-
பெண் திருமண வயது, பலதாரமணம், பெண் காதிகள் நியமனத்திற்கு ஆதரவு
-
மணமகள் கையொப்பமிட்டாலும் வொலி அவசியம் எனவும் வலியுறுத்து
-
‘முஸ்லிம்’ என்ற பதத்தை தவிர்த்தமைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த விடயங்களில் சில திருத்தங்களுடன் சட்டத்திருத்த வரைபுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக இணங்கியுள்ளனர்.
இதேவேளை சட்டத்திருத்த வரைபு இஸ்லாமிய வரையறையை மீறி, இஸ்லாத்துக்கு ஆபத்து வரக்கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்ட வரைபில் முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தின் வார்த்தை பிரயோகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதென தெரிவித்துள்ளதுடன் அத்திருத்தங்களை அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
புதிய சட்ட வரைபில் ‘முஸ்லிம்’என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது. ‘நிக்காஹ் வைபவம்’ என்ற பதம் நீக்கப்பட்டு ‘முறைப்படி சடங்குகளுடன் செய்தவை’ (Solemnization) என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவான சட்டங்களில் காணப்படுகின்ற சொல்லாகும்.
அடுத்து ‘தலாக்’, பஸஹ் என்ற சொற்பதங்களும் நீக்கப்பட்டுள்ளன. இச்சொற்பிரயோகங்கள் பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளன. மேலும் ‘முஸ்லிம்’ என்ற சொற்பதம் நீக்கப்பட்டு ‘ இஸ்லாத்தைக் கூறும் நபர்’ (Person Who Professes Islam) என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
சட்டத்தில் இவ்வாறான திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சொற்பத திருத்தங்கள் இஸ்லாத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதேவேளை முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் இதுவரை காலம் சர்ச்சைக்குள்ளாகியிருந்த பெண்களின் திருமண வயது பலதாரணம், பெண்கள் காதிகளாக நியமனம் போன்ற விடயங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து முரண்பாடுகளின்றி இணக்கம் கண்டுள்ளனர்.
பெண்கள் காதிகளாக நியமனம், நிபந்தனைகளுடன் பலதார மணத்துக்கு அனுமதி, திருமண வயதெல்லை18, அதே வேளை விசேட சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் 16–18 வயதுக்குமிடைப்பட்ட பெண்கள் காதிநீதிபதியின் அனுமதியுடன் விவாகம் செய்து கொள்ளலாம் எனும் திருத்தங்களுக்கு ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பெண்கள் (மணமகள்) விவாக பதிவு புத்தகத்தில் கையொப்பமிடல் என்ற திருத்தத்தையும் அனுமதித்துள்ளனர். அதேவேளை மணமகள் திருமண பதிவில் கையொப்பமிட்டாலும் ‘ வொலி’ கட்டாயமாக கையொப்பமிடவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த திருத்தங்கள் தொடர்பான அறிக்கையொன்று முஸ்லிம் பாராளுமன்ற உறு-ப்பினர்களினால் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட அறிக்கையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிடவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடாவிட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட திருத்தங்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
இதே வேளை குறிப்பிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் கண்டனம்
நீதியமைச்சு தயாரித்துள்ள சட்ட வரைபில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின் சொற்பதங்கள் சில நீக்கப்பட்டுள்ளமைக்கு முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டவரைபில் ‘முஸ்லிம்’ என்ற பதம் நீக்கப்பட்டு ‘இஸ்லாத்தைக்கூறும் நபர்’ (Person who Professes Islam) என்ற சொற்பதம் சேர்க்கப்பட்டுள்ளது. இது எமது அடையாளத்தை இல்லாமற் செய்வதாகும். எமது அடையாளத்தை அழித்து எமது பிள்ளைகளை சீரழிப்பதாகும் என சட்டத்தரணி ஸரீனா தெரிவித்துள்ளார்.
மேலும் ‘நிக்காஹ் செரமணி’ என்ற சொல் நீக்கப்பட்டு ‘முறையே சடங்குகளுடன் செய்தவை’ (Solemnization) என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவான சட்டங்களில் காணப்படும் சொல்லாகும். எங்களது தனியார் சட்டத்தில் இச்சொல் இணைக்கப்பட்டுள்ளது. நிக்காஹ் செரமனி என்ற சொல் ஏன் நீக்கப்பட்டது. அதற்கான தேவை என்ன?
அத்தோடு தலாக், பஸஹ் என்ற சொற்பிரயோகமும் எமது சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. இது அடையாளப்படுத்தப்பட்ட சர்வதேச மொழியாகும். பலநூற்றாண்டு காலமாக எமது தனியார் சட்டத்தில் இருந்து வந்த இச்சொற்பிரயோகம் ஏன் நீக்கப்பட்டுள்ளது? இதன் மூலம் சமூகம் என்ன நன்மை அடையப்போகிறது? இது கண்டனத்துக்குரியதாகும். முஸ்லிம் குடும்ப அமைப்பை சீர்குலைக்கக்கூடியதாகும் என்றார்.
திருமணப் பதிவில் தனது சம்மதத்தை தெரிவித்து பெண் கையொப்பமிடலாம். ஆனால் ‘வொலி’யின் கையொப்பம் விருப்பத்துக்குரியதாக மாத்திரம் இருக்கக்கூடாது. ‘வொலி’யின் கையொப்பம் கட்டாயமானதாகும். ‘வொலி’ இல்லாமல் திருமணம் இல்லை என நபி (ஸல்) கூறியிருக்கிறார் ‘வொலி’ தேவையற்றது. என்ற சட்டத்திருத்தம் ஆபத்தானதாகும். இதில் ஒரு தந்தையை எதிரியாக காட்டக்கூடிய பின்புலம் காணப்படுகிறது. திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும். ஒரு திருமணம் பதிவு செய்யப்பட வில்லை என்பதற்காக வலிதற்றதாக்கிவிட முடியாது. அப்படி வலிதற்றதாக்கினால் அதனால் பாதிக்கப்படுவது பெண்ணும், பிள்ளைகளுமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை விதிக்கலாம். இது பதியப்படாத திருமணத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல, சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகும் என்றும் சட்டத்தரணி ஸரீனா தெரிவித்தார். – Vidivelli