(எம்.எப்.அய்னா)
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில் அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு பிரதிவாதிகள் தரப்பின் இணக்கம் மற்றும் உறுதிப்பாட்டை அடுத்து நீதிமன்றால் நீக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் இணைந்து, தாக்கல் செய்துள்ள கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரம் குறித்த சிவில் வழக்கு, கடந்த 2 ஆம் திகதி அத்தனகல்ல மாவட்ட நீதிபதி கேசர சமரதிவாஹர முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மனுவின் 3 மற்றும் நான்காம் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் சட்டத்தரணி இசுரு ஜயசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சட்டத்தரணி வரித்த ஜயவிக்ரம நீதிமன்றில் வழங்கிய உறுதிப்பாட்டு உள்ளிட்டவற்றை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த இன் ஜங்ஷன் தடை உத்தரவை தொடராமல் நீக்கியது.
முன்னதாக சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு கடந்த மாதம் பரிசீலிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, அத்தனகல்ல மாவட்ட நீதிபதி கேசர சமரதிவாஹர, பாதிப்பொன்றினை தடுப்பதற்காக வழங்க முடியுமான இடைக்கால தடை உத்தரவொன்றினை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் பிறப்பித்திருந்தார்.
இந்த இடைக்கால தடை உத்தரவு, ஏற்பட வல்ல பாதிப்பினை தடுப்பதற்காக வழங்கப்பட்ட உத்தரவுதான். தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றிடம் கோரப்பட்டுள்ள கோரிக்கைகளின்’ ஈ’ பிரிவின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அனுமதியளித்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதி கேசர சமரதிவாகரவின் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அதாவது, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி யாப்புக்கு முரணாக நியமனம் பெற்றுள்ள, நியமனம் பெற எதிர்ப்பார்த்துள்ள மற்றும் வேறு நபர்கள் கல்லூரிக்குள் நுழைவதை, கல்லூரியின் நிதி, வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதை , கல்லூரி நடவடிக்கைகளில் தலையீடு செய்வதை , கல்லூரியின் ஆவணங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என ஈ பிரிவூடாக கோரப்பட்டுள்ளது.
இதனைவிட அநீதியான முறையில் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள கல்லூரியின் அதிபரை மற்றும் ராலியா என்பவரை மீள பணியில் இணைக்க வேண்டும் என அப்பிரிவூடாக கோரப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட ரீதியான செயலாளர் என மனுவூடாக கூறப்பட்டுள்ள முதலாவது முறைப்பாட்டாளர் அக்கடமைகளை முன்னெடுக்க ஆவன செய்யப்படல் வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விட, கல்லூரி யாப்புக்கு முரணாக நியமனம் பெற்றுள்ளதாக கூறப்படும் தற்போதைய முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் ( பிரதிவாதிகள்) உறுப்பினர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதியாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்களால் கோரப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் பிரகாரம், சட்ட ரீதியான செயலர் என கூறும் நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதியான பொருளாலர் எனக் கூறப்படும் அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்கல்லூரியில் கல்வி பயிலும் இரு மாணவியரின் பெற்றோர்களான பிர்தெளவுஸ் மொஹம்மட் புஹாரி , மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்லூரியின் பழைய மாணவியர் சங்க தலைவி சுல்பிகார் ஜுனைட் மற்றும் செயலாளர் ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகியோரே மனுதாரர்களாவர்.
வழக்கில் பிரதிவாதிகளாக மொஹம்மட் டில்ஷாத் பாசில், அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் கடந்த 2 ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு வந்த போது, 3,4 ஆம் பிரதிவாதிகள் மன்றில் ஆஜரான நிலையில், அவர்களின் சார்பில் சட்டத்தரணி வரித்த ஜயவிக்ரம முன்னிலையானார்.
அதன்படி, மனுதாரர்கள் சார்பில் விடயங்களை முன் வைத்த அவர், இந்த வழக்கு குறித்த நீதிமன்ற அதிகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பி முதலில் வாதங்களை முன் வைத்தார்.
எவ்வாறாயினும் மனுதாரர்கள் தற்போதைய முகாமைத்துவ சபை ( பிரதிவாதிகள்) உறுப்பினர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதியாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்டம் என வர்ணிக்கும், பொதுச் சபைக் கூட்டத்தை, இந்த சிவில் வழக்கின் தீர்மானம் ஒன்று எட்டப்படும் வரையில் நடாத்தப் போவதில்லை என நீதிமன்றுக்கு உறுதியளித்தார்.
எவ்வாறாயினும் 2 ஆம் திகதி நீதிமன்றில் மனுதாரர்களுக்காக ஆஜராகிய சட்டத்தரணி அரவிந்து மனதுங்க நீதிமன்ற அதிகாரம் தொடர்பில் முன் வைக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு பதிலளித்தது, பொதுச் சபை கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந் நிலையிலேயே பிரதிவாதிகளின் சட்டத்தரணி ஜயவிக்ரம, வழக்கின் தீர்மானம் எட்டப்படும் வரையில் பொதுச் சபைக் கூட்டத்தை நடாத்துவதில்லை என உறுதியளிப்பதாக நீதிமன்றுக்கு அறிவித்தார்.
இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி கேசர சமரதிவாஹர, சிவில் சட்டக் கோவையின் 667 ஆம் அத்தியாயம் பிரகாரம் பொதுக் கூட்டத்தை நடாத்துவதில்லை என்ற பிரதிவாதிகளின் உத்தரவாதத்தையும் இரு தரப்பினராலும் முன் வைக்கப்பட்ட விடயங்களையும் ஆராய்ந்து இடைக்கால தடை உத்தரவை நீடிக்காது நீக்குவதாக அறிவித்தார். அத்துடன் மனுவின் கோரிக்கைகளை நேரடியாக பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி, வழக்கை ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நீதிபதி ஒத்திவைத்தார்.-Vidivelli