ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கையை மாத்திரமல்ல சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 2023.04.21 ஆம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
மூன்று தசாப்தகாலமாக நாட்டில் நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப்போர் சூழ்நிலையில் கூட இவ்வாறான ஒரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவில்லை.
கிறிஸ்தவ மக்களின் புனிதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது இந்தப் பயங்கரவாதத்தாக்குதல் மேற் கொள்ளப்பட்டமை இலங்கை வரலாற்றில் அழியாத கறையாகப் படிந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு முஸ்லிம் சமூகம் பலவகையிலும் இலக்கு வைக்கப்பட்டது. முஸ்லிம்களின் பள்ளிகள், வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமின் தலைமையிலான 10 தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டது. மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மூன்று ஹோட்டல்கள் தாக்குதலுக்கு இலக்காகின. இத்தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 272 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானார்கள்.
உயிர்த்த ஞாயிறு மதவாழிபாடுகளில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள், வயோதிபர், சிறுவர்கள் பெண்கள் எனப் பலர் பலியானார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்தார். எதிர்கட்சித்தலைவராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். தாக்குதல் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதியளித்ததையடுத்தே ஜனாதிபதியாக அதிகப்படியான பெரும்பான்மை வாக்குகளால் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரி பால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ அத்தோடு தற்போது பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கங்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் இத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யாரென இதுவரை கண்டறியப்படவில்லை. கத்தோலிக்க ஆலயம் மற்றும் பிரஜைகள் சிலர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர். விசாரணை அறிக்கைகளின்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். அவர்கள் தமது கடமையினை உதாசீனம் செய்தமை, கிடைக்கப்பெற்ற உளவுத்தகவல்களின் அடிப்படையில் செயற்படாமை போன்ற குற்றங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாய் நஷ்ட ஈடாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டது. என்றாலும் நீதிமன்றம் இத்தாக்குதலின் சூத்திரதாரி யாரென இனங்காணவில்லை. எனவே சூத்திரதாரியை இனங்காண வேண்டிய நிலைமை தொடர்கிறது.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்
அரசாங்கத்தின் புனன் விசாரணைகள் இதுவரைகாலம் திருப்திகரமானதாக அமையவில்லை. அவ்விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவும் எதிர்காலத்தில் அவர் தனது பதவியிலிருந்து வெளியேறியதும் நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என பேராயர் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி எப்போதும் பதவி வகிக்க முடியாது. ஆனால் கத்தோலிக்க ஆலயம் தொடர்ந்தும் இருக்கும். தான் பதவியில் இல்லாவிட்டாலும் தனக்குப்பின் பதவியில் இருக்கும் பேராயர் வழக்கு தொடருவார் எனவும் எச்சரித்துள்ளார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பேராயர் மிகுந்த கவலையுடன் தனது ஆதங்கத்தை வெளியிட்டார். கொழும்பு உயிர்த்த ஞாயிறு மதவழிபாட்டில் அவர் பின்வருமாறு கூறினார். ‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எத்தனை வருடங்கள். நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை. என்ன நடந்தது. பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது எவருக்கும் தெரியாது. நாங்கள் நீதிக்காகவும் உண்மைக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறோம். பயங்கரவாத தடுப்புச்சட்டம் 1979 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இச்சட்டம் அமுலில் இருக்கும்போதே அச்சட்டம் பாதுகாப்பு தரப்பினரால் முறையாகக் கையாளப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின்படி இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் தமது கடமையில் தவறியிருக்கிறார்கள். இந்தத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனைத்தடுப்பதற்கு தவறியிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் அவர்களில் ஒருவரை அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை நகைப்புக்குரியதாகும் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.
சாரா புலஸ்தினி விவகாரம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா புலஸ்தினி விவகாரம் இன்று விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்தும் மர்மமாக இருந்து வந்த நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக பொலிஸ் திணைக்களம் கடந்த மாத இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த 3 ஆவது தடவையாகவும் டி.என்.ஏ. பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அது குறித்த பரிசோதனைகளில் இறப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாராவின் தாயாரான ராஜரத்தினம் கவிதாவிடமிருந்து பெற்றுக்கொண்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் 2019.04.26 ஆம் திகதி சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தின் வீடொன்றுக்குள் நடந்த வெடிப்பினையடுத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் பலவற்றின் டி.என்.ஏ. மாதிரிகள் தாயொருவருக்கும் பிள்ளைக்கும் இடையே காணப்படும் உயிரியல் தொடர்பினை உறுதிப்படுத்தும் சான்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சாரா சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தாரா?என்பதை அறிவதற்காக ஏற்கனவே நடாத்தப்பட்ட இரண்டு டி.என்.ஏ. பரிசோதனைகளில் வெடிப்புச் சம்பவத்தில் சாரா உயிரிழக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. என்றாலும் மூன்றாவது தடவையாகவும் பொலிஸாரால் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட்டு அப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. சாரா குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
கட்டுவப்பிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவியான சாரா புலஸ்தினி இத்தாக்குதல் தொடர்பான பல விடயங்களை அறிந்தவராவார். இவர் கண்டுபிடிக்கப்பட்டால் இத்தாக்குதலின் பின்னணியையும்,சூத்திரதாரிகளையும் இலகுவில் இனங்காண முடியும். இதன்பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகளை இனங்காணாமல் இருப்பதற்காகவும், தற்கொலை குண்டுத்தாக்குதலில் இருந்து சாரா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவுமே பொலிஸ் திணைக்களத்தினால் இந்த அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான முயற்சிகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன. தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைப் பாதுகாப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இனங்காணப்படவேண்டும். சமூகத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.
அரசியல் சூழ்ச்சியா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஓர் அரசியல் சூழ்ச்சி என பொதுவான கருத்து நிலவுகிறது. இவ்விடத்தில் முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்த கூற்றொன்று தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய இரகசிய சதித் திட்டமொன்று இருந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் சட்ட பாதுகாப்பின் கீழ், சட்டத்தின் பிடியில் அகப்படாது தப்பித்துக் கொண்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் இதுபோன்ற தாக்குதல்கள் இடம்பெறமாட்டாதென்பது என்ன நிச்சயம். சிலர் அதிகாரத்துக்கு வருவதற்கு இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளலாம் அல்லவா? அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இன மத பேதங்களை மறந்து நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒன்றிணைய வேண்டும்.
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும், கிடைக்கப்பெற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத்தவறியமை அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளமை இத்தாக்குதல் தொடர்பான விடயங்களில் ஒரு திருப்பு முனையாகும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய பொலிஸ் நிர்வாக பிரிவின் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபருமான நிலந்த ஜயவர்தன, தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ் என்போர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவையும், சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
முஸ்லிம் சமூகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு முஸ்லிம் சமூகமே சூத்திரதாரியாக்கப்பட்டது. முஸ்லிம் சமூகமே இலக்குவைக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ். தீவிரவாதம் பற்றி எதுவுமே அறியாதவர்கள்.
ஆனால் தாக்குதல்தாரிகளை இயக்கியவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான சதி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், அதிகாரத்தின் பலத்தின் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பித்து சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக கிறிஸ்தவ சமூகம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடாத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை பேராயர் வழி நடாத்திக் கொண்டிருக்கிறார்.
இதேவேளை முஸ்லிம் சமூகத்தின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முழு முஸ்லிம் சமூகத்தையும் இலக்கு வைப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களும் தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக குரல்கொடுக்க வேண்டும். உண்மையான சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாலே சமூகத்தின் மீது படிந்துள்ள கறை அகல்வதற்கு வழிபிறக்கும்.- Vidivelli