(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல தசாப்த காலமாக ஆங்கிலேயர் ஆட்சி முதல் இயங்கி வந்த மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் சிறைச்சாலை நிர்வாகத்தால் மூடப்பட்டு 4 வருட காலமாகியும் பள்ளிவாசலை இடமாற்றிக்கொள்ள மாற்றுக்காணி வழங்கப்படாமையினால் இப்பகுதி மக்கள் சமய கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கிறது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையிட்டும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என சிறைச்சாலை வளாகத்தினுள் இயங்கி வந்த பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவிக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலின் பின்பு பாதுகாப்பு காரணம் கருதி சிறைச்சாலை நிர்வாகம் பல தசாப்த காலமாக இயங்கி வந்த பள்ளிவாசலை கையேற்று, முஸ்லிம்களுக்கு தடை செய்து, அதனை சிறைச்சாலை ஊழியர்களின் ஓய்வு அறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதுடன் அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ இதற்கான காணியொன்றினை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இணங்கி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரை இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பணித்திருந்தும் இதில் தொடர்ந்தும் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பள்ளிவாசல் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலை வளாக மையவாடிக்கு அருகில் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு காணியொன்று இனங்காணப்பட்டுள்ளது. இக்காணியை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒதுக்கித் தந்தால் அவ்விடத்தில் தங்களது செலவில் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதாகவும் சுற்றுமதில் அமைத்துக் கொள்வதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சாரின் பதவிக் காலத்தின்போது திணைக்களத்தில் அதிகாரிகள் களவிஜயத்தினை மேற்கொண்டு காணியை இனங்கண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்பு சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் மூடப்பட்டதால் இப்பகுதியில் வாழும் மலே சமூகத்தினர் உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஜும்ஆ தொழுகை உட்பட ஐவேளைத் தொழுகைகளுக்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மஹரயிலிருந்து 6 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள மாபோல பள்ளிவாசல், 4 ½ கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள எண்டேரமுள்ள பள்ளிவாசல், 5 ½ கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள அக்பர் டவுண் பள்ளிவாசல் என்பனவற்றுக்கு இவர்கள் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமை காரணமாக வயோதிபர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் பள்ளிவாசலுக்குச் செல்லமுடியாதுள்ளனர். மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நீதியமைச்சரிடம் பாராளுமன்றத்தில் வினவியபோது முஸ்லிம்களுக்கு அப்பகுதியில் தொழுவதற்கு பள்ளிவாசலொன்றினை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணியொன்றினை இனங்காணுமாறு ஜனாதிபதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரை அறிவுறுத்தியுள்ளதாக ள்ளதாக அவர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli