மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் முழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவத்தில் 11 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பாலத்தில் ஏலவே 2011 இல் மருதமுனையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வேன் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை நினைவிருக்கலாம். இதில் 6 பேர் உயிரிழந்திருந்தனர். இப் பாலத்தின் இரு மருங்கிலும் பாதுகாப்பற்ற வகையிலேயே வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் குறித்த வேலிகளைத் தகர்த்துக் கொண்டு வாகனங்கள் ஆற்றினுள் விழுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன. இதன் காரணமாகவே இந்த பஸ் வண்டியும் ஆற்றினுள் வீழ்ந்துள்ளது.
பஸ் சாரதியின் பொறுப்பற்ற தன்மையே இந்த விபத்துக்குக் காரணம் என்றபோதிலும் எதிர்கால ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக பாதுகாப்பான வேலிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டின் பொருளாதார நிலைமையைக் காரணம்காட்டி பாலங்களைப் புனரமைக்க நிதி ஒதுக்க முடியாது என அமைச்சர் பந்துல பொறுப்பற்ற வகையில் கருத்துக் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்த நெருக்கடியான நிலையிலும் அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் பின்னிற்கக் கூடாது என வலியுறுத்த விரும்புகிறோம்.
இதனிடையே நாட்டில் அண்மைக் காலமாக விபத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவலை தருவதாக உள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1190 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை 1126 பாரிய விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2022 இல் 19740 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 2371 விபத்துக்கள் பாரியவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்விபத்துக்கள் மூலம் 2022 இல் 2485 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் அதிக மரணங்கள் மற்றும் காயங்களுக்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்களே காரணம் என்றும் தரவுகள் கூறுகின்றன.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய, ஒவ்வொரு வருடமும் 12 ஆயிரம் பேர் இலங்கையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர். இதற்கமைய ஒவ்வொரு 90 நிமிடங்களிலும் 2 பேர் விபத்துக்கள் மூலம் தமது உயிரைப் பறி கொடுக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பவர்களில் அதிகமானோர் 15 முதல் 44 வயதுக்கிடைப்பட்டவர்களாவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இவ்வாறு உயிரிழப்போர் மற்றும் காயமடைவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக தமது அமைச்சு வருடாந்தம் பாரிய தொகை பணத்தைச் செலவிடவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். விபத்துக்கள் இடம்பெறாது தவிர்ப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பெருந்தொகை நிதியைச் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையானது வாகனங்கள் வேகமாகப் பயணிக்க வழிசமைத்துள்ளது. பாதைகள் சீராகவுள்ளன என்பது வேகமாகப் பயணிப்பதற்கான அனுமதியல்ல. அதி வேகப் பாதைகள் தவிர, ஏனைய பாதைகளில் 60 கி.மீ. வேகத்திற்கு குறைவாகவே வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்பது விதியாகும்.
எனினும் தூரப் பயணங்களில் ஈடுபடும் பஸ் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் 100 கி.மீ. வேகத்தில் கூட செல்வதை நாம் அவதானிக்கிறோம். போக்குவரத்துப் பொலிசார் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் அவர்கள் கூட இலஞ்சம் பெற்றுக் கொண்டு இவ்வாறான சாரதிகள் தொடர்ந்தும் இதே தவறை இழைப்பதற்கு அனுமதிக்கின்றனர்.
நாட்டில் இலஞ்சம் ஊழல் என்பன சகல துறைகளிலும் புரையோடிப் போயுள்ளன.
அவற்றின் நேரடி விளைவையே மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் நடந்த விபத்தில் நாம் கண்டுள்ளோம். குறித்த பஸ் சேவையை நடத்துபவர் உரிய அனுமதிப்பத்திரமின்றியும் பயணிகளின் பாதுகாப்பை பொருட்படுத்தாமலும் பல வருட காலமாக தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த பஸ் சேவை உரிமையாளருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. இன்று இந்த அலட்சியங்கள் அப்பாவி உயிர்களைப் பலியெடுத்துள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டில் இதே நிலை நீடிக்குமானால் இவ்வாறான விபத்துக்கள் தொடர்வதை தடுக்க முடியாது போய்விடும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை சரிவர நடை முறைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.-Vidivelli