எஸ்.என்.எம்.சுஹைல்
“அரசாங்கம் கொண்டுவர எத்தனிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது சட்டமாக்கப்பட்டு நாளை மீண்டும் ஓர் இனவாத அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் பிரதான பாதிப்பு சிறுபான்மைக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்படலாம்” எனும் எச்சரிக்கை பதிவே வை.எல்.எஸ்.ஹமீட் தனது முகநூலில் இறுதியாக பகிர்ந்திருந்த பதிவாகும்.
வை.எல்.எஸ்.ஹமீட் என்பவர் இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இலைமறை காயாக இருந்த பெரும் ஆளுமை என்று சொல்வது பிழையாகாது. கடந்த புதன்கிழமை மாலை 6 மணியிருக்கும். மறுநாள் வெளியாகும் ‘விடிவெள்ளி’ வார இதழின் செய்தியொன்றை உறுதி செய்துகொள்வதற்காக அவருக்கு எடுத்த அழைப்புக்கு பதில் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆசிரியரிடம் “அவருக்கு அழைப்பெடுத்தேன். இப்போது தொழுகைக்கு சென்றிருப்பார். மீண்டும் அவரே எனக்கு அழைப்பெடுப்பார்” என்று கூறிவிட்டு அடுத்தடுத்த வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தேன். இருப்பினும் வை.எல்.எஸ்.இன் அழைப்பு கிடைக்காமையால், அடுத்த வாரம் (இந்த வாரம்) குறித்த செய்தியை விரிவாக பிரசுரிக்கலாம் என்று ஆசிரியரிடம் கூறிச் சென்றேன். மறுநாள் காலை அலுவலகத்துக்குள் நுழையும் போது, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வை.எல்.எஸ்.இன் மரணச் செய்தியை கூறினார். ஒரு நிமிடம் ஆடிப்போனேன்.
என்னைப்போல் பலருக்கு வை.எல்.எஸ்.ஹமீடின் மரணச் செய்தி பேரிடியாகவே அமைந்திருந்தது. அந்த அளவுக்கு சினேகத்துடனும் கனிவாகவும் எம்முடன் பழகியவர் அவர்.
யார் இந்த வை.எல்.எஸ்.ஹமீட்?
மர்ஹூம்களான யூனுஸ் லெப்பே, ஆசியா உம்மா தம்பதிக்கு சிரேஷ்ட புதல்வராக 1962 நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கல்முனையில் பிறந்தார் வை.எல்.எஸ்.ஹமீட். அவருடன் பிறந்த உடன்பிறப்புகள் ஒன்பது பேர். 1988 ஆம் ஆண்டு தந்தையின் மரணத்திற்கு பிறகு மூத்த சகோதரனாக நீண்ட காலம் குடும்பத்தை வழிநடத்த தாயாருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவில் கல்விகற்ற இவர், இடைநிலை, உயர்தர கல்வியை கல்முனை உவெஸ்வி கல்லூரியில் பயின்றார். அத்தோடு, சட்டக் கல்வியை பயின்று சட்டத்தரணியானதுடன், கடந்த சில வருடங்களுக்கு முன்னர், கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை முதுமானி பட்டத்தை பெற்றார். பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் PhD கற்கையை தொடர்ந்துக்கொண்டிருந்தார். அவர் தொடர்ச்சியாக மரணம் வரை கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார்.
இன்ஷா ஹமீதுடன் திருமண பந்தத்தில் இணைந்த அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். கணக்கியல் துறையில் ஒருவரும், சட்டத்துறையில் ஒருவரும் பொறியியல் துறையில் ஒருவரும் கற்றுத் தேர்ந்துள்ளனர்.
அரசியல் பிரவேசம்
88, 89 காலப்பகுதியில் அரசியலில் ஆர்வம் காட்டிய வை.எல்.எஸ்.ஹமீட் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக உறுப்பினர்களில் பிரதானமான ஒருவராக இருந்தார். அத்தோடு, மு.கா. ஸ்தாபகத்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் அம்பாரை மாவட்ட அலுவலகத்தின் பிரதான நிருவாகியாக இருந்து அவரின் அரசியல் மற்றும் நடவடிக்கைகளை செயற்படுத்தினார். அத்தோடு, கல்முனையில் இருந்த அஷ்ரபின் அலுவலகத்தின் பிரதான கட்டுப்பாட்டாளராக இருந்து பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்ததை மு.கா.வின் முன்னாளர் செயலாளர் எம்.ரி. ஹசனலி உறுதிப்படுத்தினார்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸின் உதவிச் செயலாளராக பதவி வகித்த வை.எல்.எஸ். 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) எனும் கட்சியை ஸ்தாபிப்பதில் பிரதானியாக செயற்பட்டார். அன்றுமுதல், மரணிக்கும் வரை அவரே அக்கட்சியின் செயலாளராகவும் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அவரை கட்சி செயலாளர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சட்ட ரீதியாக கட்சிமீதான அதிகாரங்களை வை.எல்.எஸ். ஹமீதே பெற்றிருந்தார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஆசனத்தை வெல்லமுடியும் என்ற நம்பிக்கையில் வை.எல்.எஸ்.ஹமீட் கடந்த பொதுத் தேர்தலின்போது தனித்து களமிறங்கி போட்டியிட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அத்தோடு, குறித்த தேர்தலில் அவர் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
சட்ட மேதையாக
சட்டத்தரணியான வை.எல்.எஸ். சட்டத்துறை சாந்த விடயங்களில் மிகத் தெளிவான விளக்கமுடையவராக இருந்தார். அரசியலமைப்பு முதல் முஸ்லிம் தனியார் சட்டம் வரை அனைத்து விடயங்களிலும் பூரண அறிவைக்கொண்டிருந்தார். கடந்த காலங்களில் அரசியல் யாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டபோது அவற்றிற்கு மிகக் காத்திரமான முறையில் பதிலடி கொடுக்கக் கூடியவராகவும் இருந்தார். விடிவெள்ளி தினசரி பத்திரிகையாக வெளியானபோது சட்டம் தொடர்பான விளக்கத்தை தொடராக வழங்கிவந்தார். அத்தோடு, ஏனைய பத்திரிகைகள் மூலமாகவும் சட்ட ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தெளிவூட்டல்களையும் தொடர்ச்சியாக வழங்கினார்.
இதற்கப்பால், முகநூல் ஊடாக தொடர்ச்சியாக சட்டம் தொடர்பான விளக்கங்களையும் அரசியல் கொள்கை மற்றும் நெருக்கடிகளின்போது சரியான வழிகாட்டல்களையும் வழங்கி வந்தார். இதன்மூலம் அடுத்த சந்ததியினருக்கு மிகவும் பிரயோசனமான காத்திரமான கருத்துகளை கடத்துவதற்கு வழிவகுத்தார் என்று சொன்னாலும் மிகையாகாது.
சட்ட நுணுக்கங்களை மிகவும் கற்றறிந்த அவர் அரசியல் ரீதியிலான நெருக்கடிகளை சந்தித்தபோது முறையான கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தார்.
நீதியின் பக்கம்
அத்தோடு, தான் அங்கத்துவம் வகித்த அரசியல் கட்சியோடு மட்டும் நின்று பிடிவாதமாக இருக்காது அரசியல் பொருளாதார நெருக்கடிகளின்போது முஸ்லிம் சமூகம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் மற்றும் அரசியல் போக்குகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் பேசியிருந்தார்.
கட்சியிலிருந்து திட்டமிட்டு ஓரங்கட்டிய சந்தர்ப்பங்களில் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் தனித்துநின்று போராடி வெற்றிபெற்றிருந்தார்.
தற்போதைய அரசியல் ரீதியிலான நெருக்கடியான நிலையில் வை.எல்.எஸ்.ஹமீட் என்றதொரு ஆளுமையின் இழப்பானது பேரிழப்பு என்றுதான் சொல் வேண்டும்.
ஊழலற்ற, ஊழலுக்கு துணைபோகாத, நேர்மையான ஓர் அரசியல்வாதியாக, சிறந்த நிர்வாகியாக, சட்ட மேதையாக நம் மத்தியில் வாழ்ந்து வை எல்.எஸ்.ஹமீட் எம்மை விட்டும் பிரிந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வை.எல்.எஸ்.ஹமீட், வியாழக்கிழமை (மே.25) அதிகாலை உயிரிழந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்தமை அவர் சம்பாதித்த உறவுகளுக்கு சான்றாக அமைந்திருந்தது.
அன்னாரின் நற்கருமங்களை இறைவன் பொருந்திக்கொள்வதுடன் ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை அருள்வானாக.-Vidivelli