(ஏ.ஆர்.ஏ.பரீல்)
64 பேர் கொண்ட இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழு கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித மக்கா நோக்கி பயணமாகியது. இக் குழுவினர் இலங்கையிலிருந்து 4 ஆம் திகதி காலை 10.05 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் பயணமாகினர்.
கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பயணித்த ஹஜ் யாத்திரிகர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு காலை 7.30 மணியளவில் விமான நிலையத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித்பின் ஹமூத் அல் கஹ்தானி, விசா பிரிவுக்கான பொறுப்பதிகாரி சாலிஹ் அப்துல்லாஹ் அல் பராஜி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்ராஹிம் அன்ஸார், உறுப்பினர்கள் இபாம் நப்கான், ஹனிபா இஸ்ஹாக், திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அலா அஹமட், ஹஜ் முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சவூதி அரேபியாவைச் சென்றடைந்த முதலாவது ஹஜ் குழுவினருக்கு சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவரும், ஜித்தாவிலிருக்கும் கொன்சியூலர் ஜெனரலும் மகத்தான வரவேற்பு வழங்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் இலங்கை விமான நிலைய அலுவலர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் பைஸல் குறிப்பிட்டார்.
கடந்த 4 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழு எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
தொடர்ந்து ஹஜ் யாத்திரிகர்கள் பயணமாகியுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களுடன் பயணமாகும் இறுதி விமானம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. யூஎல் 101 ஸ்ரீலங்கன் விமானத்தில் அன்றைய தினம் 100 யாத்திரிகர்கள் பயணிக்கவுள்ளனர்.
இவ்வருடம் ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்த மொத்தம் 3500 பேர் பயணிக்கவுள்ளனர்.- Vidivelli