மத்திய கிழக்கு நாடுகளுடனான விரிசலுக்கு ஜனாஸா எரிப்பே பிரதான காரணம்
தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவையிடம் ஐந்து தடவைகள் கோரினேன் என்கிறார் அமைச்சர் அலிசப்ரி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்த உடல்களை தகனம் செய்ய வேண்டுமென்ற அப்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு பல நாடுகளுடனான இலங்கையின் நல்லுறவுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளின் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலிசப்ரி ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு தான் ஐந்து தடவைகள் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்தாகவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் இவ்விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்; அதுவோர் கோரமான சம்பவமாகும். அப்போதைய ஒரே முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் எனது வாழ்க்கையில் மிக மோசமான சங்கடத்தை எதிர்கொண்டேன். தினமும் நான் இந்நிலைக்குள்ளானேன். உயிரிழப்பு ஏற்பட்டு முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்ட நாட்கள் எனக்கு நித்திரையற்ற இரவுகளாகவே இருந்தன. அமைச்சரவையில் நான் ஐந்து தடவைகள் இது தொடர்பில் கவனம் செலுத்தும்படி வேண்டினேன்.
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரவைகூட கொவிட் 19 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தது.
ஆனால் இவ்விவகாரம் தொடர்பிலான நிபுணத்துவ குழுவொன்று இருந்தது. அவர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களை விடவும் உயர்ந்தவர்களாக தம்மைக் கருதியிருந்தனர். இக்குழுவுக்கு சன்ன பெரேராவும் பேராசிரியர் மெத்திக்கா பெரேராவும் தலைமை வகித்தனர். அவர்கள் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்வதை எதிர்த்தனர். அவர்களின் தீர்மானம் எவருக்கும் பயனுள்ளதாக அமையவில்லை.
சுகாதார நிபுணர் குழுவின் தீர்மானம் பல நாடுகளுடனான, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையில் நட்புறவில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. உண்மையில் எங்களது உறவுகளில் விரிசல் ஏற்பட்டன. எமது நாடு மாத்திரமே கொவிட் 19 நோய்த்தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்தவற்கு அனுமதிக்கவில்லை. எமது தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) எதிர்த்தது. கண்டித்தது. UNHRC அமைப்பும் கண்டித்தது. கொவிட் மரணங்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியிருந்தது. அதனையும் மதிக்காத இலங்கையின் தீர்மானம் எமக்கிடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார்.
பாதிக்கப்பட்ட உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது குறித்து அவர் தெரிவிக்கையில்; அண்மையில் இலங்கை பல நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதிப்புக்குள்ளான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுடன் நல்லுறவினைப் பலப்படுத்தி வருகிறோம். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் 2021 இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். நான் இவ்வருடம் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டேன். ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.
அவர் விஜயம் செய்வதாக உறுதியளித்துள்ளார். ஈரான், மெரோக்கோ போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது. நான் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். நாங்கள் நாடுகளுக்கிடையிலா எமது உறவுகளைப் பலப்படுத்தி வருகிறோம். பல நாடுகளுக்கிடையிலான எமது நல்லுறவுனை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் கடந்த வருடத்தைவிட இவ்விடயத்தில் முன்னேற்றம் காணுவோம் என்றார். – Vidivelli