வழக்கம் போலவே இவ்வருடமும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஹஜ் கோட்டா பகிர்வு, பேசா விசாக்களை பங்கிட்டமை, ஹஜ் நிதியத்தின் நிதியை பயன்படுத்திய விதம் மற்றும் யாத்திரிகர்களுக்கு தரமற்ற தடுப்பூசி ஏற்றப்பட்டமை என இவ்வருட ஹஜ் ஏற்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
ஹஜ் விவகாரங்களைக் கையாள்வதற்கான பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குரியதாகும். இதற்கு மேலதிகமாக அரச ஹஜ் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தரப்பினரும் இணைந்து ஹஜ் விவகாரங்களை வினைத்திறனான முறையில் கையாள வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தினுள் நிலவும் அரசியல் மற்றும் நிர்வாக பலவீனங்கள் காரணமாக கடந்த பல வருடங்களாக ஹஜ் ஏற்பாடுகள் சர்ச்சைகளையே தோற்றுவித்து வருகின்றன.
வருடா வருடம் ஹஜ் குழுவுக்கு எதிராக முகவர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இம்முறையும் நான்கு முகவர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கப்பால் ஹஜ் நிதியத்தில் இருக்கும் பெருந்தொகைப் பணம் என்ன நோக்கங்களுக்காக செலவு செய்யப்படுகின்றது என்பதில் வெளிப்படைத்தன்மையைக் காணவில்லை. ஆயிரக் கணக்கான ஏழைகளும் மார்க்கப் பணி செய்வோரும் ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கு வசதியற்றிருக்க, வசதி படைத்த ஹஜ் குழுவின் உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஹஜ் யாத்திரைக்குச் செல்வதற்கு இந்தப் பணத்தை செலவிடுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்வியும் பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், ஹஜ் விவகாரங்களை ஒழுங்கமைப்பதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அது மாத்திரமன்றி சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரைக்காக வருகை தரும் அனைவரும் Meningococcal எனப்படும் துடுப்பூசியை ஏற்ற வேண்டியது அவசியமாகும். இந்த தடுப்பூசியானது 2 முதல் 8 பாகை செல்சியஸ் எனும் வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டியதாகும். துரதிஷ்டவசமாக இந்த தடுப்பூசியானது இலங்கையில் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு நிறுவனமும் இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது. மாறாக, சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு, உரிய வெப்ப நிலையில் பொருத்தமான குளிரூட்டிகளில் வைத்துப் பராமரிக்கப்படாத தடுப்பூசிகளை இலங்கையிலிருந்து பயணிக்கும் சுமார் 3500க்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
உலகின் பல நாடுகளிலிருந்தும் சுமார் 25 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இம்முறை ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியாவில் ஒன்றுகூடவுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மத்தியில் எந்தவிதமான தொற்று நோய்களும் பரவிவிடக் கூடாது என்பதில் சவூதி அரேபிய சுகாதாரத்துறை உறுதியாகவுள்ளது. இதனடிப்படையில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் வருகை தரும் யாத்திரிகர்கள் சவூதியின் சுகாதார வழிகாட்டல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும். எனினும் இலங்கையில் இவ்வாறு உரிய தடுப்பூசிகள் ஏற்றப்படுவதில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டானது பாரதூரமானதாகும். இது எதிர்காலத்தில் வேறு விளைவுகளைத் தோற்றுவிக்கலாம். எனவேதான், ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இதனுடன் தொடர்புபட்ட தரப்புகள் வருடாந்தம் ஹஜ் யாத்திரைக்கு முன்பதாக இந்த தடுப்பூசியை உரிய அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாக இறக்குமதி செய்து யாத்திரிகர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
அது மாத்திரமன்றி, சில ஹஜ் முகவர்களும் பல்வேறு குளறுபடிகளிலும் மோசடிகளிலும் ஈடுபடுகின்றன. கடந்த காலங்களில் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் முகவர்களின் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் இதுவரை போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை.
எனவேதான் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வெறுமனே அரசியல்வாதிகளின் சிபாரிசுகளின் பேரில் ஹஜ் குழுவின் உறுப்பினர்களை நியமிக்காது, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளைக் கொண்ட ஹஜ் ஒழுங்குபடுத்தல் நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் அரசியல்வாதிகளினதோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரினதோ தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும். முழுக்க முழுக்க யாத்திரிகர்களின் நலன்களே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தற்போது 20 இலட்சம் ரூபா வரை உயர்ந்துள்ள ஹஜ் யாத்திரைக்காக செலவு கணிசமானளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றை நோக்காகக் கொண்டு குறித்த பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும்.- Vidivelli