கள மக்­க­ளுக்­கு ­மட்­டுமே இலங்கை சொந்­த­மான ஒரு நாடு என்ற ஒரு புனை கதையை வர­லாற்று உண்­மை­யென நம்பச் செய்­தவர் தர்­ம­பால. அந்தப் புனை கதையே உண்மை எனக்­க­ரு­தப்­பட்டு பௌத்த சிங்­களப் பேரி­ன­வா­த­மாக சுதந்­தி­ரத்­துக்குப் பின்னர் வள­ர­லா­யிற்று.

அந்தப் புனை ­க­தையின் முத­லா­வது அத்­தி­யா­யமே 1948 இல் சுதந்­திர நாடா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கைக் குடி­யு­ரிமைச் சட்டம். 19ஆம் நூற்­றாண்டில் இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்டு, பிரித்­தா­னி­யரின் கோப்பி, தேயிலை, றப்பர் தோட்­டங்­களில் கூலி­க­ளாக அமர்த்­தப்­பட்டு இந்த நாட்டின் வரு­வாய்க்கு உழைத்த பல்­லா­யிரக் கணக்­கான தமி­ழர்­களின் குடி­யு­ரிமை ஒரே நொடியில் பறிக்­கப்­பட்டு அவர்­களை நாடற்­ற­வர்­க­ளாக்­கி­யது அந்தச் சட்டம். அந்தச் சட்­டத்தின் அந்­த­ரங்கக் காரணம் என்­ன­வெனில் இந்­தியத் தமி­ழர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை கிடைக்­கு­மானால் பௌத்த சிங்­க­ள­வர்­களின் பெரும்­பான்மை ஆட்சி பறி­போகும் என்ற பயம். எனினும் அந்தச் சட்டம் நிறை­வே­று­வ­தற்கு வாக்­க­ளித்த இலங்கை தமி­ழ­ரி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் அர­சி­யல்­வா­தி­களின் கேவ­லத்தை என்­ன­வென்று கூறு­வதோ? பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம் ஓர் அர­சியல் சக்­தி­யாக 1950களில் உரு­வெ­டுத்து இலங்கைத் தமி­ழரின் மேல் குறி­வைக்கும் என்­பதை குடி­யு­ரிமைச் சட்­டத்­துக்குச் சார்­பாகக் கை உயர்த்­திய தமிழ் தலை­வர்­களோ, தமி­ழரைப் பலி கொண்­டபின் அது முஸ்­லிம்­களைத் தாவும் என்­பதை முஸ்லிம் தலை­வர்­களோ உண­ரத்­த­வ­றி­யது அவர்­களின் மட­மையே.

இந்­தியத் தமி­ழரை ெவ­ளி­யேற்­று­வ­துடன் ஆரம்­பித்த பௌத்த சிங்­களப் பேரி­ன­வாதம் இலங்கைத் தமி­ழ­ரின்மேல் பாய்ந்­த­வுடன் முஸ்­லிம்கள் அதனை தமக்குக் கிைடத்த ஓர் அரிய அர­சியல் வரப்­பி­ர­சா­த­மாகக் கரு­தினர். முஸ்­லிம்­களின் வியா­பார அர­சியல் இங்­கேதான் ஆரம்­ப­மா­கி­யது. ஆனால் அதே சமயம் பேரி­ன­வாதம் முஸ்­லிம்­களை அதன் அர­சியல் சது­ரங்க ஆட்­டத்தின் ஒரு பக­டை­யாகப் பாவிக்கப் போகின்­றது என்­பதை முஸ்லிம் தலை­வர்கள் அன்று உண­ர­வில்லை. தமி­ழின நசுக்­கு­தலை இந்­தி­யாவும் இன்னும் சில நாடு­களும் உலக அரங்கில் இலங்­கையின் சிறு­பான்­மைக்கு எதி­ரான பேரி­ன­வா­த­மெனக் கண்­டித்­த­போது அது தவ­றென்­பதை உணர்த்த இலங்கை அரசு முஸ்­லிம்­க­ளுக்குக் கொடுக்கும் சலு­கை­க­ளையே ஆதா­ர­மாகக் காட்­டி­யது. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமி­ழி­னத்தின் கொதிப்பில் கூதல் காய்ந்­தனர். எரி­கின்ற வீட்டில் பிடுங்­கு­வது லாபம் என்­ப­து­போல அவர்­களின் போக்கு அமைந்­தி­ருந்­தது.

அந்த நிலை மாறி­யது 2009 இல். அரசின் படைகள் தமி­ழி­னத்தின் ஆயுதப் போராட்­டத்தை தோற்­க­டித்­த­வுடன் அடுத்து வெளி­யேற்ற வேண்­டி­ய­வர்கள் முஸ்­லிம்­களே என்று பௌத்த சிங்­கள பேரி­ன­வா­திகள் முடிவு செய்­தனர். முஸ்­லிம்கள் அன்­னியர் என்ற கோஷம் மீண்டும் தலை­தூக்­கி­யது. அளுத்­­கம தாக்குதல் அந்தக் கோஷத்தின் வெளிப்­பாடே. அதனைத் தொடர்ந்து பல கல­வ­ரங்­களை முஸ்­லிம்கள் எதிர்­கொள்ள நேர்ந்­தது. சஹ்ரான் என்ற கொடி­யோனின் கொலை வெறிக்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பிரச்­சி­னைகள் பெருகத் தொடங்­கின. பள்­ளி­வா­சல்­களின் முன் புத்தர் சிலை தோன்­றுதல், பள்­ளி­வா­சல்­களே பறி­போ­குதல், மத­ர­சாக்கள் மூடப்­பட வேண்டும் என்ற கூக்­குரல், இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்யத் தடை, முஸ்­லிம்­களின் வியா­பாரப் பகிஷ்­க­ரிப்பு, முஸ்லிம் திற­மை­சா­லி­க­ளின்மேல் அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டுகள், அகழ்­வா­ராய்ச்சி என்ற பெயரில் முஸ்­லிம்­களின் நிலங்கள் பறி­போ­குதல் என்­ற­வாறு ஒன்­றன்பின் ஒன்­றாக பேரி­ன­வா­தி­களின் இம்­சை­க­ளுக்கு முஸ்­லிம்கள் ஆளா­யினர். ஆகவே முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் யாவற்­றுக்கும் பேரி­ன­வா­தமே மூல காரணம் என்­பதை மேலும் உணர்த்த வேண்­டுமா?

இந்த நிலையில் ஒவ்­வொரு பிரச்­சி­னையும் எழும்­போது தலை­வர்­க­ளிடம் ஓடு­வதும் மகஜர் சமர்ப்­பிப்­பதும் நிரந்­தரத் தீர்வைத் தருமா? அல்­லது அப்­பி­ரச்­சி­னை­களின் மூல­கா­ர­ணத்தை அகற்­று­வதால் நிரந்­தரத் தீர்வு ஏற்­ப­டுமா? இரண்­டா­வது வழியே சிறந்­தது என்­பதை ஏன் முஸ்லிம் பிர­ப­லங்கள் இன்­னும்தான் உணர மறுக்­கின்­ற­னரோ? அந்த வழியிற் பய­ணித்து நாட்டின் அர­சி­யலை இன, மதச் சார்­பற்ற ஒன்­றாக மாற்ற வேண்­டு­மென்று சிங்­கள மக்­களின் மத்­தி­யி­லி­ருந்தே குரல்கள் எழுந்­த­போது முஸ்லிம் தலை­வர்கள் அந்தக் குரல்­க­ளுக்கு வலு­வூட்­டி­னார்­களா? இல்­லவே இல்லை. ஏன்?

1950, 1960களில் இலங்­கையின் இட­து­சாரிக் கட்­சிகள் இன, மதச் சார்­பற்ற ஓர் அர­சியல் அமைப்பின் மூலம் நாட்டை சம­தர்மக் கொள்­கை­களின் அடிப்­ப­டையில் கட்­டி­யெ­ழுப்ப நினைத்துத் தேர்­தலில் குதித்­த­போது இரண்டு சிறு­பான்மை இனங்­களும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க மறுத்­து­விட்­டன.

மெளலவிமார் அவர்­களை நாத்­திகர் என்றும் முஸ்லிம் முத­லா­ளி­களோ அவர்­களை தனியார் வியா­பா­ரத்தின் எதி­ரிகள் என்றும் பட்­டஞ்­சூட்டி இன­வாதம் பேசிய கட்­சி­க­ளுக்கே முஸ்­லிம்­களின் வாக்­கு­களை திரட்டிக் கொடுத்­தனர். தமி­ழி­னமோ சிங்­கள இன­வா­தத்­துக்குப் பதி­லடி கொடுக்க தமிழ் இன­வா­தத்தை வளர்த்­தனர். அந்த இன­வாதம் 1983க்குப் பின்னர் விடு­தலைப் புலி­களின் போராட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் அவிழ்த்து விடப்பட்டது. அதற்குப் பதி­லடி கொடுக்­கவே முஸ்லிம் காங்­கிரஸ் என்ற ஒரு முஸ்லிம் இன­வா­தக்­கட்சி உரு­வா­னது. அதனால் ஏற்­பட்ட இலாபம் என்ன? தனிக்­கட்சி இல்­லா­மலே 1950 முதல் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் நடாத்­திய வியா­பார அர­சி­யலை இப்­போது கட்­சி­ய­மைத்து இளைய தலை­முறை மேற்­கொள்­கி­றது. இது­வரை இந்தத் தலை­முறை சாதித்­தவை என்ன? மேலே குறிப்­பிட்ட பிரச்­சி­னைகள் வளர வழி­வ­குத்­த­வர்கள் இவர்­களே என்­பதை வெளிப்­ப­டை­யா­கவே இக்­கட்­டுரை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றது. இனி­யா­வது முஸ்லிம் சமூகம் கண்­தி­றக்­குமா?

பேரி­ன­வா­தி­களின் ஆட்சி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வங்­கு­ரோத்­தாக்கி நாட்­டையே கட­னா­ளி­யாக்கி பதி­னே­ழா­வது முறை­யாக சர்­வ­தேச நாணய நிதியின் கால­டியில் மண்­டி­யிடச் செய்­துள்­ளது. அதனால் விளை­கின்ற கஷ்ட நஷ்­டங்­களை சாதா­ரண மக்கள் தினமும் அனு­பவிக்கின்­றனர். நாணய நிதியும் இலங்­கையின் மத்­திய வங்­கியும் இன்னும் ஓரிரு வரு­டங்­களில் நாட்டின் பொரு­ளா­தாரம் பழைய நிலையை அடையும் என்று கூறு­கின்­றன. ஜனா­தி­ப­தியோ 2048ஆம் ஆண்­ட­ளவில் இலங்கை ஒரு சொர்க்­க­பு­ரி­யாகும் என்று ஆருடம் கூறு­கின்றார். ஆனால் ஜனா­தி­ப­தியோ அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­களோ நாட்டின் அர­சி­யலின் அடித்­த­ள­மாக விளங்கி ஊழல் மலிந்த ஒரு பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்கி நாட்­டையே வங்­கு­ரோத்­தாக்­கிய சிங்­கள பௌத்த பேரி­ன­வாதத்துக்கு முடி­வு­கட்ட முன்­வ­ரு­வ­தாகக் காணோம்.

ஏனெனில் அந்த ஏணியில் கால் வைக்­காமல் ஜனா­தி­ப­தியோ அவரின் ஆத­ர­வா­ளர்­களோ ஆட்­சியில் அமர முடி­யாது. அதைத்தான் தேசிய மக்கள் சக்­தியைத் தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்­சி­களும் உணர்ந்­துள்­ளன. ஆனால் அந்த அடித்­த­ளத்தை தகர்த்­தெ­றியும் வரை இந்த நாடு நிரந்­தர சபீட்­சத்தை அடைய முடி­யாது.

பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் எழு­தப்­ப­டாத ஒரு தத்­துவம் என்­ன­வெனில் ஆட்சி பௌத்த சிங்­க­ளவர் கைகளில் இருக்­கும்­வரை அந்த ஆட்­சி­யா­ளர்கள் யாருக்கும் பதில்­சொல்ல வேண்­டிய அவ­சியம் இல்லை. நாட்­டையும் அதன் பொரு­ளா­தா­ரத்­தையும் எப்­ப­டியும் நிர்­வ­கிக்­கலாம். இன்று நடை­பெ­று­கின்ற ஊழல்­க­ளுக்கு வழி­வ­குத்­ததே இந்தத் தத்­து­வமே. இதனை இனி­யா­வது மக்கள் உணர்­வார்­களா? உதா­ர­ண­மாக, நாட்டின் மொத்தம் 500,000 வரி­யி­றுப்­பா­ளர்­களில் 31,000 பேர் மட்­டுமே வரி செலுத்­து­கி­றார்கள் என்­பதும், 105,000 பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னங்­களுள் ஆக 382 மட்டும் 82 சத­வீத வரியைச் செலுத்­து­கின்­றன என்­பதும் அண்­மையில் வெளி­யா­கி­யுள்ள திடுக்­கிடும் தக­வல்கள்.

நாட்டில் நிலவும் ஊழ­லுக்கு இதை­வி­டவும் சிறந்த ஓர் உதா­ரணம் வேண்­டுமா? இந்தச் சீர­ழி­வையும் அதன் பாது­கா­வ­ல­னான பௌத்த சிங்களப் பேரி­ன­வா­தத்­தையும் களைந்­தெ­றி­யாமல் எந்தப் பொரு­ளா­தாரப் பரி­கா­ரமும் நிலை­யான பலன்­தரப் போவதில்லை.

இன்­றைய நிலையில் தேசிய மக்கள் சக்தி ஒன்றே கடந்த கால இட­து­சாரிக் கட்­சி­க­ளைப்­போன்று இன மத அடிப்­ப­டை­யற்ற ஓர் அர­சி­யலை அமைக்க முன்­வந்­துள்­ளது. 2022 இல் அர­க­லய இளைஞர் ஆரம்­பித்த போராட்­டத்தை வழி­ந­டத்திச் செல்லும் ஓர் இயக்­க­மாக தேசிய மக்கள் சக்தி மாறி­யுள்­ளது. அதன் பொரு­ளா­தாரக் கொள்கை சர்­வ­தேச நாணய நிதியின் ஏவல்­க­ளுக்கு முற்­றாக அடி­ப­ணி­யாமல் அவற்றுள் பொருத்­த­மா­ன­வற்றை ஏற்று இலங்­கையின் உள்­நாட்டு வளங்­க­ளுக்கும் உழைப்புச் சக்­திக்கும் செயற்­தி­ற­னுக்கும் முத­லிடம் வழங்கி, சந்தைச் சக்­தி­க­ளுடன் இணைந்து வெளி­நாட்டு முத­லீட்­டையும் திட்­ட­மிட்ட முறையில் வழிப்­ப­டுத்தி ஒரு புதுப்­பா­தை­யிலே நாட்டை இட்டுச் செல்­வ­தாகும். தேசிய மக்கள் சக்­தியின் தலை­மைக்குள் பல திற­மை­சா­லி­களும் வல்­லு­னர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். திற­மைக்கு முத­லிடம் வழங்கும் ஒரு கட்­சி­யாக இது தென்­ப­டு­கின்­றது. இதனை முஸ்­லிம்கள் நிதா­ன­மாக எடை­போட்­டுப்­பார்க்க வேண்டும். ேபரி­ன­வாதக் கட்­சி­க­ளுடன் இனியும் பேரம்­பே­சாமல் முஸ்லிம் இன­வாதக் கட்­சி­க­ளையும் புறந்­தள்ளி முற்­போக்குச் சிந்­த­னை­யுள்ள ஒரு புதிய தலை­மு­றை­யுடன் இணைந்து தமது சமூகத்தின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தீர்க்கமான கோரிக்கை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.