(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கபூரிய்யா அரபுக் கல்லூரியின் வக்பு சொத்தைப் பாதுகாப்பதற்கான அமைதிப்போராட்டமொன்று நேற்று கொழும்பு செத்தாம் வீதி கோட்டை பள்ளிவாசலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. கபூரிய்யாவைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உலமாக்கள், சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் என பெருந்திரளானோர் பங்கு கொண்டிருந்தனர். போராட்டத்தில் பெண்களும் பங்கு கொண்டிருந்தனர்.
“வக்பு சட்டத்தின் கீழ் வக்பு செய்யப்பட்ட சொத்தை வக்பு செய்தவரின் குடும்பத்தினர் இச்சொத்து எமக்குச் சொந்தமானது என ஒரு போதும் வாதிட முடியாது. இச்சொத்தை அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இது சட்டவிரோதமானது. ஒரு போதும் அனுமதிக்கப்படமுடியாது” என வக்பைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி எம்.புஸ்லி தெரிவித்தார்.
“மஹரகம கபூரிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தினுள் முஸ்லிம் மையவாடியொன்றும் அமைந்துள்ளது.இந்த மையவாடியிலே மஹரகம –ஹோமாகம வரையிலான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. எமது போராட்டத்தில் வெற்றியீட்டும் வரை நாம் ஓயமாட்டோம். இதுவே எமது இலக்கு” என்று அவர் மேலும் தெரிவித்தார்.