சட்டமாஅதிபர் திணைக்களத்தால் ஹிஜாஸ் மீது சாட்சியங்கள் இட்டுக்கட்டப்பட்டன
அரசாங்கத்தின் மீது சபையில் குற்றச்சாட்டினார் ரவூப் ஹக்கீம்
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சாட்சியங்களை இட்டுக்கட்டியதாக பராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சபையில் குற்றம் சுமத்தினார்.
அத்தோடு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹிஜாஸ், அஹ்னாப் உள்ளிட்டோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் ஒருவரை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் இவ்வாறு தீர்மானம் கொண்டு வருவது இதுவே முதற்தடவையாகும். சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களின் குறைகளை கண்டுபிடிப்பது அவர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சியாகும். நிறைவேற்றுத்துறைக்கு எதிராக அந்தக் ஆணைக்குழுக்கள் செயற்படும் போது, இவ்வாறான செயன்முறையை செய்கின்றனர். நிறைவேற்றுத்துறையின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவே இது மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 20 மாதங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதேவேளை கவிஞர் அஹ்னாப் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்தும் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டம் தொடர்பில் ஜெனிவாவிலும் பேசப்படுகின்றது.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கில் மூன்று பேரை சீஐடியினர் சாட்சியங்களாக கைது செய்து அவர்களை அச்சுறுத்தினார்கள். இதன்போது ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியங்களை இட்டுக்கட்டினார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்தின் ஆலோசகராக இருக்கின்றது. இந்த திணைக்களம் சீஐடியின் சில காரணங்களுக்காக சாட்சியங்களை இட்டுக்கட்டி இப்படி மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும். அதனால் நீதிமன்றத்தில் வழக்குகள் முடியாமல் இருக்கின்றன. சாட்சியங்கள் இட்டுக்கட்டப்படுகின்றன. இதனை சரியான இடங்களில் பேச வேண்டும் என்றார்.- Vidivelli