எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலிஓயா
கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றில் மகாவலி கங்கையை அண்டிய ஆற்றங்கரை முஸ்லிம் குடியிருப்புக்களுக்கு தனிச்சிறப்புமிக்க வரலாறுண்டு. இதில் உலப்பனை, கம்பளை, எல்பிடிய, கலுகமுவ, கெட்டம்பே முதலானவை ஆற்றங்கரை முஸ்லிம் குடியிருப்புக்களின் வரிசையில் அடங்குகின்றன.
பழைய எல்பிடிய குடியிருப்பு
வெலிகல்ல, எல்பிடிய முஸ்லிம் குடியிருப்பு வரலாற்று சிறப்புமிக்க பானபொக்க குடும்பத்தினரின் வளவை அண்டிய மகாவலியுடன் ஒட்டிய இயற்கை எழில்மிக்க பிரதேசமாகும். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி மகாவலி கங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் இக்குடியிருப்பு பெரும் சேதத்திற்குள்ளாகி அழிவடைந்தது.
இதனால் எல்பிடிய முஸ்லிம் குடியிருப்பில் வசித்த குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறி கெலிஓயா, நியுஎல்பிடிய பகுதியில் குடியேறின. வெள்ளத்தினால் அழிவடைந்த எல்பிடிய முஸ்லிம் குடியிருப்பு பெரு வெள்ளத்தின் பின்பு பழைய எல்பிடிய என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று.
இப்பழைய எல்பிடிய குடியிருப்பில் 1990 களின் ஆரம்பத்தில் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வந்து மீளகுடியமர்ந்தனர். இதனால் எல்பிடிய முஸ்லிம் குடியிருப்பு மீண்டும் எல்பிடிய கிராமமாக எழுச்சி பெற்றது. இக்கிராமத்திற்கு பழைமைமிக்க தர்ஹா பள்ளிவாசலும் அழகு சேர்த்தது.
இப்பகுதி முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்களாகவும் கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, கண்டி முதலான நகரங்களில் சிறு வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களாகவும் வர்த்தக நிலையங்களில் வேலை செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இதனால் இம்மக்களின் பொருளாதார நிலை மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இக்கிராமத்திற்கு செல்வதற்கு இரண்டு பிரதான பாதைகள் காணப்படுகின்றன. ஒன்று கம்பளை – பேராதனை பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இருந்து செல்லும் 2 கிலோ மீற்றர் தூரமான பாதை. மற்றையது கெலிஓயா நகரில் கலுகமுவ ஊடாக செல்லும் பாதை. இன்னுமொரு ஒற்றையடிப் பாதை பொல்கஹஅங்கயில் இருந்து காட்டுப் பகுதியினூடாக செல்லும் பாதையாகும்.
இப்பாதைகள் யாவும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த பாதைகளாகும். இப்பாதைகளில் கடந்த காலங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இவை போதைப்பொருள் பாவனையாளர்களின் நடமாட்டம் கொண்ட பாதைகளாக காணப்படுவதால் இரவு நேரங்களில் மட்டுமன்றி பகல்காலங்கலும் தனியாக பயணிப்பதில் ஆபத்துமிக்க பாதைகளாகக் காணப்படுவதாக பிரதேசவாசிகள் விடிவெள்ளிக்கு தெரிவித்தனர்.
பாத்திமா முனவ்வரா
பாத்திமா முனவ்வரா (22 வயது) மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவராவார். இவரின் குடும்பம் உடுநுவர – மீவலதெனிய பகுதியில் வசித்து, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறியுள்ளது.
பாத்திமா முனவ்வரா சிங்கள மொழிமூலம் கண்டி லும்பிணி மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இவர் சிங்கள மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இவரின் தந்தை முச்சக்கரவண்டிச் சாரதியாவார். இவரின் சகோதரர்கள் வாகனம் திருத்துதல் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த முனவ்வராவுக்கு தாதியர் பணி மீது அதீத ஆர்வம் காணப்பட்டது. அவரின் தாயார் நீண்டகாலமாக பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும் இதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். இவர் தாதியர் பயிற்சியை பெற்றுக்கொண்டதுடன் வீட்டில் தனது அன்புத் தாயாரை கவனித்து வந்தார்.
இதற்கிடையில் தாதியர் சேவையுடன் தொடர்புடைய பார்மஸியில் பணியாற்றும் வாய்ப்பொன்று கிடைத்தமையை முனவ்வரா விரும்பி ஏற்றுக் கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவர் கெலிஓயாவில் அமைந்துள்ள குறித்த பார்மஸியில் பணியாற்றி வந்தார்.
எதிர்பாராத அதிர்ச்சி
களுத்துறையில் 16 வயது மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் எற்படுத்தியிருந்த தருணம். இச்சம்பவம் நடைபெற்று சில தினங்கள் மட்டும் கடந்து விட்ட நிலையில், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகல்ல, எல்பிடிய கிராமத்தில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தான் பணிபுரியும் பார்மஸிக்கு வேலைக்குச் செல்வதாக அன்புத் தாயாரிடம் விடைபெற்றுச் சென்ற பாத்திமா முனவ்வரா பார்மஸியை சென்றடையவில்லை. இது தான் முனவ்வராவின் சோக கதையின் ஆரம்பம். இது நாட்டுக்கு மற்றுமொரு அதிர்ச்சியையும் சோகத்தையும் கொண்டு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
12 ஆம் திகதி சம்பவ தினம்
சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிகாலை 4 மணி முதல் கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இம்மழையினால் கம்பளை, வெலிகல்ல, எல்பிடிய, கலுகமுவ, உடுநுவர உட்பட பல பகுதிகளிலும் இருள் சூழ்ந்த காலநிலை நிலவிக் கொண்டிருந்தது.
அன்றைய தினமும் வழமை போல் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்பிய முனவ்வரா தொழுது விட்டு குளிரையும் பொருட்படுத்தாமல் தனது தாயாருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தார். அதன் பின்னர் சோறு மற்றும் கீரைக் கறியை சமைத்து எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்படத் தயாராகிறார்.
மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால் குடையொன்றை பிடித்துக் கொண்டு காலை 8.15 அளவில் தன்னை நிழலாய்த் தொடரும் ஆபத்தை அறியாத நிலையில் வெலிகல்ல நகரம் வரை செல்லும் சுமார் 2 கிலோமீற்றா தூரப் பாதையில் முனவ்வரா நடக்க ஆரம்பிக்கின்றாள். மழைக்கு மத்தியில் வேகமாக முனவ்வராவின் நடை தொடர்கின்றது.
இக்காட்சி முனவ்வராவின் வீட்டில் இருந்து சுமர் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் சீ.சீ.டி.வி கெமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆனால் அதிர்ச்சிக்குரிய விடயம், பள்ளிவாசலுக்கு அடுத்ததாக சுமார் 600 மீற்றர் தொலைவில் வீடொன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராவில் முனவ்வரா நடந்து செல்லும் காட்சி பதிவாகாமல் முன்னவ்வரா மறைந்து போகின்றாள்.
கெலிஓயா நகரில் அமைந்துள்ள முனவ்வரா பணிபுரியும் பார்மஸியின் உரிமையாளர் ஆர்.எம். சியாத் மடவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். அவர் வழமையாக ஞாயிற்றுக்கிழமைகளில் தாமதமாகி பார்மஸிக்கு வருவதால் முன்ைனய தினம் பார்மஸி சாவியை முனவ்வராவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வது வழக்கம். சம்பவம் இடம்பெற்ற தினமும் பார்மஸியின் சாவி முனவ்வராவிடம் கைவசம் இருந்தது.
சம்பவ தினம் முனவ்வரா காலை 11 மணி வரை பார்மஸியை வந்து சேரவில்லை என்ற தகவல் பார்மஸியின் உரிமையாளரால் முனவ்வராவின் சகோதரன் எம்.ஜே.எம். இம்ரானுக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்த இம்ரான் உடனடியாக தனது தாயாருடன் தொடர்பு கொண்டுள்ளார். எனினும், அவரின் தாயாருக்கு அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை.
இந்நிலையில், முனவ்வராவின் தொலைபேசிக்கு அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவரின் தொலைபேசி செயலிழந்து காணப்பட்டதால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் முனவ்வரா பற்றிய எதுவித தகவல்களையும் சம்பவ தினம் பெற்றுக்கொள்ள முடியவில்லை. முனவ்வராவுக்கு என்ன நடந்தது? முனவ்வரா எங்கே போனாள்? என்பதெல்லாம் சம்பவ தினம் முதல் விடைதெரியாத கேள்விகளாக மாறின.
முனவ்வரா மீது எதுவித குற்றச்சாட்டுக்களும் சந்தேகமும் இருந்ததில்லை. அமைதியும் ஒழுக்கமும் கொண்டவர். பிறரைப் பற்றி கதைப்பவரல்லர். எப்போதும் தனது கருமங்களில் கருத்தாய் இருப்பவர் என்று முனவ்வராவைப் பற்றி பிரதேச மக்கள் மத்தியில் மிகுந்த மிக நல்லபிப்பிராயமே காணப்பட்டது.
பொலிஸ் முறைப்பாடு
இந்நிலையில் முனவ்வராவின் தந்தை முஹம்மத் ஜின்னாஹ் மற்றும் சகோதரர் இம்ரான் ஆகியோர் அன்றைய தினம் இரவு கம்பளை பொலிஸ் நிலையத்தில் முனவ்வரா காணாமல் போனமை பற்றி முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.
முனவ்வரா காணாமல் போன விடயம் மறுநாள் திங்கட்கிழமையாகியும் ஊரில் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. முனவ்வராவின் வீட்டாரே தேடிக் கொண்டிருந்தனர். இவ்வாறு இரு நாட்கள் கழியும் போது சமூக ஊடகங்களில் முனவ்வரா காணாமல் போன விடயம் வெளிவரத் தொடங்கியது. இதனைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர ஆரம்பித்தனர்.
முனவ்வராவைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. எல்பிடிய முதல் வெலிகல்ல வரையிலான பாதையில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராக்கள் கண்காணிக்கப்பட்டன.
கம்பளை பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்தனர். சீ.சீ.டி.வி கெமராக்கள் பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்குள்ளாகின. முன்னவ்வரா பற்றிய எதுவித தடயங்களும் கிடைக்காத நிலையில் எல்பிடிய ஜும்ஆ பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கெமராவில் முனவ்வரா நடந்து செல்லும் போது அவரைத் தொடர்ந்து செல்லும் இளைஞனின் பக்கம் பொலிஸாரின் சந்தேகம் திரும்பியது.
சந்தேக நபர் பொலிஸ் வலையில்
இந்த இளைஞன் முனவ்வரா வசிக்கும் பகுதியில் வசித்து வருபவராவார். ஆடுகள் வளர்க்கும் இச்சந்தேக நபர் அவற்றுக்கு புற்கள் வெட்டுவதற்காக அப்பகுதியில் தினமும் சுற்றித் திரிபவர். இவர் பற்றிய மேலும் பல தகவல்களைத் திரட்டிய பொலிஸார் அவரைப் பின்தொடர்கின்றனர். அவரின் நடவடிக்கைகள் பொலிஸாரின் கவனிப்புக்குட்பட்டு வந்தன.
இவரின் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் முயற்சித்தனர். இந்நிலையில் சந்தேக நபர் நழுவிச் செல்ல முற்பட்ட நிலையில் இவர் மீது பொலிஸாரின் சந்தேகம் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. எனவே, நிலைமையை புரிந்து கொண்ட கம்பளை பொலிஸார் 24 வயதுடைய இச்சந்தேக நபரை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கம்பளைவெல பகுதியில் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரனைகளின் போது முனவ்வராவின் படுகொலை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. சந்தேக நபர் முனவ்வராவை படுகொலை செய்து காட்டுப்பகுதியில் குழி தோண்டி புதைத்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
முனவ்வராவுக்கு நடந்தது என்ன?
சம்பவ தினம் தான் ஆடுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த போது முனவ்வரா பாதை வழியே நடந்து வருவதைக் கண்டதாகவும் தான் அவரின் அருகில் சென்று கையைப்பிடித்து அழைத்த போது, கோபமடைந்த முனவ்வரா “உன்னை வாப்பாவிடம் சொல்லிக் கொடுப்பதாக” ஏசி கத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவர் ஆவேசப்பட்ட நிலையில், இச்சம்பவத்தை எப்படியும் முனவ்வரா வாப்பாவிடம் கூறிவிடுவார் என்று அஞ்சிய சந்தேக நபர் முனவ்வராவின் வாயை தனது கைகளால் இறுகப் பொத்தியவாறு காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
அங்கு, முனவ்வராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சடலத்தை புதைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரனைகளில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் முனவ்வராவை புதைத்த இடத்தை காட்டுப்பகுதியில் தென்னந்தோப்புக்குள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இச்சம்பவத்தை எல்பிடிய மக்களால் நம்ப முடியாமல் போனது. இதனைக் கேள்விப்பட்ட பிரதேச சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். எல்பிடிய பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை மக்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் அதிகரித்தது. இக்கொலைச் சம்பவம் எல்பிடிய பகுதி முஸ்லிம்களை தலைகுனிய வைத்த சம்பவமாக மாறியது. இந்நிலையில் ஆவேசமடைந்த பிரதேசவாசிகள் சந்தேக நபரின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு படையெடுத்தமையைக் காண முடிந்தது.
சடலம் தோண்டி எடுப்பு
படுகொலை செய்யப்பட்ட முனவ்வராவின் சடலம் மறுநாள் சனிக்கிழமை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கம்பளை நீதிமன்ற பதில் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, கிராம சேவகர், குடும்பத்தினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
இதில் முனவ்வராவின் சடலத்துடன் சேர்த்து புதைக்கப்பட்டிருந்த அவரின் கைப்பை, பகலுணவு பார்சல் என்பன மீட்கப்பட்டன. மேலும், முனவ்வராவின் தண்ணீர் போத்தல், கைக்கடிகாரம், மண்வெட்டித்தலை, புடவை கிழித்தெறியப்பட்ட உடைந்த கம்பிகளைக் கொண்ட குடை என்பனவும் காட்டுப்பகுதியில் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இப்பொருட்களை முனவ்வராவின் தந்தை ஜின்னா அடையாளம் காட்டினார்.
முனவ்வராவின் சடலம் மீட்கப்பட்ட போது அப்பகுதியில் பெருந்திரளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் திரண்டிருந்தனர். சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உறவினர்கள், பாடசாலை நண்பிகள், அயலார் என்று பலரும் சத்தமிட்டு கதறி அழுததைக் காண முடிந்தது. அவரின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் விசாரனைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சந்தேக நபர் வெளியிட்ட ஓடியோ
முனவ்வரா படுகொலை சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரினால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஒடியோ பதிவொன்று சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. அதில் பின்வருமாறு சந்தேக நபர் பதிவிட்டிருந்தார்.
‘‘ஏன்ட பெயர்தான் அஹமட்.
நான் பழைய எல்பிடிய ஸ்கூல்லதான் படிச்சேன்.
நான் பொறந்தது 1998 இல… ஏன்ட ஐடின்டி நம்பர் வந்து…
நான் பழைய எல்பிட்டி அல் – அமான் ஸ்கூல்லதான் படிச்சேன்.
அப்படி படிச்சிக் கொண்டிருக்கும் போது நல்லாதான் இருந்தேன்
கடைசியில என்னாவிச்சின்னா ஏன்ட வாழ்க்கையில போதை பரவி..
கஞ்சா குடிக்கிறதுக்கு பழவி
கடைசில என்ன செஞ்சேன்னா…. நான் ஒரு கொலைகாரனாகிட்டேன்
எல்லாம் இந்த கஞ்சாவால … அந்த குழியால தான் ரோட்டுல போற புள்ளயொண்டுகிட்ட சல்லி கேட்டு போனேன்
சல்லி கேட்டு போன பொறவு….. புள்ளயோட வாய்த்தர்க்கமாகி அதோட
அந்த புள்ள எனக்கு கைய ஓங்க
நானும் கைய ஓங்க
கழுத்தை புடிச்சி நெசிக்கினேன்
நெசிக்கின ஒடனே அந்த புள்ள ெமளத்தாகிடுச்சி
இப்ப ஏண்ட வாழ்க்க முடிஞ்சி…’’என்று தொடர்கின்றது.
ஓடியோவில் சந்தேகம்
சந்தேக நபர் வெளியிட்ட ஓடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்நிலையில் இந்த ஓடியோ மக்களை திசை திருப்புவதற்காகவும் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் பதிவிடப்பட்டுள்ளதாக முனவ்வராவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
“எனது தங்கை அநியாயமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையை செய்தவர் எங்களுக்குள் இருந்துள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் பாதுகாத்துள்ளனர். நாம் தங்கையை தேடிய போது அவர்கள் எம்மை பிழையான வழியில் வழி நடாத்த முற்பட்டுள்ளனர் என்று தெரிகின்றது. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தங்கை திரும்பி வரப்போவதில்லை. ஆனால் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது தடுக்கப்படுவதற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்று முனவ்வராவின் சகோதரன் இம்ரான் தெரிவித்தார்.
முனவ்வரா பணியாற்றிய
பார்மஸி உரிமையாளர்
முனவ்வரா கெலிஓயா நகரில் அமைந்துள்ள பிரபல பார்மஸியொன்றில் பணியாற்றி வந்தார். இதனால், கெலிஓயா நகரில் பலரும் அவரை நன்கறிந்திருந்தனர்.
“முனவ்வரா மிகவும் அமைதியானவர். அவர் மார்க்கப்பற்று நிரம்பிய யுவதியாவார். அவர் யாருடனும் நேருக்கு நேர் நின்று கதைக்க மாட்டார். அவர் நேரத்திற்குத் தொழுகைக்கு செல்வார். தொழுவதற்குத் தேவையான காலுறைகளையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வருவார். சம்பவ தினமும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார் என்பதை அவரின் சடலத்துடன் மீட்கப்பட்ட பொருட்களை நோக்கும் போது அறிந்து கொள்ள முடிகின்றது” என்று பார்மஸி உரிமையாளர் ஆர்.எம். சியாத் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைப்பு
முனவ்வராவின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாஸா நல்லடக்கம் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் எல்பிடிய தர்ஹா பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.
ஜனாஸாவில் பெருந்திரளான மூவின மக்களும் கலந்து கொண்டனர். ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உடுநுவர பிரதேச முன்னாள் காதி நீதவான் மௌலவி இஸட்.ஏ.எம். ஹனிபா சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றினார். அத்துடன், மௌலவி அமீர் ஹம்ஸா (ரப்பானி) பள்ளிவாசல் இமாம்களான மௌலவி மூசின் மற்றும் மௌலவி ஆதில் ஆகியோர் மார்க்க கடமைகளை நிறைவேற்றி வைத்தனர்.
முனவ்வரா வாழ்க்கையின் மேடு, பள்ளங்களில் பயணித்துக் கொண்டிருந்தவர். இம்மேடு பள்ளங்கள் மீதான அவரின் பயணம் முனவ்வராவை பிழையான முடிவுகளின் பக்கம் இட்டுச் செல்லவில்லை. காரணம் முனவ்வரா சிறு வயது முதல் வாழ்வியல் மற்றும் சமூக யதார்த்தங்கள் மீது ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்வின் சிக்கல்களில் இருந்து வெளிவர துடித்தார். இதற்காக கடும் முயற்சி எடுத்தார். ஆனால், அவரை சமூகம் கண்டு கொள்ளவில்லை என்பது மிகக் கவலைக்குரியது. இது போன்ற எத்தனையோ முனவ்வராக்கள் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக நிறுவனங்களின் பார்வை இவர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.
உயர்ந்த மினாராக்களை கட்டி அழகு பார்த்துக் கொண்டிருப்பவர்களும் வேறுபல துறைகளில் கோடிக்கணக்கில் கொட்டிக் கொண்டிருப்பவர்களும் முனவ்வராக்கள் பக்கம் சிந்திக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என்ற உண்மையை சொல்லியாக வேண்டும்.
எமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிக்கும் முனவ்வராக்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த உலமாக்கள், சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள் முன்வர வேண்டும். சமூகப் பிரச்சினைகளை வாரத்திற்கொரு முறை நடைபெறும் உணர்ச்சியூட்டும் குத்பா பிரசங்கங்களால் மட்டும் தீர்த்து விட முடியாது. சமூகப் பிரச்சினைகள் மக்கள் மயப்படுத்தப்படுவது போல் தீர்வுகளும் இனங்காணப்பட்டு செயலுருவாக்கம் பெற வேண்டும்.
முனவ்வராவின் சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இது வெறுமனே ஒரு படுகொலைச் சம்பவமாக மாத்திரம் மாறிவிடக்கூடாது. இதில் இருந்து சமூகத்தில் திருப்புமுனைகள் ஏற்பட வேண்டும்.
இச்சம்பவத்தின் சந்தேக நபர் தனது ஓடியோவில் வெளியிட்ட போதைப்பொருள் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்து செயற்படாத வரை முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினைகளில் இருந்து ஒருபோதும் வெளிவர போவதில்லை.
முஸ்லிம் சமூகம் எம்மில் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை புனருத்தாரணம் செய்வதற்கான ஒரு நிலையத்தையாவது நிறுவிக் கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளது என்ற உண்மையை உணர்வோமாக.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உரிய திட்டமிடல்களை முன்னெடுத்து இப்புனருத்தாரண நிலையங்களை முஸ்லிம் பிரதேசங்களில் விரைவில் உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.- Vidivelli