முஸ்லிம் சமூகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையினை முழுமையாக நோக்க வேண்டும்
மொரோக்கோ மன்னர் முன்னிலையில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார் ரிஸ்வி முப்தி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“இன்றைய முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வுடைய இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை எல்லா திசையில் இருந்தும் நோக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறது” என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
மொரோக்கோ அரச அரண்மனையில் மொரோக்கோ மன்னர் ஆறாம் முஹம்மத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ‘அல்குர்ஆன்’ சுன்னாவின் ஒளியில் நாம் எப்படி ஒரு முன் மாதிரி சமூகமாக அமைவது? என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘நபிகள் நாயகம் அவர்களை ஒரு தலைவராக, ஒரு நீதிபதியாக, ஒரு சீர்திருத்தவாதியாக, ஒரு படைத்தளபதியாக எப்படியெல்லாம் நோக்க முடியுமோ அப்படி எல்லாம் அவர்களை நோக்கி மனித சமூகத்தின் மத்தியில் ஆளுமைகளை உருவாக்கவேண்டும். உருவாக்குகின்றபோது அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.
இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் எல்லை மீறிய சிந்தனைப்போக்கு பிறரை வஞ்சிக்கும் நடவடிக்கை இஸ்லாமிய ஷரீஅத்துடைய வழிகாட்டலுக்கு மாற்றமான அத்துமீறிய தீவிரவாத சிந்தனை போன்றவற்றை நாம் காணுகிறோம். இது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இஸ்லாமிய சமூகத்தலைவர்கள், பொறுப்புதாரிகள், சன்மார்க்க அறிஞர்கள், இந்நிலையிலிருந்து மீட்டு முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்த முன்வரவேண்டும்.
இவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே முன்மாதிரிமிக்க சகவாழ்வைக் கட்டியெழுப்பத்தக்க ஒரு சமூகத்தை நாம் இப்பூமியில் காண முடியும். நற்பிரஜைகளை உருவாக்க முடியும். நபித்தோழர்கள் அவர்களுடைய வாழ்வில் மிகச்சிறந்த வழிமுறைகளை எடுத்து நடந்ததன் காரணமாகவே முன்மாதிரி சமூகமாக இன்று நாங்கள் அவர்களைப் பார்க்க முடிகிறது.
தீனுடைய விடயங்களில் கருத்து வேற்றுமையுள்ள விடயங்களில் விட்டுக்கொடுப்போடு நபித்தோழர்கள் அவர்களுக்குப் பின்வந்தவர்கள் நடந்து கொண்டார்கள். கருத்து வேற்றுமையான விவகாரங்கள் ஒருபோதும் அவர்களுக்கு மத்தியில் பிளவையும், சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. பிறரது அபிப்பிராயங்களை மதித்து ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டிய சிறந்த பண்பினை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உருவாக்கிய சில முன்மாதிரியான ஆளுமைகளை நான் உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
உத்தமர் உமர், சல்மான் அல் பாரிஸி, பிலால் அல்ஹபசி, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அனஸ் இப்னு மாலிக், ஆயிஷா (ரலி) போன்றவர்களை எடுத்துக்காட்ட நான் ஆசைப்படுகிறேன்.
இவர்கள் அல்லாஹ்வுடைய இறுதித்தூதருடைய பாசறையில் வளர்ந்த முன்மாதிரி மிக்க புனித ஆளுமைகள் என்று குறிப்பிட்டால் அது பிழையாகாது என்றார்.
இம்மாநாட்டில் இந்தியா, பிரித்தானியா, இந்தோனேசியா, பிரான்ஸ், நைஜீரியா,கானா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வருகைதந்த உலமாக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பிரமுகர்களும், அறிஞர்களும் மாநாட்டில் பங்கு கொண்டிருந்தனர்.- Vidivelli