(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா-ளுமன்ற உறுப்பினர் கள் ஒன்றுகூடி கலந்துரையாடி தயாரித்த அறிக்கை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையில் 16 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் இரு உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிடவில்லை எனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்குத் தலைமை வகித்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பெளஸி தெரிவித்தார்.
குறிப்பிட்ட சட்டத்திருத்த அறிக்கையில் பெண் காதிநீதிபதி நியமனம், திருமண வயதெல்லை 18, நிபந்தனைகளுடன் கூடிய பலதாரமணம், திருமணப்பதிவில் ‘வொலி’ மற்றும் மணமகளின் கையொப்பம் என்பன உட்பட திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்று கூடி நடாத்திய கலந்துரையாடலுக்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க உலமாசபையின் இரு உலமாக்கள் கலந்து கொண்டிருந்தனர். பெண் காதி நியமனத்தை உலமாசபை எதிர்த்ததுடன் அதனை ஷரீஆ அடிப்படையில் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘தசாப்த காலமாக இழுபறியில் இருக்கும் நிலையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தற்போது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. எமது அறிக்கை நீதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டதும் தாமதமின்றி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி தெரிவித்தார்.- Vidivelli