ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டின் அரபுக்கல்லூரிகளில் 92 வருட காலம் பழைமை வாய்ந்த மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி திட்டமிட்டு மூடுவிழாவை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றமை சமூகத்தை கண்கலங்கச் செய்துள்ளது.
கபூர் ஹாஜியாரினால் வக்பு செய்யப்பட்டு பலதசாப்தங்கள் சீராக இயங்கி வந்த கபூரிய்யாவுக்கா இன்று இந்த நிலைமை என்று வியக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இன்று அல்லாஹ்வை மறந்து, அல்லாஹ்வுக்குப் பயப்படாமல் கபூரிய்யா வக்பு சொத்தல்ல– அது குடும்ப சொத்து, குடும்ப நிதியம் (Family Trust ) என்று வாதிடுவது அல்லாஹ்வை மறந்துவிட்ட செயலாகும்.
கல்லூரியில் க.பொ.த (சாதாரண தரம்) க.பொ.த. (உயர்தரம்) படிக்கும் மாணவர்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு கல்லூரியை மூடிவிடுவதற்கு மேற்கொள்ளும் முயற்சி எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். கபூரிய்யா ஒரு தனியார் நிதியம் அல்ல. பொது நிதியம் (Public Trust ) என்று வக்பு சபை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் திட்டமிட்டு கபூரிய்யாவை ஒரு குடும்பச் ெசாத்தாக மாற்றிக்கொள்வதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பு
கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பில் மாவட்ட நீதிமன்றின் விசாரணையின் கீழ் இருந்த வழக்கில் மாவட்ட நீதி மன்றம் கடந்த 15 ஆம் திகதி தீர்ப்பொன்றினை வழங்கியிருந்தது. கபூரிய்யா அரபுக்கல்லூரியின் அதிபர் பதவி விலகி கல்லூரியிலிருந்தும் வெளியேற வேண்டுமென்பதே அந்த உத்தரவாகும்.
கபூரிய்யாவில் அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது புதிய அதிபர் ஒருவர் கல்லூரியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களினால் நியமிக்கப்பட்டார். அப்புதிய அதிபர் பதவியில் இணைந்து ஒரு தினத்திலே வெளியேறிவிட்டார். இந்நிலையில் பழைய அதிபரே பதவிவகித்தார். இந்த அதிபருக்கே கல்லூரியிலிருந்தும் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நீதிமன்றின் உத்தரவுக்குப் பின்பு அதிபர் பதவி விலகிச் சென்று விட்டார். ஆனால் மறுதினம் 16 ஆம் திகதி, 17 ஆம் திகதிகளில் சிலர் கல்லூரிக்கு வந்து மாணவர்களும் கல்லூரியிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி மாணவர்களை வெளியேற்றியுள்ளார்கள். மாணவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து பயத்தினால் மாணவர்கள் வெளியேறி தங்களது வீடுகளுக்கு இரவோடிரவாகச் சென்றுள்ளனர். தற்போது 52 மாணவர்களில் 12 பேரே கல்லூரியில் எஞ்சியுள்ளனர்.
ஜனாதிபதி உடனடியாகத் தலையிடவேண்டும்
கபூரிய்யா அரபுக்கல்லூரியை திட்டமிட்டு மூடிவிடுவதற்கு சூழ்ச்சி நடைபெறுகிறது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. எனவே ஜனாதிபதியும், அரசாங்கமும் இது விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என மேல்மாகாண முன்னாள் ஆளுனர் அசாத்சாலி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு– நிப்போன் ஹோட்டலில் கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பில் ஊடக மாநாடொன்று இடம் பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
“கபூரிய்யாவையும், அதன் வளங்களையும் காப்பாற்றுவோம்”என்ற தலைப்பிலே குறிப்பிட்ட ஊடக மாநாடு இடம் பெற்றது.
ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கபூரிய்யா அரபுக்கல்லூரிக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்காக கபூர் ஹாஜியாரினால் வக்பு செய்யப்பட்ட கொழும்பு 14 இல் உள்ள முன்னாள் சுலைமான் வைத்தியசாலை இயங்கிவந்த காணியும் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 744 மில்லியன் ரூபாய்களுக்கு அக்காணியை ஆசியன் ஜெம் மார்கட்டிங் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டது.
நோலிமிட் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை அல்லாஹ்வுக்குப் பயந்து அதன் உரிமையாளரால் ரத்துச் செய்து கொள்ளப்பட்டது. பின்பு 1160 மில்லியன் ரூபாய்களுக்கு வேறு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஒரே நாளில் மூன்று மாற்றங்கள் இடம்பெற்றன.
கபூரிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் வக்பு சொத்துக்கள் தொடர்பில் நீதிவான் நீதிமன்று, மாவட்ட நீதிமன்றம் ,மேல் நீதிமன்றம்,மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் வக்பு ட்ரிபியுனல் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன.
கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ஆலோசனைச் சபையொன்றினை நிறுவ வேண்டும். கபூரிய்யா விவகாரத்தில் பொலிஸாரும் பக்கச்சார்பாகவே நடந்து கொள்கின்றனர். இவ்வாறான பொலிஸார் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கபூரிய்யா அரபுக்கல்லூரி தொடர்பில் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்கள் தொடர்பில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி சி.ஐ.டிக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் சி.ஐ.டியினர் இதுவரை அது தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்கவில்லை. வக்பு சொத்தான கபூரிய்யா அரபுக்கல்லூரியும் அதன் காணியும் உடமைகளும் கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிடக்கூடாது.
கபூரிய்யா பழைய மாணவர் சங்கம்
கபூரிய்யா அரபுக்கல்லூரியின் வளாகம் 17 ½ ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்கு விடுதி, நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு என்பவற்றை நிறுவுவதற்கு பழைய மாணவர் சங்கமே உதவி செய்திருக்கிறது. சுயதொழில் பயிற்சிக்கூடமும் பழைய மாணவர் சங்கத்தினாலே நிறுவப்பட்டது. ஆனால் இன்று கல்லூரியின் நூலகம் மூடப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளாகத்தில் 300 தென்னங் கன்றுகளை நட்டியுள்ளது. ஆனால் கல்லூரி நம்பிக்கைப் பொறுப்பாளர்சபை பழைய மாணவர்கள் கபூரிய்யாவின் பெயரில் நிதி சேகரிப்பதாக பொய்குற்றம் சாட்டி வருகிறார்கள் என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாத் தெரிவித்துள்ளார்.
கல்லூரியின் தேவைகளுக்காக, மாணவர்களின் தேவைகளுக்காக நிதி சேகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கல்லூரிக்குள் இயங்கி வந்த பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆவணங்கள் திருடப்பட்டிருக்கின்றன.. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் எம்.பிக்கள் தலையிட வேண்டும்
கபூரிய்யா அரபுக்கல்லூரியில் தற்போது சுமார் 12 மாணவர்கள் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு பொலிஸ் மற்றும் கல்லூரி பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கல்லூரியை விட்டு வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
‘தற்போது கல்லூரியில் ஆசிரியர்கள் இல்லை. பணியாளர்கள் இல்லை. சமையற்காரர் இல்லை. எங்களது உணவை எம்மால் இயலுமானவரை நாங்களே சமைத்து உண்ணுகிறோம். வருடக்கணக்கில் கல்வி கற்ற எம்மால் வெறுமனே வெளியேற முடியாது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும். சமூகம் எமது பிரச்சினையில் உடன் தலையிட வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மெளனம் களைய வேண்டும்’’ என தற்போது கல்லூரியில் தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் தினமும் வந்து எம்மை வெளியேறிச் செல்லுமாறு கட்டளையிடுகிறார்கள். நாங்கள் மன அழுத்தங்களுடனே இருக்கிறோம். எம்மால் கல்வியை கைவிட முடியாது என்கிறார்கள் அந்த மாணவர்கள்.
வக்பு சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை
நாட்டின் பல பகுதிகளிலும் சவால்களுக்குள்ளாகியிருக்கும் வக்பு சொத்துக்கள் மற்றும் கபூரிய்யா அரபுக் கல்லுாரியை நம்பிக்கையாளர் சபையிடமிருந்து பாதுகாத்தல் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கொள்ளுப்பிட்டியில் ஒன்று கூடி கலந்துரையாடின.
கலந்துரையாடலுக்கு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமை வகித்தார். நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய சூரா கவுன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, வை.எம்.எம்.ஏ., அல் முஸ்லிமாத், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், முஸ்லிம் மீடியா போரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மேல்மாகாண முன்னாள் ஆளுனர் அசாத்சாலி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
கபூரிய்யா அரபுக்கல்லூரி, கள்எலிய முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரி, மாகொல அநாதை இல்லம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வக்பு சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கலந்துரையாடலின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்தோடு வக்பு சொத்துக்களைப் பாதுகாப்பது தொடர்பில் நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்குவதற்கும் உதவிகள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கபூரிய்யா அரபுக்கல்லூரி விவகாரம் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையின் கீழ் உள்ளதால் அது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை
கல்லூரியை விட்டு வெளியேறிச் சென்று வீடுகளில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் கல்லூரிக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் பழைய மாணவர் சங்கம் ஈடுபட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு அதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளது என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
வக்பு சொத்தான கபூரிய்யாவை சூழ்ச்சிக்காரர்களின் கரங்களிலிருந்தும் மீட்டெடுப்பதே எமது இலட்சியம் என பழைய மாணவர் சங்கம் தெரிவிக்கிறது.
பெற்றோர் நம்பிக்கை பொறுப்பாளர்களுடன் கலந்துரையாட முயற்சி
கடந்த திங்கட்கிழமை கபூரிய்யா அரபுக்கல்லூரி மாணவர்களின் பெற்றோர் கல்லூரிக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டு கல்லூரி நம்பிக்கை பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாட முற்பட்டனர் என்றாலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விஜயம் செய்து திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்து கோரிக்கை கடிதமொன்றினைக் கையளித்தனர். மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரியின் முகாமைத்துவசபை என தங்களைக் கூறிக்கொண்டு சிலர் கல்லூரியினுள் பிரவேசித்து கடந்த 16 ஆம் திகதிக்கு முன்பு கல்லூரியை விட்டு வெளியேறுமாறு மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமேலீட்டால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் ஆசிரியர்களும் கல்லூரியை விட்டும் வெளியேறியுள்ளனர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் பணிப்பாளரிடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எமது பிள்ளைகளை முன் அறிவித்தலின்றி வெளியேற்றியமைக்கான காரணம் என்ன? கடந்த பல வருடங்களாக கல்லூரியில் பயின்ற எமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு என்ன உத்தரவாதம்? வெளியேறாமல் கல்லூரியினுள் இருக்கும் எமது பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி, உணவு போன்றவற்றிற்கான பொறுப்பு யாருடையது? எமது பிள்ளைகளோடு தொடர்புபட்ட விடயங்களை கேட்டறிந்து கொள்வதற்கு நாம் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? நடைபெற்று முடிந்துள்ள மெளலவி மற்றும் இறுதியாண்டு பரீட்சைகளின் முடிவுகள் மற்றும் மெளலவி சான்றிதழ்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது எனும் வினாக்கள் பணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளன.
பெற்றோர்களாகிய நாம் பொறுப்புக்கூற வேண்டிய தங்களது திணைக்களத்தினூடாக இவற்றிற்கான தீர்வினை மிக அவசரமாக வேண்டி நிற்கிறோம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ரமழான் விடுமுறைக்கான அறிவித்தல் ஒன்றும் கல்லூரியில் ஒட்டப்பட்டுள்ளது. மார்ச் 16 ஆம் திகதி முதல் 2023 மே 9 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்தல் தெரிவிக்கிறது. இவ்வறிவித்தல் கடந்த 20 ஆம் திகதியே ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli