எம்.எம்.எம். ரம்ஸீன்
சிறுபான்மை சமூகங்களின் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியம் அச்சமூகங்களுக்கு அரசியல் பலத்தை வழங்குகின்றது. தற்காலத்தில் சிறுபான்மை சமூகங்களின் வரலாற்றுப் பாரம்பரியம் சமூக முக்கியத்துவத்திற்கப்பால் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இது கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என கலாநிதி ரவூப் ஸெய்ன் குறிப்பிட்டார்.
கலாநிதி ரவூப்ஸெய்ன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் அறிமுக விழா கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடுநுவர முறுத்தகஹமுளயில் அமைந்துள்ள உடுநுவர அபிவிருத்தி நிதியத்தின் ஏ.எச்.எம். மஹ்ரூப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உடுநுவர அல்மனார் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முஸ்லிம் சமூகத்தில் வரலாறு தொடர்பான பிரக்ஞை ஏற்பட வேண்டும். வரலாறு சமூகத்தின் இருப்புக்கு அவசியமாகும். வரலாறற்ற சமூகம் வேரற்ற மரம் போன்றதாகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தொழில்சார் வரலாற்றாசிரியர் ஒருவரேனும் காணப்படாமை மிகப் பெரும் குறைபாடாகும். அதேபோல், இன்று தொல்பொருளியலில் உயர் தகைமை பெற்ற ஒருவர் கூட எம்மத்தியில் இல்லை என்பதும் பெருங்குறைபாடாகும்.
இலங்கையை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்திய அழகிய வரலாறு முஸ்லிம் சமூகத்திற்குண்டு. ஆனால், நாம் எம்மைப் பற்றிய வரலாறு தெரியாமல் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரலாறு என்பது விஞ்ஞான ரீதியில் மூலாதாரங்களில் இருந்து தேடி ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்.
முஸ்லிம் கிராமங்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும். இது அரசியல் ரீதியிலும் சமூகத்துக்கு பாதுகாப்பானதாக அமையும். முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தல் ஒரு கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
சமூகத்தின் எதிர்கால நோக்கு, திட்டமிடலை மேற்கொள்வதற்கு வரலாறு எழுதப்பட வேண்டும். பிரதேச ரீதியில் முதற்கட்டமாக வரலாற்றை ஆவணப்படுத்த முடியும். பிரதேச ரீதியில் 1948 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற விடயங்களையாவது முதலில் ஆவணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் சுதந்திரத்திற்கு செய்த பங்களிப்பு என்பது பெரும்பான்மை சமூகத்திடம் உத்தரவாதங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாமல் நாட்டின் சுதந்திரத்திற்கு வழங்கிய ஆதரவாகும். 1915 சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் காயங்கள் ஆறாத நிலையில் முஸ்லிம்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த ஆதரவு தான் விரைவான சுதந்திரத்திற்கு வழி செய்தது என்று குறிப்பிடுவர்.
இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகளாக பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சிறந்த உறவு இருந்து வந்துள்ளது. நாட்டின் கரையோரத்தில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மன்னார், புத்தளம், சிலாபம் ,கொழும்பு, நீர்கொழும்பு, காலி, மாத்தறை வரை குடியேறியிருந்தனர். இவர்கள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிய போது அரேபியாவுக்கு ஒரு தூதுவரை அனுப்பி இஸ்லாத்தை அறிந்து கொண்டுள்ளனர். இவர்கள் பின்னர் நாட்டின் உட்பகுதிக்கு நகர்ந்தனர். அரேபியர்கள் இலங்கைக்கு வந்த போது இலங்கையைக் கைப்பற்றக்கூடிய அரசியல், பொருளாதார பலத்தைக் கொண்டிருந்தனர். இவர்களிடம் நாடு கைப்பற்றும் நோக்கம் இருக்கவில்லை. ஆனால் இவர்கள் பாவா ஆதம் மலையை தரிசிக்கவும் வாணிப நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு வந்தவர்களாவர்.
வாணிப நோக்கத்திற்காக இலங்கை வந்த அரேபியர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். இலங்கைக்கு 12 ஆம் நூற்றாண்டில் இந்தியர்களும் 18 ஆம் நூற்றாண்டில் மலாய்களும் 19 ஆம் நூற்றாண்டில் போராக்கள், குஜராத்திகள், வட இந்தியர்கள் வந்தனர். அரேபியர்கள் 13 ஆம் நூற்றாண்டில் கரையோரத்தில் இருந்து உள்நாட்டினுள் நகர்ந்தனர். அரேபியர்கள் முதன் முதலாக சபரகமுவ எனும் இடத்தில் குடியமர்ந்ததாக மார்க்கபோலவினால் பதியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மலைநாட்டுக்கு முஸ்லிம்கள் வந்துள்ளனர் என்று அறிய முடிகின்றது. 1626 இல் போர்த்துக்கேயரினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கண்டி செனரத் மன்னன் இடமளித்ததாக சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
வியாபாரப் பொருட்களை கரையோரப்பகுதிகளில் இருந்து உள்நாட்டு பகுதிகளுக்கும் உள்நாட்டு பகுதிகளில் இருந்து கரையோரப்பகுதிகளுக்கும் போக்குவரத்து செய்வதற்கு தவளம் போக்குவரத்து முறையை முஸ்லிம் வியாபாரிகள் பயன்படுத்தினர். இவ் வியாபாரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் 10 ஆம் நூற்றாண்டு முதல் மலைநாட்டில் பல பிரதேசங்களில் குடியேறியுள்ளனர். மலைநாட்டில் காணப்படும் மடிகே எனும் பெயர் கொண்ட கிராமங்கள் அரேபியர்கள் மலைநாட்டு உற்பத்திப் பொருட்களை சேமித்து வைத்த இடங்களாகும். இதில் உடதலவின்னை மடிகே, கலகெதர மடிகே, மிதியால மடிகே முதலானவற்றைக் குறிப்பிடலாம். இப்பகுதிகள் காலப்போக்கில் முஸ்லிம் குடியேற்றங்களாக வளர்ச்சியடைந்தன. எனவே, கண்டிப் பிரதேச முஸ்லிம்களுக்கு ஏழு நூற்றாண்டு கால வரலாறுண்டு.
கங்கசிறிபுர எனும் கம்பளை இராஜ்யத்தின் தோற்றம் கண்டி இராஜ்யத்தின் தொடக்கமாகும். கம்பளை இராஜ்யத்தின் தோற்றம் ஏற்பட்ட காலப்பகுதியில் கம்பளையில் முஸ்லிம் குடியிருப்புக்கள் காணப்பட்டுள்ளன. கம்பளையில் முஸ்லிம்களின் ஆரம்பகால குடியேற்றங்கள் இல்லவதுரை, சிங்ஹாபிடிய என்பனவாகும். அதேபோல் அக்குறனையில் குருகொடை, கசாவத்தை என்பன ஆரம்ப குடியேற்றங்களாகும்.
14 ஆம் நூற்றாண்டில் 4 ஆம் புவனேகபாகு மன்னன் கம்பளையில் தியானம் செய்த பாவா கூபி வலியுல்லாஹ்வின் தேவைகளைக் கேட்டறிந்து நிறைவு செய்துள்ளான். அப்போது அவர் தஸ்பீஹ் கோர்வையை தூக்கி வீசியதாகவும் தஸ்பீஹ் கோர்வை வீசப்பட்ட தூரத்தின் அடிப்படையில் அரன்கந்த எனும் கஹட்டபிடிய பிரதேசம் அரசனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் வரலாறு குறிப்பிடுகின்றது. கம்பளை இராசதானியில் 4 ஆம் புவனேகபாகு மன்னனின் அரசவையில் பாரசீக, அரேபிய, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சென்று பாவா கூபியை அரசனுக்காக சந்தித்துள்னர். கம்பளை இராஜ்யத்தில் அரச சபையில் மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தமை கம்பளை மன்னனின் பாரசீக, அரேபிய, மலபார் மக்களுடனான வியாபாரத் தொடர்பைக் காட்டுகின்றது.
அக்குறனை பிரதேசம் 1638 இல் நடைபெற்ற கண்னொருவ யுத்தத்தின் பின்பு அரசனால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடமாக குறிப்பிடப்படுகின்றது. எனினும், இதற்கு முன்பு அக்குறனையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
உடுநுவரையில் 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. கண்டி இராசதானியில் மன்னர்கள் தலதா மாளிகைக்கும் தேவாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் சேவை செய்பவர்களுக்கு நிந்தகம, விகாரகம காணிகளை அன்பளிப்புச் செய்துள்ளனர். இதில் முஸ்லிம்கள் நிந்தகம, விகாரகம காணிகளைப் பெற்றுக் கொண்டனர். முஸ்லிம் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் குண்டசாலை பகுதியில் காணப்பட்டன.
உடுநுவர முஸ்லிம்கள் கண்டி இராஜ்யத்தில் செய்த வைத்திய சேவையின் பேரில் காணிகளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டனர். இதில் பூவெலிகட வெதரால அபூபக்கர் புள்ளே என்ற வைத்தியர் இராஜசிங்க மன்னனின் இரண்டாவது மனைவியின் நோயைக் குணப்படுத்தினார். இதனால் அவருக்கு தஸ்கர எனும் இடத்தில் காணி வழங்கப்பட்டுள்ளது. இவை 12 ஆம் நூற்றாண்டில் மலைநாட்டில் முஸ்லிம்கள் குடியேறியிருந்தனர் என்பதற்கு சிறந்த சான்றாகும். இலங்கையில் அதிக முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட மாவட்டம் கண்டி மாவட்டமாகும்.
நாட்டின் தேசிய இறைமைக்கும் பாதுகாப்புக்கும் முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். மன்னர்கள் போர்த்துக்கேயருக்கு எதிராக மேற்கொண்ட யுத்தங்களில் வீரதீரமாக முஸ்லிம்கள் போராடியுள்ளனர். 1592 இல் கண்டி இராஜ்யத்தின் முதலாம் விமலதர்மசூரியனின் ஆட்சிக்காலத்தில் 1599 இல் நடைபெற்ற தந்துர யுத்தம், கண்னொருவ யுத்தம் என்பவற்றில் முஸ்லிம்கள் பங்குகொண்டனர். கண்டி இராஜ்ய மன்னர்கள் விசுவாசத்தின் அடிப்படையில் முக்கிய பொறுப்புக்களில் முஸ்லிம்களை அமர்த்தியிருந்தனர். ராஜபக்ஷ வைத்தியதிலக கோபால முதலியார் எனும் ஷேக் முஹம்மத் வைத்திய துறையில் மன்னரிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.
முஸ்லிம்கள் பொருளாதார துறையில் மகத்தான பங்களிப்பு செய்துள்ளனர். 18,19 ஆம் நூற்றாண்டில் மீயாப்புள்ள எனும் முஸ்லிம் சிறந்த கோப்பி செய்கையாளராக இருந்துள்ளார். மலைநாட்டு முஸ்லிம்கள் பௌத்த மக்களுடனும் விகாரைகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். கண்டி முஸ்லிம்கள் தலதா மாளிகையுடன் பல வழிகளில் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் தலதா மாளிகைக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இறக்காமம், ஏறாவூர் முஸ்லிம்கள் யானைகளை வழங்கியுள்ளனர். அக்குறனை முஸ்லிம்கள் நகைகள், ஆபரணங்களை வழங்கியுள்ளனர். எசல பெரஹரவுக்கு உதவிகளை செய்துள்ளனர்.
ஹாரிஸ்பத்துவ குருனேஹென அஹமத் லெப்பை, உமர் லெப்பை, காதர் லெப்பை ஆகியோர் தலதா மாளிகையில் நகைகள், ஆபரணங்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். கண்டியில் கிராம தலைவர்கள் உட்பட காரியகாரண பதவிகளில் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். இது மலைநாட்டு முஸ்லிம்களின் மகத்தான தேசிய பங்களிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் அல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எமது வரலாற்றை அறிந்து கொள்வதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.- Vidivelli