தலைகுனிவை ஏற்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்

0 476

புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் டுபா­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் இலங்­கைக்கு பெருந் தொகை தங்­கத்தைக் கொண்டு வந்த நிலையில் கைது செய்­யப்­பட்ட விவ­காரம் சமூகத்திற்கு பெரும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அவ­ருக்கு வாக்­க­ளித்து பாரா­ளு­மன்றம் அனுப்பிய புத்­தளம் மாவட்ட மக்கள் மாத்­தி­ர­மன்றி முழு இலங்கை முஸ்­லிம்­களும் இந்த சம்­ப­வத்­தினால் மிகுந்த விச­ன­ம­டைந்­துள்­ளனர். அது­மாத்­தி­ர­மன்றி பாரா­ளு­மன்­றத்தின் கெள­ர­வத்­திற்கும் மதிப்­பிற்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மா­கவும் இது பார்க்­கப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தனக்­குள்ள விசேட சலு­கை­களைப் பயன்­ப­டுத்தி பிர­மு­கர்­க­ளுக்­கான விமான நிலைய சிறப்பு முனை­யத்­தி­னூ­டாக இந்தக் கடத்தல் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. 1978 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு குறித்த வழி­யூ­டாக கடத்­தலில் ஈடு­பட்ட முதல் சம்­பவம் இது­வாகும்.

புத்­தளம் மக்கள் நீண்ட கால­மாக தமக்­கென குரல் கொடுக்­கவும் சேவை­யாற்­றவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இல்­லையே என்ற ஆதங்­கத்தில் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வகுக்­கப்­பட்ட வியூ­கத்தின் ஊடாக இவரை தெரிவு செய்து சபைக்கு அனுப்­பினர். எனினும் பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பிய மிகக் குறைந்த காலப் பகு­திக்­குள்­ளேயே ஏன் இவரைத் தெரிவு செய்தோம் என மக்கள் சிந்­திக்கும் வகை­யி­லேயே இவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன. குறிப்­பாக 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து கோத்­தா­பய ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஆட்­சிக்கு முட்டுக் கொடுத்­த­துடன் கொவிட் காலத்தில் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்ட போது அதனை கை கட்டி வேடிக்கை பார்த்த வர­லாற்றுத் துரோ­கத்­திற்கும் துணை­போனார். அது மாத்­தி­ர­மன்றி புத்­தளம் மாவட்ட மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஆளு­மையை அவர் கொண்­டி­ருந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

இப் பின்­ன­ணி­யில்தான் இப்­போது அவர் இவ்­வா­றா­ன­தொரு சட்­ட­வி­ரோத செயலில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்ட நிலையில் 7.5 மில்­லியன் ரூபா அப­ராதம் செலுத்தி வெளியில் வந்­துள்ளார். அது மாத்­தி­ர­மன்றி நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு எதி­ரான வாக்­கெ­டுப்பில் பங்­கேற்று வாக்­க­ளித்­துள்ளார். இதன்­போது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக இவர் வாக்­க­ளித்த போதிலும் தான் கைது செய்­யப்­பட்ட போது தன்னைக் காப்­பாற்ற ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தலை­யி­ட­வில்லை என்­ப­தா­லேயே இவ்­வாறு எதிர்த்து வாக்­க­ளித்த­தாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் வைத்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் குறிப்­பிட்­டுள்ளார். ஆக தான் முன்­னெ­டுத்த தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி கடத்­த­லுக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்­ப­தா­லேயே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­துள்ளார். கடந்த காலங்­களில் மக்­களின் அபி­லா­சை­களைப் புறந்­தள்ளி முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்ட கோத்­தா­பய தலை­மை­யி­லான இன­வாத அர­சுக்குத் துணை­போன அலி சப்ரி ரஹீம் இன்று தனக்கு உத­வ­வில்லை என்­ப­தற்­காக அர­சாங்­கத்தை எதிர்க்கத் துணிந்­துள்ளார். இது அவர் மக்­களின் நல­னுக்­கா­க­வன்றி, தனது சுய­ந­லத்­துக்­கா­கவும் தனது வியா­பார நல­னுக்­கா­க­வுமே அர­சி­ய­லுக்கு வந்து இந்தப் பத­வியைப் பயன்­ப­டுத்­து­கிறார் என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­கி­றது. அந்த வகையில் இவ­ருக்கு எதிர்­வரும் தேர்­தல்­களில் தகுந்த பாடம் கற்­பிக்க வேண்­டி­யது புத்­தளம் மாவட்ட வாக்­கா­ளர்­களின் கட­மை­யாகும்.

தமக்­கு­ரிய விசேட சலு­கை­களைப் பயன்­ப­டுத்தி இவ்­வா­றான சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களில் அர­சி­யல்­வா­திகள் ஈடு­ப­டு­வது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. இவ்­வா­றான அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களில் மேலும் பல பாரா­ளு­மன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை சுங்கத் துறையினர் நன்கறிவார்கள். அந்த வகையில் இவ்வாறான கடத்தல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அவர்களும் சாதாரண மக்கள் போன்று சகல விதமான சோதனைகள் மற்றும் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் கூடுதல் சலுகைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்கள் சகல தரப்பிலிருந்தும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.