உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளுக்கு மிருக வைத்திய சான்றிதழ் அவசியம்
மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார் பௌஸி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உழ்ஹிய்யாவுக்கு மாடுகள் அறுப்பதில் தடையில்லை. ஆனால் உழ்ஹிய்யாவுக்கான மாடுகள் தோல் கழலை நோய்தொற்றுக்குள்ளாகாத, ஆரோக்கிய மாடுகளாக இருக்க வேண்டும்.
மிருக வைத்திய சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மக்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு மாடுகள், ஆடுகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு போக்குவரத்து செய்யப்படும்போது நாட்டில் அமுலிலுள்ள மிருகவதை தொடர்பிலான விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டும். விதிமுறைகளை மீறி பெரும் எண்ணிக்கையிலான பிராணிகள் வண்டிகளில் போக்குவரத்து செய்வது தவிர்க்கப்படவேண்டும். இந்த விதிமுறை மீறப்பட்டால் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். மாடுகள் தடுத்து வைக்கப்படலாம்.
மாடுகள், ஆடுகள் போக்குவரத்து செய்வதற்கான ஆவணங்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும். உரிய ஆவணங்கள் இருப்பின் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படமாட்டாது.
மேலும் மாற்று மதத்தினர் மாடுகளை கடவுளாக கருதுவதாலும், மாடுகள் அறுக்கப்படுவதை எதிர்த்து வருவதாலும் முஸ்லிம்கள், உழ்ஹிய்யா கடமையினை மாற்றுமதத்தினரின் உணர்வுகள் பாதிக்கப்படாத முறையில் மேற்கொள்வதே நல்லது.
உழ்ஹிய்யா பிராணிகளின் தோல்கள், எலும்புகள் போன்ற கழிவுகளை உரிய வகையில் அப்புறப்படுத்துவதும் கட்டாயமாகும். ஏனைய மதத்தினர்களின் உணர்வுகளை மதித்து உழ்ஹிய்யா கடமையினை அமைதியான முறையில் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும் என்றார்.
உழ்ஹிய்யா பிராணிகளின் போக்குவரத்தின் போது தேவையற்ற தாமதங்கள் ஏற்படுத்த வேண்டாமென தான் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli