எம்.என் முஹம்மத்
மேற்கு கரை நகரான ஜெனீன் மீது இஸ்ரேல் கடந்த வாரம் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்தமை இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நூறு பலஸ்தீன் போராளிகள் அதுவும் பதாஹ் அமைப்பு ஒழிந்து கொண்ட நிலையில் ஹமாஸின் இராணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படையணி, அல் குத்ஸ் பிரிகேட், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்புகள் மிக நுணுக்கமான தாக்குதல் மூலம் இஸ்ரேலிய படைகளை விரட்டி அடித்தனர். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாது விடின் 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹமாஸ் சவால் விட்டு நடத்தியும் காட்டினர். அடுத்த தாக்குதல் நடக்க முன்பு இஸ்ரேல் தமது படைகளை வாபஸ் வாங்கியது. தனது தோல்வியை மறைக்க மேற்குக் கரையின் இன்னொரு நகரான நப்லூஸ் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட போது அங்கும் பதிலடி கிடைத்தது.
கடந்த 20 வருடங்களில் இஸ்ரேல் மேற்கு கரை மீது நடத்த முற்பட்ட மிக மோசமான இராணுவ தாக்குதல் இதுவாகும். பல பதாஹ் தலைவர்கள் PLO வின் இராணுவப் பிரிவு ஒஸ்லோ உடன்பாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என மஹ்மூத் அப்பாஸ் மீது கடுமையான அழுத்தம் கொடுக்கின்றனர். மரணித்த போராளிகளின் மரணச் சடங்கிற்கு சென்ற பதாஹ் தலைவர்களை பலஸ்தீன மக்கள் விரட்டி அடித்தமை மக்களின் பதாஹ் மீதான கோபத்தை தெளிவாக விளங்கச் செய்கிறது.
ஒஸ்லோ உடன்பாட்டை விளங்கினால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும். ஒஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனியத்திற்கும் இடையே, பாலஸ்தீனியர்களின் இடைக்கால தன்னாட்சி தொடர்பில் செப்டம்பர் 13, 1993 அன்று, வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாட்டின் மூலம் பலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டு இஸ்ரேல் தனது இருப்பிற்கான அரபு உலக அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டது.
சர்வதேச சமூகம் சற்றும் எதிர்பாராதவிதமாக பலஸ்தீன அதிகார சபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்று சில நாட்களில் காஸாப் பள்ளத்தாக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
ஹமாஸ் எப்போதும் ஒஸ்லோ உடன்பாட்டை ‘ஆக்கிரமிப்பை அங்கிகரீக்கும் பிரகடனம்’ எனத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
‘‘நாங்கள் எங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றி பேசுகிறோம், நாங்கள் அல்-குத்ஸைப் பற்றி பேசுகிறோம், இது முஸ்லிம்களுக்கான முதல் கிப்லா மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் எனும் விண்ணுலக யாத்திரை மேற்கொண்ட இடம். சியோனிஸ்டுகள் ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்து வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்களான பாலஸ்தீனியர்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்).”
“நாங்கள் ஒருபோதும் எங்கள் தாயகத்தை விட்டுவிட மாட்டோம் அல்லது அதன் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டோம். அதை விடுவிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம், மேலும் எங்களால் இப்போது விடுவிக்க முடியாது என்றால் எதிர்கால தலைமுறையினர் விடுவிப்பதற்காக விட்டுவிடுவோம்.’’
இதுவே ஹமாஸ் தலைவர்கள் தொடராக முன்வைக்கும் நிலைப்பாடு.
அண்மைக் காலமாக மேற்கு கரையில் நடைபெறும் போராட்டங்கள் ஒஸ்லோ உடன்பாட்டை தெளிவாக முடிவிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்துகிறது. அது அறபு நாட்டு வீதிகளில் அரபு அரசர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வழி வகுக்கும்.
பதாஹ் ஹமாஸுடன் முரண்பட்டால் காஸாவில் நடந்த அதே வரலாறு மேற்கு கரையிலும் நடைபெறும். அது பரந்துபட்ட பலஸ்தீன மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.
இஸ்ரேல் அதன் வரலாற்றில் மிக மோசமான பாதுகாப்பு சவாலை எதிர் கொள்கிறது. பல எதிர்பாரா நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கலாம்.- Vidivelli