இலஞ்சம் கொடுத்து தப்பிக்கும் நாட்டில் அப்பாவிகளை பலியெடுக்கும் விபத்துகளை தவிர்க்கலாமா?

0 344

கலாநிதி அலவி ஷரீப்தீன்
அவுஸ்திரேலியா

மீண்டும் ஒரு விபத்து எம் கிரா­மத்துக் கரை­களை உலுப்பி விட்­டி­ருக்­கின்­றது. இதில் உயி­ரி­ழந்த அப்­பா­வி­களின் உயிர்­க­ளுக்கு பதில் சொல்ல வேண்­டி­யது யார்? மன்­னம்­பிட்டி விபத்து சொல்லும் செய்தி என்ன?

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர், ஒருநாள் என் நண்பர் ஒரு­வரின் வற்­பு­றுத்­தலில் கொழும்பில் இருந்து கிழக்கு நோக்கி பய­ணிக்கும் இரவு பஸ் ஒன்றில் பய­ணித்த போது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பஸ் பய­ணித்­ததைக் கண்டு நடுங்கிப் போனேன்.
மணிக்கு 60 கிலோ மீட்­ட­ருக்கு அதி­க­மாக பய­ணிக்க முடியாத வீதி­களில் போட்டி போட்டு தான்­தோன்­றித்­த­ன­மாக “இந்த வேகத்தில் ஓடும் சார­திகள் பஸ் வண்­டியைப் புரட்டி அப்­பாவிப் பய­ணி­களை அப்­ப­டியே கொட்டிக் கொல்­லு­வார்கள்” என்று சொன்னேன்.

பின்னர், இந்தப் பிசாசு வேக பஸ் வண்­டி­களைக் காணும் போதெல்லாம், இதனைத் தடுத்து நிறுத்தும் சட்­டத்தின் காவ­லர்கள் எங்கே என்று நான் கேட்­ப­துண்டு. அந்த விபத்­துக்கள் ஏதும் நடந்து விடக்­கூ­டா­தெனப் பிரார்த்­திப்­ப­துண்டு.

இலஞ்சம் சர்வ சாதா­ர­ண­மாக பரி­மா­றப்­ப­டு­வதால் இவர்­களை சட்­டத்தின் காவ­லர்கள் தடுத்து நிறுத்த மாட்­டார்கள் என்று எவரோ சொன்­னார்கள்.

இந்த விபத்தில் ஏற்­க­னவே தந்­தையை இழந்த ஏறா­வூரைச் சேர்ந்த இரு அனாதைக் குழந்­தை­களின் தாயும் பரி­தா­பமாய் பலி­யான செய்தி நெஞ்சில் வேலாகக் குத்தி நிற்­கின்­றது. இந்த அப்­பாவி விதவை கொல்லப்பட்­டி­ருக்­கின்றாள். இது தவிர பல குழந்­தை­களின் தகப்­பன்மார், பல்­கலைக்கழக மாண­வர்கள் என அப்­பா­விகள் இவ்­வி­பத்தில் கொல்லப்பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்தக் குறித்த விபத்து எவ்­வாறு ஏற்­பட்­டது என்­ப­தற்கும் விசா­ர­ணை­க­ளுக்கும் அப்பால், எவ்­வாறு எமது வீதி­களில் வீதி சட்ட விதி­களை மீறி அதி வேக­மாக வாக­னத்தைச் செலுத்த முடி­கின்­றது, பின் எவ்­வாறு சட்­டத்தில் இருந்து தப்­பித்துக் கொள்ள முடி­கின்­றது?

வீதி ஒழுங்­கு­களைப் பேணா­த­வர்கள், அர­ச­னாக, ஆண்­டி­யாக அல்­லது எவ­ராக இருந்­தாலும் சட்­டத்தின் முன்னே அனை­வரும் சமமே என்ற நிலைப்­பாடு அத்­தி­ய­வ­சி­ய­மா­ன­தாகும். இது இங்கு நடை­முறைப் படுத்­தப்­ப­டு­கின்­றதா?

உத்­தி­யோ­க­பூர்வ வேகத்தை விட வெறு­மனே மணிக்கு 5 கிலோ மீட்டர் அதி­க­மாக வாக­னத்தைச் செலுத்­தி­ய­மைக்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் போக்­கு­வ­ரத்து அமைச்சர் உட்­பட பல அமைச்­சர்கள், தண்­டப்­பணம் செலுத்­திய கதைகள், பலர் தம் பத­வி­யையே இரா­ஜி­னாமாச் செய்த வர­லா­று­களும் உண்டு. இவ்­வா­றான சம்­ப­வங்கள் வேறு பல நாடு­க­ளிலும் நடை­பெ­று­கின்­றன.

வீதி சட்ட ஒழுங்­கு­களை மீறுதல், மது­பானம் மற்றும் போதைவஸ்­துக்­க­ளுடன் வண்­டி­யோட்­டுவோர், உரிய அனு­மதி இல்­லாமல் வாக­னத்தில் பொது­மக்­களை ஏற்­றுதல், தான்­தோன்றித் தன­மான வேகம் போன்ற பாரிய குற்­றங்கள் பேரம் பேசிப் பெறப்­படும் இலஞ்­சங்­களால் நியாயப்படும் நிலை­யி­னையும் அவர்கள் தண்­ட­னை­களில் இருந்து தப்­பித்துக் கொள்­வ­த­னையும் காண்­கின்றோம்.

இப்­பா­ரிய கொடிய குற்­றங்­களைப் புரிவோர் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் தண்­ட­னை­களில் இருந்து தப்­பிக்கக் கூடாது.

அமைச்சர், உயர் பதவி அதி­கா­ரிகள், அல்­லது வேறு எவ­ராக இருந்­தாலும் சட்டம் அதன் பணியைச் செய்ய வேண்­டுமே தவிர அவர்­க­ளது பத­வி­கள் அல்­லது இலஞ்சம் அவர்­க­ளைக் குற்றத் தண்­ட­னையில் இருந்து காப்­பாற்றக் கூடாது.

அர­சாங்கம் மற்றும் அதி­கா­ரிகள் இது விட­யத்தில் கடு­மை­யாக இருக்க வேண்டும். இல்­லாது போனால் இவ்­வா­றான விபத்­துக்கள் தொடர்­க­தை­யாக தொடர்ந்து கொண்­டே­யி­ருக்கும். பல அப்­பா­விகள் தான் தோன்­றித்­த­ன­மான பிசாசு வேக சார­தி­களால் தொடர்ந்தும் கொல்­லப்­பட்டுக் கொண்­டே­யி­ருப்பர்.

நாட்டின் அபி­வி­ருத்­தியில் வீதிச் சட்ட அமு­லாக்கம், சட்­டத்தின் முன் எவரும் சமன், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்­லாத காவல்­து­றைகள் என்­பன அடிப்­ப­டை­யா­ன­வை­க­ளாகும். அவையே இன்­றைய காலத்தின் தேவைகள்.

இவ்­வ­கை­யான பரி­தாப விபத்­துக்கள் எதிர்­கா­லத்தில் தவிர்க்­கப்­பட வேண்­டு­மானால், இத­னோடு சம்­பந்­தப்­பட்ட சக­ல­ரதும் கூட்­டி­ணைந்த ஒத்­து­ழைப்­புக்கள் அத்­தி­ய­வ­சி­ய­மாகும். சாரதி, சக பய­ணிகள், வீதி பாது­காப்பு காவல்­துறை, பொது மக்கள், அரச சட்டம், அதனை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரிகள் அனை­வரும் தம் பங்­க­ளிப்­பினை சரி­யாக செய்­வதன் மூலமே இது சாத்­தி­ய­மாகும்.

சார­திகள் வாகனம் செலுத்தும் போது மது அல்­லது போதைப் பொருட்கள் பாவிக்­கின்­றார்­களா எனும் திடீர் பரி­சோ­தனை முறை­மையும் தன்­னி­யக்க வேக மேற்­பார்வை கம­ராக்­களும் இந்த நாட்டில் உடன் அமு­லுக்கு வர­வேண்டும். இவைகள் இலஞ்சம் எனும் காச நோய்க்குட்பட்டவர்களுக்கு அப்பால் நிர்வகிக்கப்பட வேண்டும்.

வீதியில் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தினால் லைசன்ஸ்சுடன் 500 ரூபாவினைச் சுருட்டிக் கொடுக்கும் நிலை மாற வேண்டும்.

வீதியொழுங்கை மீறி எவராக இருந்தாலும் எப்போதுமே வாகனம் செலுத்த முடியாது என்ற நிலை வரவேண்டும். அதுவரை விபத்துக்கள் தொடர்கதையாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதே நிதர்சனம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.