(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொழும்பு–மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமாக அபகரித்து மாடிக் கட்டடத் தொகுதியொன்றினை நிர்மாணித்துள்ளமைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட வழக்கு விசாரணையை கொழும்பு மாவட்ட நீதிவான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
குறிப்பிட்ட வழக்கு டி.பி.ஜயசிங்கவுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்களின் சமய உரிமைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த அதன் தலைவர் அஸ்லம் ஒத்மான் உட்பட 13 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மாளிகாவத்தை மையவாடிக்குச் சொந்தமான 13 பர்ச்சஸ் காணி டி.பி.ஜயசிங்கவினால் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு இந்த மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. டி.பி.ஜயசிங்க அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷவின் ஆதரவாளராவார். 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு பல சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
மாளிகாவத்தை மையவாடி காணியை நில அளவை செய்துள்ள நில அளவையாளர் ராசப்பாவின் வாக்கு மூலத்தை நீதிமன்றம் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. நீதிமன்றமே நிலஅளவை மேற்கொள்வதற்கு இவரை நியமித்தது. அவர் நில அளவை அறிக்கையையும் நீதிமன்றுக்கு ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார்.
இவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் இரு தடவைகள் அறிவித்தல் அனுப்பியும் அவர் சுகயீனம் காரணமாக நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனையடுத்து புதிதாக நில அளவையாளர் ஒருவரை நியமிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரின் மூலம் நில அளவை அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆஜரானார்.- Vidivelli